அதிகப் பார்வை

“விட்டு விடுங்கள்… விட்டே விடுங்கள்…” - கோமான் ஶ்ரீ பாலாஜி


வீடுமின் முற்றவும்* வீடு செய்து,* உம் உயிர்

வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே


நம்மாழ்வார் திருவாய்மொழியின் (1.2.1) இந்த அற்புதமான பாசுரம், மனித வாழ்வின் இறுதி நோக்கத்தை ஓர் எளிய பாசுரத்தில் வெளிப்படுத்துகிறது.


வீடுமின் முற்றவும் - 'நான்', 'எனது' என்கிற அகங்கார, மமகாரங்களையும், உலகியல் பற்றுகளையும் முழுமையாக விடுங்கள்.


வீடு செய்து - அப்படி முழுமையாகப் பற்றுகளை நீக்கி, மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.


உம் உயிர் - உங்களுடைய ஆத்மாவை.


வீடு உடையானிடை - மோட்சத்தை அளிப்பவனும், ஆத்மாவுக்கு உண்மையான உரிமையாளனுமான (உடையவன்) எம்பெருமானிடத்தில்.


வீடு செய்ம்மினே- சமர்ப்பணம் செய்யுங்கள் (சரண் அடையுங்கள்).


ஆழ்வார் இந்தப் பாசுரத்தைத் தொடங்கும்போதே "வீடுமின்" (விடுங்கள்) என்று கட்டளையிடுகிறார். எம்பெருமானைப் பற்றிச் சொல்வதற்கு முன்னரே ஏன் விடச் சொல்ல வேண்டும்? இதற்கு ஆச்சார்யர்கள் அழகான இரண்டு உதாரணங்களைக் கூறுகிறார்கள்.


ஒர் எதுவும் அறியாத குழந்தை கையில் விஷப்பாம்பைப் பிடித்துக் கொண்டிருந்தால், அதன் ஆபத்தை அக்குழந்தைக்கு விளக்கும் முன்பே "அதைப் போடு! முதலில் கீழே போடு!" என்று பதறுவோம்.


நம் அருகில் ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, உள்ளே உறங்குபவனிடம் "வெளியே வா!" என்று கூச்சலிட்டு அவனை முதலில் காப்பாற்றத் துடிப்போம்.


அதேபோல, சம்சாரமாகிய நெருப்பிலும், உலக ஆசை எனும் பாம்பிலும் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றவே, ஆழ்வார் முதலில் "விடுங்கள்" என்கிறார். மேலேச் சொன்ன இரண்டு உதாரணத்திலும் முதலில் செயல், அதாவதுபாம்பைப் போடு’, ‘வீட்டை விட்டு வெளியே வாஎன்று செயலில் இறங்கிய பின்னர் தான் காரணத்தை விளக்குகிறோம். ஆழ்வாரும் அதனால் தான் முதலில் “வீடுமின்என்கிறார்.


சரி விடுங்கள் என்று ஆழ்வார் சொல்கிறார் எதை விட வேண்டும். உலகில் நாம் சிலவற்றைப் பிடித்துக் கொண்டு சிலவற்றை விட்டு விடுகிறோம். ஆனால் ஆழ்வார் "முற்றவும்" என்கிறார். உலகப் பொருள்கள் மீதான ஆசை, பற்று - இவை அனைத்தையும் கொஞ்சமல்ல முழுமையாக, பாதி பாதியாக அல்ல; மொத்தமாக விடுங்கள் என்கிறார்.


அடுத்து வீடுசெய்துஎன்று அருளுகிறார் ஆழ்வார். ஒருவரின் இல்லத்தில் அசுத்தமான பொருட்கள் இருந்தால், அனைத்தையும் நீக்கிவிட்டுத் தான் புனிதப்படுத்துவோம். அதுபோல, இறைவனை மனதில் இருத்த 'நான்' (அகங்காரம்) மற்றும் 'எனது' (மமகார) என்ற எண்ணங்களை வேரோடு அறுக்க வேண்டும்.


சரி இதெல்லாம் செய்துவிட்டோம், இந்த ஆத்மா யாருடையது? நாம் யார்? நமக்கு உரியவர் யார்?  என்ற கேள்வி வருமல்லவா அதற்கு அடுத்த வரியிலேயே ஆழ்வார் பதிலளிக்கிறார், அது எம்பெருமானுக்குச் சொந்தமானது. நாம் அறியாமையினால் அதை "நம்முடையது" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடல், நம் உடல் அல்ல, உள்ளிருக்கும் நம் ஆத்மா என்பதை ஆழ்வார் தெளிவுபடுத்துகிறார். நித்யமான, அழியாத ஆத்மாவுக்கு நன்மை செய்யச் சொல்கிறார், அநித்யமான உடலுக்கு அல்ல. உடல் அழியக் கூடியது ஆத்மா அல்ல. ஆழ்வார் பாசுரத்தில் உம் உயிர் என்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தவில்லை நாம் உய்வதற்கு வழியைச் சொல்கிறார் உம்" என்று.


வீடு உடையான்என்பதற்கு 'மோட்ச உலகை (வீடு) உடையவன்' என்றும், 'உயிர் தங்குவதற்கு இடமாக இருப்பவன்' என்றும் பொருள் கொள்ளலாம். யாரவன்?, அவன்தான் 'வண்புகழ் நாரணன் என்று இத்திருமொழியின் பத்தாவது பாசுரத்தில் அருளியுள்ளார் ஆழ்வார்.


நமது உயிரை அதன் உண்மையான உரிமையாளனான ஶ்ரீமன் நாராயணனிடமே மீண்டும் ஒப்படைப்பதுதான் "வீடு செய்ம்மின்" (சமர்ப்பித்தல்) என்பதாகும்.


நாம் என்ன செய்கிறோம்? உலகப் பொருள்களை, பதவிகளை, பெயரை, புகழை நம்முடையதாக்க முயல்கிறோம். ஆனால் ஆழ்வார் கேட்கிறார், இவையெல்லாம் நிரந்தரமா? நீ யார்? உன் உடல் நாளை சாம்பலாகும்போது, உன் ஆத்மா எங்கே போகும்?


மிகச் சக்திவாய்ந்த வாக்கியம் இது. முதலில் ஆசை, பந்தங்களை விடு; பின்னர் உன்னை அவனிடம் விடு. முதல் விடுதல் துன்பத்திலிருந்து விடுதலை; இரண்டாவது விடுதல் எம்பெருமானுடைய பாதாரவிந்தத்தில் சரணடைதல்.


இதுவே இப்பாசுரம் சொல்லும் இன்றைய வாழ்க்கைக்கான செய்தி.


இந்த உபதேசம் ஆழ்வார், தனக்காக அல்ல - பிறர் நன்மைக்காக அருளியுள்ளார். ஆழ்வார் ஏற்கனவே எம்பெருமானை அனுபவித்துவிட்டார். ஆனால் சம்சார பந்தத்தில் தவிக்கும் நம்மைப் போன்றோரைப் பார்த்து இரங்குகிறார். "நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று தெரிந்தவன், பிறர் அநர்த்தம் கண்டால் 'ஐயோ!' என்று இரங்குவான்" என்று வியாக்யானம் சொல்கிறது.


நிலையற்ற உலக இன்பங்களை விடுவதுதான் உண்மையான வீடுபேறு (மோட்சம்). பற்றுகளை விடுவதும், இறைவனைப் பற்றுவதும் நன்றே. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், நம்முடைய ஆத்மா அவனுக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து, அவனிடம் "இனி நான் உன்னவன்" என்று சரணடைவது மட்டுமே. இதுவே இப்பாசுரம் காட்டும் எளிய தர்மம்.


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை