அதிகப் பார்வை

"பொதுநின்ற பொன்னன் கழலே தொழுமின்!" - கோமான் ஶ்ரீ பாலாஜி


அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே*

மது நின்ற தண் துழாய் மார்வன்* பொதுநின்ற

பொன்னன் கழலே தொழுமின்* முழு வினைகள்

முன்னம் கழலும், முடிந்து


பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியின் 88-வது பாசுரம், வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதி பெற ஒரு எளிய வழியைக் காட்டுகிறது.


"அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே - “இந்தச் செயல் நல்லதா? அந்தச் செயல் கெட்டதா?" என்று ஆராய்ந்து, சந்தேகப்பட்டு, குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.


"மது நின்ற தண் துழாய் மார்வன் - தேன் சிந்துகின்ற குளிர்ந்த துளசி மாலையை மார்பில் அணிந்திருக்கும் எம்பெருமான் (திருமால்).


"பொதுநின்ற பொன்னன் கழலே தொழுமின் - எல்லோருக்கும் பொதுவாக, எளிதாக அடையக்கூடிய, பொன்னிறமான அழகிய திருவடிகளைத் தொழுங்கள்.


"முழு வினைகள் முன்னம் கழலும், முடிந்து- நீங்கள் அவன் திருவடி தொழ நினைத்த உடனேயே, எல்லா பாவங்களும் முற்றிலுமாக அழிந்துவிடும்.


இப்பொழுது இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.


வாழ்க்கை என்பது லாபம்-நஷ்டம், சுகம்-துக்கம், நல்லது-கெட்டது என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட போராட்டமாகவே நம்மில் பலருக்கும் கழிகிறது. "நான் செய்வது சரியா? இது எனக்கு நன்மையைத் தருமா?" என்ற சந்தேகத்திலேயே நம் காலம் வீணாகிறது. இந்த மனப்போராட்டத்தை நீக்கி, முன்னம் செய்த கர்ம வினைகளை வேரறுக்க வழிகாட்டுகிறார் பேயாழ்வார்.


பாசுரத்தின் முதல் வரியிலேயே ஆழ்வார் ஒரு உளவியல் ரீதியான ஆலோசனையை வழங்குகிறார். அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே உலக விஷயங்களில் எது சிறந்தது, எது தாழ்ந்தது என்று பிரித்துப் பார்த்து விவாதித்துக் கொண்டே இருந்தால், நம் மனம் தெளிவடையாது. ஏனெனில், இன்று இன்பம் தருவது நாளை துன்பமாக மாறலாம். இத்தகைய நிலையற்றவைகளை ஆராய்வதை நிறுத்திவிட்டு, உறுதியான ஒரு பொருளைப் பற்றிக்கொள்ள ஆழ்வார் அறிவுறுத்துகிறார். பொருள் என்பது இங்கு 'பரம்பொருள்' ஆகிய எம்பெருமானைக் குறிக்கும்.


சரி, இப்படி ஆழ்வார்எது நல்லது? எது கெட்டது?’ என்று ஐயப்பட வேண்டாம் என்கிறார், நமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீர நாம் யாரை வணங்க வேண்டும்?


தேன் சொட்டச் சொட்ட, குளிர்ந்த மணமிக்க துளசி மாலையை அணிந்த திருமார்பை உடையவன் எம்பெருமான் நாராயணன். அந்தத் துளசி மாலை, உலகத்தில் உள்ள அனைவராலும் அடையப்பட வேண்டிய 'பரம்பொருள்' அவனே என்பதை பறைசாற்றுகிறது. அவனது குளிர்ந்த மார்பும், துளசி மணமும் நம்முடைய உலகத் தாபங்களை (துன்பங்களை) ஆற்றும் வல்லமை கொண்டவை. அவனே, மது நின்ற தண் துழாய் மார்வன்


அப்படிப்பட்ட எம்பெருமான் அனைவருக்கும் பொதுவா, அனைவரும் எட்டக்கூடியவனா என்ற கேள்விக்கும் ஆழ்வார் அருளுகிறார், பொதுநின்ற பொன்னன் கழலே தொழுமின்”.


எம்பெருமானுடைய திருவடிகள் பொதுநின்றவை. அதாவது, தேவர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை, நல்லவர் முதல் தீயவர் வரை (விபீஷணன் முதல் சிசுபாலன் வரை) யார் சரணடைந்தாலும் பாகுபாடின்றி அபயம் அளிப்பவை அந்தத் திருவடிகள். அந்தப் பொன் போன்ற 'விலைமதிப்பற்ற' மற்றும் 'அழகிய' பாதார விந்தங்களை வணங்குவதே நம் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.


கடைசியாக இப்படி எம்பெருமானின் பொன்னடிகளை சரணடைகிறோம் என்ன நடக்கும்? நாம் செய்த பாவங்கள், நம் முன் கர்ம வினைகள் அனைத்தும், நாம் எம்பெருமானை முழுமையாகத் தொழத் தொடங்குவதற்கு முன்பாகவே (முன்னம்) நம்மை விட்டு அகன்றுவிடும். எம்பெருமானை வணங்க வேண்டும் என்று நாம் மனதார நினைக்கும் அந்த ஒரு விநாடியே, நம்முடைய தீவினைகள் அதன் வீரியத்தை இழந்து அழிந்துவிடும். அவை தள்ளிப்போடப்படுவதில்லை, அந்த இடத்திலேயே முற்றுப்பெற்று (முடிந்து) நம்மை விட்டு விலகிவிடும். இதைத்தான் ஆழ்வார், முழு வினைகள் முன்னம் கழலும், முடிந்து என்று அருளுகிறார்.


இக்காலத்திற்கு இந்தப் பாசுரம் என்ன சொல்கிறது? 


எது நல்லது? எது கெட்டது?’ என்று தர்க்கம் செய்துகொண்டு காலத்தை கழிக்காமல், அனைவராலும் அடையக்கூடிய எளியவனான எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொள்வதே அறிவுடைமை. அப்படிச் சரணடைந்தால், நம்மைத் தொடரும் கர்ம வினைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும் என்பதே ஆழ்வார் காட்டும் எளிய சரணாகதி வழிமுறை.


பேயாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை