ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 10 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 10 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

அரண்மனையில் ஒரு நாடகம்!

எந்த வகையிலெல்லாம் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடும் என்று ஹிரண்ய கசிபு நம்பினானோ, அதையெல்லாம் வரிசையாகக் கேட்டு, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு மரணம் கூடாது என்று கேட்டு விட்டான். சேற்றிலே தாமரை முளைப்பது போல, அந்த ஹிரண்ய கசிபுவின் வயிற்றிலேயும் பாகவதோத்தமனான ஒரு பிரஹ்லாதன் தோன்றினான்.

இந்த பிரஹ்லாதனை எவ்வாறு விவரிக்கிறார் பராசரர்?

‘தஸ்ய புத்ர : மஹாபாக:’ அதாவது பரம பாகவதன்… என்கிறார்கள். அப்படிப்பட்ட ஹிரண்யனுக்கு மகனாகப் பிறந்தவன் என்று பொருள். பாகவதர்கள் ஒரு வார்த்தையைப் போட்டால் அதற்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்.

‘தஸ்ய புத்ர : பரம பாகவதன்’ என்கிற இரண்டையும் நாம் சேர்த்துப் பார்ப்போம். அவ்வளவு துராசாரத்துடன், அசுர குணங்களுடன், கேவலமான குணங்களுடன் துன்புறுத்தும் எண்ணத்துடன் இருப்பவன் ஹிரண்யன். ‘தஸ்ய’ என்பதன் அர்த்தம் இதுதான்.

இதற்கு நேர் எதிரான அர்த்தம் ‘மஹாபாக:’ என்ற வாக்கியத்துக்கு. மேலே சொன்ன எந்த எண்ணமும் அற்றவன்.

அவனுக்கு அசுர சுபாவம். இவனுக்கு தேவ சுபாவம். அவனுக்குத் துன்புறுத்தும் எண்ணம். இவனுக்கு இன்புறுத்தும் எண்ணம். அவன் எல்லோரையும் கொலை செய்கிறான். இவன் எல்லோரையும் வாழ வைக்கிறான். அவனுக்கு பிராம்மணர்களைக் கண்டாலே ஆகாது. இவனோ அவர்களைப் பூஜிக்கிறான்.

அவன் வேத விரோதமாக நடப்பான். இவன் வேதத்தை ஒழுகி நடப்பான்.

எல்லாவற்றிலும் எதிர்மறை! அதனால் தான் ‘தஸ்ய’ என்று சொன்னவர் ‘மஹாபாக :’ என்று கொண்டாடுகிறார். பராசரர் மகா ஞானி. அப்படிப்பட்ட ஞானி ஒரு அசுரப் பிள்ளையைக் கொண்டாடியிருக்கிறார் என்றால், அவன் சாதாரணப் பிள்ளையாக இருக்கவே முடியாது.

‘தஸ்ய புத்ர : மஹாபாக : பிரஹ்லாதோ நாம நாமத:’ என்கிறார்.

சின்னக் குழந்தை பிறந்தபிறகு தகப்பனார் பள்ளிக் கூடத்துக்குப் போய் என்று அனுப்பி வைக்கிறார். என்ன சொல்லி அனுப்பினாராம் தெரியுமா?




குழந்தாய், யார் விரோதி… யார் நண்பன் என்பதைத் தெரிந்துகொண்டு வா” என்று சொல்லி வழியனுப்பி வைத்தாராம்.

ராஜ்ஜியத்தை நடத்த வேண்டுமானால் இது ரொம்பவும் முக்கியம். நண்பர்கள் யார், விரோதிகள் யார்… இவர்களை எவ்வாறு வசப்படுத்தலாம்; அவர்களை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிய வேண்டும்.

குழந்தையும் புறப்பட்டுப் பள்ளிக்குப் போனான். அவன் திரும்பி வந்த பிறகு அவனிடம், தந்தையார் கேள்வி கேட்டார்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் விட்டு வந்தால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டு வந்தார்கள் என்ற கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தகப்பனின் கடமை. அப்படித் தெரிந்து கொள்ளாவிட்டால், அவன் என்ன கற்றுக் கொண்டான் என்றே புரியாமல் போய்விடும்.

என்ன கற்றுக் கொண்டு வந்தாய் குழந்தாய்? நீ தெரிந்து கொண்டு வந்தவற்றையெல்லாம் சொல்லு” என்று கேட்கிறான். குழந்தை சொல்கிறான்,

“அநாதி மத்ய அந்தம் அஜம்” என்று தொடங்கி…

ஆதி, நடு, அந்தம் எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். வளர்ச்சி தாழ்ச்சி இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். பிறப்பு இல்லவே இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். ஜகத் காரணம் யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன்” என்று பிள்ளை சொன்னவுடன், ஒன்றுமே புரியவில்லை யாம் ஹிரண்யகசிபுவுக்கு. என்ன இது? நாம் எதுவும் படிக்கவே இல்லை என்பது போல் இந்தக் குழந்தை பேசுகிறதே?

ஆரம்பம் தெரியாது; மத்தி தெரியாது; அந்தம் தெரியாது! யாரைப் பற்றி சொல்கிறான்?
பிறப்பே கிடையாது; இறப்பே கிடையாது யாரைப் பற்றி சொல்கிறான்? அபாரமான ஆனந்தன் என்று யாரைப் பற்றிச் சொல்கிறான்?

பிரஹ்லாதனோ பெருமாளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் ஹிரண்யகசிபுவுக்கு ஒன்றுமே புரியவில்லையாம்!

ஏனெனில் அவன் நினைத்தது வேறு. பிரஹ்லாதன் தன்னைப் பற்றி (அதாவது தந்தையாகிய ஹிரண்யகசிபுவைப் பற்றி) சொல்லப் போகிறான் என்று பெருமிதமாகக் காதைத் தீட்டிக் கொண்டு காத்துக் கொண்டிருந்தானாம். ஒரு வார்த்தைகூட வரவில்லை!

வாய்க்கு வந்த படியெல்லாம் வைய ஆரம்பித்துவிட்டான் ஹிரண்யகசிபு. அவனுக்குக் கற்றுக் கொடுத்த உபாத்யாயர்களையெல்லாம் பிடித்துக் கொண்டு வரச் சொன்னானாம்.

நீங்களெல்லாம் வேண்டுமென்று எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியிருக்கிறீர்கள். என் குழந்தைக்கு ஏதேதோ சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியது இது இல்லை. எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அதைவிட்டுவிட்டீர்களே!” என்று, இவன் வசவு பாடத் தொடங்க அவர்கள் எல்லாம் பயந்து நடுங்கத் தொடங்கிவிட்டார்களாம்.

இவற்றில் எந்த ஒரு வார்த்தையையும் நாங்கள் அவனுக்கு சொல்லிக் கொடுக்கவே இல்லை” என்றார்களாம்.

இதை நாம் கொஞ்சம் ஊன்றி கவனிக்க வேண்டும். சொல்ல வேண்டிய நல்ல வார்த்தைகளையெல்லாம் ஒரு பிள்ளை சொல்கிறான். இதைப் போய் சொல்லிக் கொடுக்கிறீர்களே” என்று ஒருவன் கேட்கிறான். இதை நாங்கள் சொல்லிக் கொடுக்கவேயில்லை” என்று அவர்கள் சொல்கிறார்கள்! இதுதான் ஹிரண்யகசிபுவின் அரண்மனையில் நடந்த நாடகக் காட்சி.

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை