திங்கள், 15 டிசம்பர், 2008

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து தீபங்கள் ஏற்றி, இறைவனுடைய புகழைப் பாடி வீதிவலம் வந்து, பின்பு ஆலயம் சென்று பரம்பொருளை வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும்.

டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி செவ்வாயன்று மார்கழி மாதம் தொடங்குகிறது. அதற்கு முதல் நாள் கார்த்திகை சோமவாரம். இது சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று பல கோயில்களில் பரமேஸ்வரனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் விளக்கேற்றுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம். கார்த்திகை மாத சோமவாரம் முடிந்த மறுதினமே மார்கழி மாதம் ஆரம்பமாவது இந்த ஆண்டின் தனிச்சிறப்பு. மார்கழி மாதச் சிறப்புகள் பற்றியும், அம்மாதத்தில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பாடப்படுவதும், சொற்பொழிவாளர்களால் பேசப்படுவதுமான திருப்பாவை, திருவெம்பாவையைக் குறித்தும் சில தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். ""வருடங்களை சூரியனை வைத்துக் கணக்கிடும் போது "ஸௌர மாதம்' என்றும், சந்திரனை வைத்துக் கணக்கிடும் போது "சாந்த்ர மாதம்' என்று இரண்டு விதமாகக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வெகு காலங்களாக சாந்த்ர மாத வழக்கே இருந்து வருவதால் மாதத்தை "திங்கள்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது'' என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார். ஸௌர மாதம் ராசியைக் கொண்டு குறிப்பிடப்படுவதால் மார்கழி மாதத்தை "தனுர் மாதம்' என்றும் அழைக்கின்றோம். தனுர் மாதம், தேவதைகளுக்கு சூர்யோதய காலம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியனுடைய உத்தராயணம்; அது தேவர்களுக்குப் பகல் பொழுது. ஆடி முதல் மார்கழி வரையில் சூரியனுடைய தக்ஷிணாயனம்; அது தேவர்களுக்கு இரவு நேரம். நமக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை பிரம்ம முகூர்த்தம். கடவுள் வழிபாட்டிற்கு அது சிறந்த நேரம். அதே போன்று தேவர்களுக்கு மார்கழி முழுவதும் பிரம்ம முகூர்த்தம். ஆதலால் மாதங்களில் மார்கழி மிகச் சிறந்தது. சூரிய உதயத்தில் செய்யும் காரியங்கள் அதிக பலனைத் தருகின்றது. வருடத்தை நான்கு பாகமாகப் பிரித்தால் உத்தராயணத்திற்கு முந்திய உஷத் காலத்தில் மார்கழி மாதம் வருகிறது. அம்மாதத்தில் விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் (ஏன்? எல்லா நாட்களிலுமே சூர்யோதயத்திற்கு முன்பு எழுந்திருப்பது உடலுக்கு நன்மை தரும்.) ஆகவேதான் ""வைகறைத் துயிலெழு'' என்ற பழமொழி வழங்கி வருகிறது. மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை, விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு விழாக்களும் வருகின்றன. இவை சைவ-வைணவ ஒற்றுமையைக் காட்டுகின்றன.