அதிகப் பார்வை

ஸ்ரீ இராமானுஜரின் மேல்நாட்டு திவ்ய விஜயம் மற்றும் பஞ்ச நாராயண கோயில்கள் - கோமான் ஶ்ரீ பாலாஜி


ஸ்ரீபாஷ்யகாரரான எம்பெருமானார் தென்னாட்டில் மட்டுமல்லாமல், மேல்நாட்டிலும் ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை நிலைநிறுத்தி, பகவத் ஆராதனையை முறைப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை எம்பெருமானின் திருவடிகளோடு இணைத்தார். அந்த மகத்தான திவ்ய விஜயத்தின் அழியாத சாட்சிகளாக இன்றும் விளங்கும் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களின் வைபவத்தை இப்பதிவில் சுருக்கமாகக் காண்போம்.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் திருவரங்கப் பெருநகரில் நேர்ந்த சில மதநெருக்கடிகள் காரணமாக, ஜகதாசாரியனான ஸ்ரீ இராமானுஜர் சோழ நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு (மைசூர் பிராந்தியம்) எழுந்தருளினார். அப்போது அப்பகுதியை அரசாண்ட பிட்டிதேவா என்ற ஜைன மன்னன், எம்பெருமானாரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தாலும் உடையவரின் ஆன்மீகப் பொலிவாலும் ஈர்க்கப்பட்டு, அவர்தம் திருவடிகளையே தஞ்சமென அடைந்து ஸ்ரீவைஷ்ணவ நெறியை ஏற்றான்.
ஆசாரியன் அம்மன்னனுக்கு "விஷ்ணுவர்தனன்" என்று தாஸ்ய நாமம் (திருநாமம்) சாற்றி ஆசீர்வதித்தார். தனது மகளின் தீராத பிணியை எம்பெருமானார் தீர்த்தருளியதற்கு நன்றியறிதலாகவும், எம்பெருமானின் திருக்குணங்களை உலகறியச் செய்யவும், உடையவரின் நியமனப்படி பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களை விஷ்ணுவர்தனன் நிர்மாணித்தான்.
ஸ்ரீ இராமானுஜரின் திருவுள்ளப்படியே, அவர்தம் முதன்மைச் சீடரான முதலியாண்டான் (தாசரதி), ஆசாரிய அனுக்ரஹத்தாலும் வைதிக சம்பிரதாய முறைப்படியும் இம்மூர்த்திகளின் பிரதிஷ்டை கைங்கர்யத்தை நிறைவேற்றியதாக குருபரம்பரைகள் போற்றுகின்றன. இதனால் "பஞ்ச நாராயண க்ஷேத்ர பிரதிஷ்டாபனாச்சாரியார்" என்ற பெருமையும் அவருக்கு உரியதாகும்.
இந்த ஐந்து திருத்தலங்களில் நான்கு தலங்கள் (தொண்டனூர், மேல்கோட்டை, தலக்காடு, பேளூர்) தென் கர்நாடகப் பகுதியிலும், ஒரு தலம் (கதக்) வட கர்நாடகப் பகுதியிலும் அமைந்துள்ளன. எனவே, இப்பயணத்தைத் தொடக்கப் புள்ளியாக பெங்களூரு அல்லது மைசூரை வைத்துக் கொண்டு திட்டமிடுவது மிகவும் எளிதானது.
ஸ்ரீ நம்பி நாராயணப் பெருமாள் – தொண்டனூர் (யாதவபுரி)
எம்பெருமானார் சோழ தேசத்திலிருந்து மேல் நாட்டிற்கு எழுந்தருளி முதன்முதலில் தங்கி அருட் புரிந்த திருத்தலம் இதுவே. ஜைன பண்டிதர்களுடன் வாதம் செய்து, வேதாந்த சித்தாந்தத்தை நிலைநாட்டிய திருத்தலம்.
கமல பீடத்தில் நின்ற திருக்கோலத்தில், திருவாழி-திருச்சங்குடன் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீ நம்பி நாராயணர்.
அமைவிடம்: பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் (NH 275) பாண்டவபுரா வழியாகச் செல்ல வேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவு.
பயணக் குறிப்பு: எம்பெருமானார் முதன்முதலில் எழுந்தருளிய இந்தத் தலத்திலிருந்தே நமது யாத்திரையைத் தொடங்குவது மிகவும் உசிதமானது.
ஸ்ரீ செல்வநாராயண ஸ்வாமி – மேல்கோட்டை (திருநாராயணபுரம்)
எம்பெருமானார் சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து பகவத் கைங்கர்யங்களை முறைப்படுத்திய உன்னத க்ஷேத்திரம். இதனால் இது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த க்ஷேத்திரங்களில் ஒன்று. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம், திருவேங்கடம், காஞ்சி அத்திகிரி ஆகியவற்றுடன் திருநாராயணபுரமும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதனை உணர்த்தும் புகழ்பெற்ற ஸ்லோகம்.
ஶ்ரீரங்க மங்களநிதிம் கருணாநிவாஸம்
ஶ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம் |
ஶ்ரீஹஸ்திஸைல ஸிகரோஜ்வல பாரிஜாதம்
ஶ்ரீஸந்நமாமி சிரஸா யதுஸைல தீபம் ||
திருநாராயணப் பெருமாளை எம்பெருமானார் புற்றிலிருந்து வெளிக்கொணர்ந்து மறுபடியும் பிரதிஷ்டை செய்து, நித்யாராதனையை முறைப்படுத்திய தலம் என்பதாலும் இக்க்ஷேத்திரம் ஆசாரியர்களாலும் பக்தர்களாலும் மிகவும் போற்றப்படுகிறது.
இங்குள்ள உத்ஸவ மூர்த்தியை டெல்லி அரசனிடமிருந்து எம்பெருமானார் மீட்டு வந்தபோது, அப் பெருமாள் ஒரு குழந்தையைப் போல ஓடிவந்து உடையவரின் மடியில் அமர்ந்ததால், எம்பெருமானார் இவரை உகந்து "செல்வப்பிள்ளை" என்று திருநாமம் சாற்றி மங்களாசாசனம் செய்தார். இன்றும் இங்கு எம்பெருமானாருக்குத் தனிச் சந்நிதி அமைந்து, ஆசாரியரின் விக்ரகம் அமுதூட்டும் எழிலுடன் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைரமுடி சேவை உலகப் புகழ்பெற்றதாகும்.
பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த பிரசித்தி பெற்ற பிரம்மோத்ஸவ விழாவில் பெருமாளுக்கு வைரக்கிரீடம் சூட்டப்பட்டு, கருட வாகனத்தில் வீதியுலா வரும் இந்த கண்கொள்ளா வைபவம் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் கோயில் தரிசன உரிமையை அளித்து, சமய சமத்துவத்தை நடைமுறைப்படுத்திய இடமும் இதுவே. தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியைக் கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தத் திருமேனியில் தமது அனுக்ரஹத்தை அருளிச் செய்து அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார். அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்தச் சிலையை தமர் உகந்த திருமேனி என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்தத் திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.
அமைவிடம்: தொண்டனூரிலிருந்து மிக அருகில் (சுமார் 22 கி.மீ.) வடக்கே அமைந்துள்ளது.
பயணக் குறிப்பு: NH-150A வழியாக 35 நிமிடங்களில் எளிதாகச் சென்றடையலாம். எம்பெருமானார் 12 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த தலம் என்பதால், இங்குச் சற்று அதிக நேரம் ஒதுக்கி உடையவரை பிரார்த்தித்து, யோகநரசிம்மர் மற்றும் ஆசாரியன் சந்நிதிகளைச் சேவிப்பது சிறப்பு.
ஸ்ரீ கீர்த்தி நாராயணப் பெருமாள் – தலக்காடு
காவிரியாற்றின் கரையில், மன்னன் விஷ்ணுவர்தனன் சோழர்களை எதிர்த்து பெற்ற வெற்றியின் அடையாளமாகவும், எம்பெருமானின் கீர்த்தியை (புகழை) எத்திசையும் பரப்பவும் உடையவர் அனுக்ரஹித்த தலம்.
கால ஓட்டத்தில் காவிரியின் மணல் பரப்பிற்குள் மறைந்திருந்த இந்த எழிலார்ந்த பெருமாள், பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் ஆசாரிய வைபவப்படி ஆராதிக்கப்படுகிறார். சங்கு, சக்கரம், கதாயுதம் ஏந்தி பேரருள் புரிகிறார்.
அமைவிடம்: மேல்கோட்டையிலிருந்து தென்கிழக்கே மைசூர் வழியாகச் செல்ல வேண்டும் (சுமார் 97 கி.மீ.).
பயணக் குறிப்பு: காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த மணல் நகரத்திற்குச் செல்ல NH-150A மற்றும் NH 766 ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.
ஸ்ரீ விஜய நாராயணர் (சென்னகேசவ பெருமாள்) – பேளூர் (வேலாபுரி)
ஹோய்சாள சிற்பக் கலையின் சிகரமாக விளங்கும் இத்தலம், திருமாலின் அழகை உலகிற்குப் பறைசாற்றும் உன்னத கோயிலாகும். பெருமாளின் திருமேனித் திருவழகு, காண்போரின் உள்ளத்தை வசீகரிக்கும் வண்ணம் விளங்குகிறது.
"சென்னகேசவன்" என்றால் 'அழகிய கேசவன்' (நாராயணன்) என்று பொருள். திருமேனி முழுவதும் தெய்வீக லாவண்யத்துடனும், கலைநயத்துடனும், காண்போர் நெஞ்சத்தை உருகச் செய்யும் பேரழகுடன் அடியார்களுக்கெல்லாம் நல்வாழ்வு தந்து சேவை சாதிக்கிறார்.
ஹோய்சாள அரசன் விஷ்ணுவர்தனனின் பகவத் பக்திக்கும், ஸ்ரீ இராமானுஜரிடம் கொண்ட ஆசாரிய பக்திக்கும் நிலையான சான்றாக இக்கோயில் திகழ்கிறது.
அமைவிடம்: தலக்காட்டிலிருந்து வடமேற்கே ஹாசன் (Hassan) வழியாக பேளூரை அடையலாம் (சுமார் 205 கி.மீ.).
பயணக் குறிப்பு: அரசிகெரே - மைசூர் சாலை வழியாகச் சென்றடையலாம். கலைநயம் மிக்க இக்கோயிலின் சிற்ப அழகையும் பெருமாளின் திவ்ய மங்கள சொரூபத்தையும் தரிசிக்க 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படும்.
ஸ்ரீ வீர நாராயணப் பெருமாள் – கதக்
வட கர்நாடகப் பகுதியில் எம்பெருமானின் திவ்ய நாமத்தைப் பரப்புவதற்காக உடையவரின் வழிகாட்டுதலோடு அமையப் பெற்ற திருத்தலம்.
ஸ்ரீ மகாவிஷ்ணு வீர்ய லட்சணங்கள் பொருந்தி, அடியார்களைக் காக்கும் போர்க்கோலப் பொலிவுடன், திருக்கைகளில் திவ்ய ஆயுதங்களைத் தாங்கி, சகல ஆபரணங்களுடனும் "வீர நாராயணனாக" சேவை சாதிக்கிறார்.
அமைவிடம்: பேளூரிலிருந்து வடக்கே சிக்கமகளூரு, ஹூப்ளி (Hubli) வழியாக கதக் நகரை அடைய வேண்டும் (சுமார் 332 கி.மீ.).
பயணக் குறிப்பு: இது மற்ற நான்கு தலங்களில் இருந்து சற்று தொலைவில், வட கர்நாடகாவில் அமைந்துள்ளது. SH 76 சாலை வழியாக வாகனத்தில் செல்லலாம் அல்லது ஹூப்ளி வரை இரயில் மூலம் சென்று அங்கிருந்து எளிதாகக் கதக் நகரை அடையலாம்.
"ஸ்ரீமதே ராமானுஜாய நம:" என்று அனுதினமும் ஜபித்து, எம்பெருமானாரின் திருவடித் தொடர்பால் மங்களம் பெற்ற இப்பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களை ஆசாரிய பக்தியுடன் சேவிக்கும் அடியார்கள், இம்மையிலே எம்பெருமானின் அருளையும், ஆசாரிய கடாட்சத்தையும் பெற்று, இறுதியில் நித்தியசூரிகளின் கோஷ்டியில் இணைந்து, ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை நித்ய கைங்கர்யமாக அனுபவிக்கும் பரமபத பாக்கியத்தை அடைவர் என்பது ஸ்ரீவைஷ்ணவ ஆன்றோர் அருளிச் செய்த நம்பிக்கை.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை