வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கிருஷ்ணரே பிரம்மச்சாரி!


மகாபாரதப் பெரும்போர் நடந்து முடிந்தது. துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, உயிர் நீங்கும் நிலையில் இருந்தான். அசுவத்தாமா, போரில் தன்னுடைய தந்தை துரோணரையும் நண்பன் துரியோதனனையும் கொன்ற பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்க எண்ணினான். உப பாண்டவர்கள் என்னும் பாண்டவ குமாரர்கள் ஐவரும் போர்க்களத்தில் இருந்த பாசறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாண்டவர்கள் வெளியில் இருந்தனர்.

அசுவத்தாமன் பாசறைக்குத் தீவைத்தான். உப பாண்டவர்களை, பாண்டவர்கள் என்று கருதி, வாளால் வெட்டிக் கொன்றான். ஐவரின் தலைகளையும் உயிர்விடும் நிலையிலிருந்த தன்னுடைய நண்பன் துரியோதனனிடம் காட்டினான். துரியோதனும் அசுவத்தாமனும் பாண்டவர்கள் அழிந்து விட்டதாக எண்ணினர்.

அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்துப் பாண்டவர் குலநாசம் செய்ய எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது உத்தரையின் வயிற்றைத் தாக்கியது. உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்தாள்.

உத்தரையின் வயிற்றை, பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். உத்தரையின் வயிற்றைத் தடவ, பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவிய கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவினான். பிரம்மாஸ்திரக் கட்டு விலகியது. உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் காக்கப்பட்டன! கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவான்? வியப்பாக உள்ளதா?

தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’என்று விசுவாமித்திரர் ராமனை அழைத்ததாகக் கம்பராமாயணம் கூறுகிறது. ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்தனர். தாங்கள் விரும்பியபடி, கண்ணனைத் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை! அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றினர். உண்மையில் தானே பிரம்மச்சாரி என்று கூறிய கண்ணனைப் போல் தான் எதுவும் சாதிக்கவில்லை என்கிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை.

‘‘யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே?’’

என்கிறார். பரம்பொருளுக்கு, மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உரிய காமம், வெகுளி போன்ற குற்றங்கள் இல்லை என்பது கருத்து. சைவ நெறியிலும், ‘‘பவன் பிரம்மச்சாரி: பாகு மொழி கன்னி’’என்று கூறுவர்.

கவந்தன் சொன்ன அடையாளம் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தேடி ராமரும் லட்சுமணனும் காட்டில் நடந்தனர். அவர்கள் ஓரிடத்தில் ஒரு விசித்திரமான உருவத்தைக் கண்டனர். தலையும் கால்களும் இல்லாமல் இரண்டு நீண்ட கைகளை மட்டும் பெற்றிருந்த கவந்தனே அவ்வுருவம்! தன்னுடைய எல்லைக்குள் நுழையும் உயிர்களைப் பிடித்து இழுத்துத் தின்பவன் கவந்தன்.

ராமரும் லட்சுமணனும் கவந்தனின் எல்லைக்குள் வந்தனர். அவர்களையும் பிடித்துத் தின்ன முற்பட்டான் கவந்தன். ராமலட்சுமணர்கள் கவந்தனின் கரங்களை வெட்டித் துண்டித்தனர். உடனே அவனுடைய சாபம் நீங்கியது. தன் வரலாறு கூறினான். பிறகு, சுக்ரீவன் இருக்கும் இடத்தைக் காட்டினான். அவனுடன் நட்பு கொண்டு, சீதையைத் தேடுமாறும் ஆலோசனை வழங்கினான். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரின் சாபத்தால் கவந்தன் கோர உருவம் பெற்றான் என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. இந்திரனின் சாபத்தால் கோர உருவம் பெற்றதாகக் கம்பராமாயணம் உரைக்கிறது.

‘‘அடையாளம் சொன்னேனோ கவந்தனைப் போலே?’’

என்று கவந்தன் ராமருக்கு அடையாளம் சொன்ன அரிய செயலைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நினைவுபடுத்தினாள்.

அரக்கர் பூமியில் ஆறுதல் கூறியவள் ராவணன் தம்பி விபீஷணன் தர்மம் அறிந்தவன். நற்குணங்கள் நிரம்பியவன். அனுமன் இலங்கையில் பல இடங்களிலும் சீதையைத் தேடினான். விபீஷணனின் மாளிகை, மது, மாமிசம் முதலிய எதுவும் இல்லாமல், ஒரு முனிவரின் ஆசிரமம் போல் விளங்கியதை அனுமன் கண்டான். அத்தகைய விபீஷணனின் மகள் திரிசடையும் நற்குணங்கள் பெற்றவளாகத் திகழ்ந்தாள். சிறையிருந்த சீதைக்குப் பலவாறு ஆறுதல்கள் கூறியவள் திரிசடையே.

விருப்பமில்லாத பெண்ணைத் தீண்டினால் உடனே தலைகள் வெடித்து விடும் என்ற சாபம் ராவணனுக்கு இருந்தது. அந்த ரகசியத்தை திரிசடைதான் சீதையிடம் கூறினாள். அனுமன் தூதாக வருவதற்கு முன்னால், திரிசடை ஒரு கனவு கண்டாள். அக்கனவில் ராவணன் முதலானோர் சிகப்பு ஆடையில் தென்திசை நோக்கிப் பயணித்ததாக சீதை கண்டாள். அதனால், ராவணாதியரின் முடிவு நெருங்கிவிட்டதென்று திரிசடை சீதைக்குக் கூறி ஆறுதல் அளித்தாள்.

 ராவணன் மாயாஜனகனைக் கொண்டு, சீதையைத் தனக்கு இணங்க வற்புறுத்தியபோது, அது ராவணின் சூழ்ச்சியே என்று எடுத்துக் கூறினாள் திரிசடை. பிரம்மாஸ்திரத்தால் ராமர் முதலானோர் மயக்கநிலையில், இறந்தவர்களைப் போலக் கிடந்தனர். சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் அழைத்துவரச் செய்து, அக்காட்சியைக் காட்டினான். கணவனை இழந்தவர்களை புஷ்பக விமானம் தன்னுள் ஏற்றாது, ஏற்காது என்ற ரகசியத்தை திரிசடை சீதைக்குக் கூறி ஆறுதல் அளித்தாள்.

‘‘அந்தரங்கம் சொன்னேனோ  திரிசடையைப் போலே?’’

திரிசடை சீதைக்கு உற்ற தோழியாக இருந்து, ஆறுதல் அளித்தாள். வேறு எவருக்கும் தெரியாத ரகசியமான செய்திகளைச் சீதைக்கு அந்தரங்கமாகக் கூறினாள். அதாவது, பிறர் அறியாத வகையில் தனியே எடுத்துக் கூறினாள். அது போன்ற செயலைத் தான் செய்ய இயலவில்லையே என்று ஏங்குகிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக