அதிகப் பார்வை

“மகிழ்ந்தது சிந்தை திருமாலே!” - கோமான் ஶ்ரீ பாலாஜி


மகிழ்ந்தது
சிந்தை, திருமாலே!* மற்றும்

மகிழ்ந்தது உன் பாதமே போற்றி* மகிழ்ந்தது

அழல் ஆழி சங்கம் அவை பாடி  ஆடும்*

தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து.


பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதியில் உள்ள 32-வது பாசுரமான "மகிழ்ந்தது சிந்தை திருமாலே" என்பது பக்தியின் முதிர்ந்த நிலையில் உள்ள ஒரு அடியார் அடையும் ஆனந்தத்தை உரைக்கிறது.


உலக விஷயங்களை விட்டுவிட்டு, எம்பெருமானே, உன்னைச் சிந்தித்த மாத்திரத்திலேயே என் மனம் ஆனந்தத்தில் மூழ்கியது. இனி வைகுண்டம் சென்றுதான் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற அவசியமில்லை; பரமபதத்தை அடைந்த பின்பு கிடைக்கும் பேரின்பம், இங்கேயே எம்பெருமானைச் சிந்தித்தவுடன் அனுபவமாக கிடைத்துவிட்டது என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் அருளுகிறார். இனி பாசுரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தைப் பார்ப்போம்,


உன் பாதமே- உன்னுடைய திருவடிகளையே. '' காரம் சேர்த்து பாதமே எனும்போது, உன்னைத் தவிர வேறு புகலிடம் எனக்கு இல்லை (அநந்யார்ஹம்) என்பதைக் காட்டுகிறது.


போற்றி- உனது திருவடிகளுக்கு மங்களாசாசனம் செய்து வாழ்த்துகிறேன் என்கிறார் ஆழ்வார்.


மகிழ்ந்தது- திருவடிகளைப் போற்றிப் பாடியதால் எனது வாக்கு மகிழ்ச்சி அடைந்தது.


அழல்- பகைவர்கள் மீது நெருப்பை உமிழ்கின்ற அல்லது சினம் கொள்கின்ற தன்மை.


ஆழி - திருவாழி எனப்படும் சுதர்சனச் சக்கரம்.


சங்கம்- ஸ்ரீபாஞ்சஜன்யம் எனப்படும் திருச்சங்கு.


அவை - சக்கரம், சங்கு மற்றும் மற்றுமுள்ள திவ்ய ஆயுதங்களையும் சேர்த்து.


"பாடி ஆடும்- அந்தத் திவ்ய ஆயுதங்களின் அழகையும் வீரத்தையும் பாடுவதும், அந்தப் பரவசத்தில் ஆடுவதும்.


தொழில்- இதுவே ஒரு ஜீவாத்மா செய்ய வேண்டிய உண்மையான கைங்கர்யம் அல்லது வியாபாரம்.


ஆகம்- என்னுடைய தேகம் அல்லது உடல். இன்னொரு அர்த்தமாக எனது அகம் அதாவது எனது மனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


சூழ்ந்து- வேறெந்த உலகியல் ஆசைகளிலும் சிதறாமல் இந்தப் பணியிலேயே முழுமையாகப் பொருந்தி.


துணிந்து- “இதுவே நமக்கு சாஸ்வதம்" என்ற உறுதியான தீர்மானத்துடன்.


மகிழ்ந்தது - இவ்வாறு எனது உடலும் களிக்கப் பெற்றது.


இனி, ஒவ்வொரு வரியாக பார்க்கலாம்.


மகிழ்ந்தது சிந்தை திருமாலே! மற்றும்- இங்கு ஆழ்வார் தனது மனதின் நிலையை, தனது சிந்தனையை பற்றி முதலில் கூறுகிறார். பொதுவாக நம்மைப் போன்றோரின் சிந்தனை உலக விஷயங்களில் ஈடுபட்டு இன்பம் காணும். ஆனால் ஆழ்வாரோ, "திருமாலே" என்று எம்பெருமானை சதா சர்வகாலமும் விளிப்பதன் மூலம், அவன் பிராட்டியுடன் இருக்கும் நிலையை நினைத்த மாத்திரத்திலேயே தனது மனம் மகிழ்கிறது என்கிறார். "மற்றும்" என்ற சொல், சிந்தைக்கு அடுத்ததாகப் பேசக்கூடிய 'வாக்கு' என்ற இந்திரியத்தைக் குறிக்கிறது.


மகிழ்ந்தது உன் பாதமே போற்றி- மனம் எதை நினைக்கிறதோ அதை வாக்கு சொல்லும். ஆழ்வாரின் வாக்கு எம்பெருமானின் திருவடிகளையே துதிக்கிறது. "பாதமே" என்பதில் உள்ள '' காரம், வேறு தெய்வங்களையோ அல்லது உலகப் புகழையோ நாடாமல், எம்பெருமானின் திருவடிகளையே தஞ்சமாகக் கொள்வதைக் குறிக்கும். இவ்வாறு போற்றிப் புகழ்வதாலேயே அந்த வாக்கும் மகிழ்ச்சி அடைந்ததாக ஆழ்வார் கூறுகிறார்.


மகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்- எம்பெருமானின் திருக்கைகளில் உள்ள சுதர்சனச் சக்கரமும் (ஆழி), பாஞ்சஜன்யமும் (சங்கம்) அடியார்களுக்குப் பாதுகாப்பைத் தருபவை. அந்தத் திருவாழி பகைவர்கள் மீது "அழல்" (நெருப்பு) உமிழும் தன்மை கொண்டது. அத்தகைய திவ்ய ஆயுதங்களின் சிறப்பைப் பாடுவதும், அந்த உணர்ச்சிப் பெருக்கில் ஆடுவதும் ஆழ்வாரின் உடலுக்குப் பேரின்பத்தைத் தருகிறது.


தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து- இந்த வரி ஆழ்வாரின் செயல்முறை பக்தியை விளக்குகிறது.


தொழில்: உலக மக்கள் பிழைப்பிற்காகப் பல்வேறு தொழில்களைச் செய்கிறார்கள். ஆனால் ஆழ்வாருக்கோ எம்பெருமானைப் பாடி ஆடுவதே "தொழில்".


ஆகம்: இது சரீரத்தைக் குறிக்கும். ஆத்மா அடையும் மகிழ்ச்சி, மயிர் கூச்செரிதல் போன்ற மாற்றங்கள் மூலம் உடலிலும் (ஆகம்) வெளிப்படுகிறது.


சூழ்ந்து: உடலின் ஒவ்வொரு அசைவிலும் அந்த இறை அனுபவம் மட்டுமே நிறைந்து (சூழ்ந்து) இருப்பது.


துணிந்து: "இறைவனுக்குச் சேவை செய்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு லட்சியம் இல்லை" என்ற உறுதியான தீர்மானம் இது.


பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் "மகிழ்ந்தது" என்ற சொல் மூன்று முறை வருவதைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார்.


சிந்தை மகிழ்ந்தது- மனம் அல்லது சிந்தை பகவானைப் பற்றிய ஞானத்தால் மகிழ்ந்தது.


வாக்கு மகிழ்ந்தது- அவனது திருவடிகளைப் போற்றியதால் வாக்கு மகிழ்ந்தது.


ஆகம் மகிழ்ந்தது- பாடி ஆடியதால் உடல் மகிழ்ந்தது.


இதுவே 'திரிகரண சுத்தி' எனப்படுகிறது. அதாவது மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இறை அனுபவத்தில் திளைப்பதைக் குறிக்கிறது. இதையே ஆண்டாள் நாச்சியார், வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான்என்கிறாள்.


பெரியவாச்சான் பிள்ளை இந்தப் பாசுரத்திற்கு அளிக்கும் 'அவதாரிகை' அதாவது முன்னுரை மிகவும் சுவையானது.


இதற்கு முந்தைய பாசுரம் (31)ல் எம்பெருமானை மலர் தூவி வணங்குபவர்கள் அவனது அழகிய வடிவைக் கண்டு மகிழ்வார்கள் ("மணி உருவம் காண்பார் மகிழ்ந்து") என்று ஆழ்வார் கூறினார்.


இதைக் கேட்ட எம்பெருமான் ஆழ்வாரிடம், "மற்றவர்கள் மகிழ்வதைப் பற்றிச் சொன்னீரே, உம்முடைய நிலை என்ன? நீர் என்ன செய்தீர்? நீர் மகிழ்ந்தீரா?” என்று கேட்க, அதற்கு ஆழ்வார் பதில் சொல்வது போலவே இப்பாசுரம் அமைகிறது. “எம்பெருமானே, மற்றவர்கள் மகிழ்வது ஒருபுறம் இருக்கட்டும், இதோ என் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றுமே உன்னிடத்தே மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துவிட்டனஎன்று தனது அனுபவத்தை இங்கே சாட்சியமாக வைக்கிறார்.


"மகிழ்ந்தது சிந்தை திருமாலே" என்ற இந்தப் பாசுரம், பூதத்தாழ்வார் எம்பெருமானின் திருவடிகளையும், அவனது திவ்ய ஆயுதங்களையும் போற்றிப் பாடி ஆடுவதே ஒரு பக்தனின் உன்னதமான கடமை என்பதையும், அதுவே நிலையான மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதையும் இந்தப் பாசுரம் மூலம் நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறார்.


பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.



Post a Comment

புதியது பழையவை