வியாழன், 18 நவம்பர், 2004

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)17

கொண்டதாளுறி கோலக்கொடுமழு

தண்டினர் பறியோலைச்சயனத்தர்

விண்டமுல்லை அரும்பன்னபல்லினர்

அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
கொண்டதாளுரி கோலக்கொடுமழு - ஆயர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் உறி (தயிர் கடைய வைத்திருக்கும்), கோலக்கொடுமழு என்பது அவர்கள் மாடுகளை மேய்க்கும்போது எந்த விலங்கினமும் தாக்காமல் இருப்பதற்காக ஒரு கூர்மையான ஆயதம் வைத்திருப்பார்கள், தண்டினர் - தண்டு வைத்திருப்பவர்கள். பறிஓலை சயனத்தர் - ஓலையை பாயாகக்கொண்டு தூங்குபவர்கள். விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர் - பறித்த முல்லையைப் போன்று பற்களை உடைய ஆயப் பெண்டிர், மிண்டிப் புகுந்து நெய்யாடினர் - மிண்டி என்பது ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு நெய்யாடினர். நெய்யாடல் என்பது திருநாள்களில் மங்கலமாக ஆடும் எண்ணெய் முழுக்கு.18

கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்

ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட

வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.ஆகா என்ன பாடல் பார்த்தீரா, கையுங்காலும் நிமிர்த்துக் கடாரநீர் - குழந்தை கண்ணனை தாய் யசோதை குளிப்பாட்டுகிறாள் எவ்வாறு காலும் கையும் நன்றாக பலமாக இருக்கவேண்டும் என்பதற்காக நன்கு நீட்டி நல்ல வென்னீர் கொண்டு குளிப்பாட்டுகிறாள். பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால் - நல்ல வென்னீர் கொண்டு மெதுவாக பசுமையான மஞ்சளைப் பூசி குளிப்பாட்டுகிறாள் யசோதை. ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட - குழந்தைகளை குளிப்பாட்டும்போது நாக்கு வழிப்பார்கள் அப்படி யசோதை கண்ணனுக்கு நாவழிக்க வாயைத்திறப்பா என்றதும், வையமேழுங்கண்டாள் பிள்ளைவாயுளே - அவ்வாறு நாவழிக்கக் குழந்தைக் கண்ணன் வாயை திறக்க ஏழு உலகத்தையும் கண்டாளே அந்த யசோதை சிறுபிள்ளை வாயினுள்ளே. ஆகா ஆழ்வாரின் அற்புதத்தைக் கண்டீர்களா அடுத்தப் பாடலிலும் பார்ப்போம்.19

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்

ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்

பாயசீருடைப் பண்புடைப்பாலகன்

மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
வாயுள் வையகங் கண்ட மடநல்லார் - வாயினுள் வையகம் ஏழையும் கண்ட யசோதை, ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் - ஐயோ இவன் சிறுபிள்ளையல்லவே, ஆயர் குலத்தில் அந்த தெய்வமே குழந்தையாக பிறந்துவிட்டதோ பாயச்சீருடைப் பண்படைப் பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே - வையம் ஏழும் கண்டதும் திடுக்கிட்ட யசோதையிடத்தில் அங்குள்ள ஆயப்பெண்டிர் அடி யசோதா இவன் சாதாரண குழந்தையல்ல அந்த மாயன் மாதவனே அந்த நாராயணனே குழந்தையாக பிறந்துள்ளான்........ என்று கூறி ஆயப்பெண்டிர் மகிழ்ந்தனர்.20

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்

எத்திசையும் சயமரம்கோடித்து

மத்தமாமலை தாங்கியமைந்தனை

உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.பத்துநாளுங்கடந்த இரண்டாநாள் - குழந்தை கண்ணன் பிறந்து பன்னிரெண்டாம் நாளன்று, எத்திசையும் சயமரங்கோடித்து - எல்லா திசைகளிலும் சயமரம் நட்டு (வெற்றிக்கொடிக் கட்டி), மந்தமாமலை தாங்கிய மைந்தனை - மதம் பிடித்த யானைகள் அதிகம் கொண்ட கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து ஆயர்களை காத்த அந்த மாயவன் கண்ணனுக்கு, உத்தானம் செய்து உகந்தனர் - குழந்தை கண்ணன் பிறந்த பன்னீரெண்டாம் நாளன்று அவனுக்கு பெயர் சூட்டி ஆடிப்பாடி அகமகிழ்ந்தனர் அந்த ஆயர்களே.....21

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்

எடுத்துக்கொள்ளiல் மருங்கையிறுத்திடும்

ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
கிடக்கில் தொட்டில் கிழியவுதைத்திடும் - அந்த பொல்லாத குழந்தை கண்ணனை தொட்டிலில் போட்டால் உதைத்தே கிழித்திடுவான். எடுத்துக் கொள்ளில் மருங்கையிருத்திடும் - சரி தொட்டில் கிழிக்கிறானே என்று கையில் எடுத்து இடுப்பில் வைத்துக்கொள்வேமென்றால் இடுப்பையே ஒடித்திடுவான். ஒடுக்கி பல்கில் உதரத்தே பாய்ந்திடும் - கைகளை ஒடுக்கி மார்பில் அணைத்து வைத்திப்போமென்றால் அந்தப் பொல்லாதவன் வயிற்றில் உதைப்பான். மிடுக்கில்லாமையால் நான்மெலிந்தேன்நங்காய் - ஐயோ இந்தப் பொல்லாதவனை அடக்கி வைத்திருக்க முடியாமல் நான் உடல் மெலிந்து போய்விட்டேன் என்று யசோதை தன்னுடைய தோழியிடம் கூறுகிறாள், யசோதையா கூறுகிறாள் இல்லை நம் பெரியாழ்வாரே கூறுகிறார். என்ன அவரின் தாய்மை பார்த்தீரா22

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்

மன்னுநாரணன் நம்பிபிறந்தமை

மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்

பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே.செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் - செந்நெல் வயல் சூழ்ந்துக் காணப்படும் திருக்கோட்டியூரிலே, மன்னுநாரணன் நம்பி பிறந்தமை - அந்த திருக்கோட்டியூரிலே இருக்கும் நாராயணனே குழந்தையாக பிறந்ததை, மின்னுநூல் விட்டு சித்தன் விரித்த பன்னுபாடல் வல்லார்க்கு இல்லைபாவமே - விட்டு சித்தன் இதுவரை கூறிய கண்ணன் அவதாரத்தை அர்த்தமோடு பாடுபவர்களுக்கு இல்லை பாவமே...........தொடர்ந்து பெரியாழ்வாரின் பாடல்களை பார்ப்போம்.......


1 கருத்து:

  1. Hi

    Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

    பதிலளிநீக்கு