வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எங்கும் திகழ்சக்கரமாய் ஒளிர்பவன்


உத்தம பாகவத ரத்னமான உத்தவர் கிருஷ்ணரை பிரேமையோடு நோக்கினார். பேரானந்தத்தின் மலர்ச்சி கண்களில் நீராய் திரண்டு கன்னம் வழிந்தோடியது. தொண்டை வரண்டு வார்த்தைகள் வராது தழுதழுத்து உணர்ச்சிமயமானார் உத்தவர். ஆனாலும் விடாமல், ‘‘பகவானே, அது என்னவோ, முக்கியமான விஷயம் என்றீர்களே? நான் அதை அறிந்து கொள்ளலாமா?’’என்று கிருஷ்ணனிடம் கேட்டார்.

‘‘இதிலென்ன தயக்கம் உத்தவா. உன்னைப் பற்றியதை உன்னிடம்தானே சொல்லமுடியும்’’ கிருஷ்ணர் மெல்லச் சிரித்தபடி சொன்னார்.

‘‘என்ன, என்னைப் பற்றியேவா!’’ உத்தவர் தவித்தார். கிருஷ்ணரின் கண்களை நீர் மறைத்தது. ‘‘வேறென்ன சொல்லப் போகிறேனப்பா... இந்த உலகில் எனக்கு பிரியமானவன் யார் தெரியுமா?’’என்று கேட்டார்.

‘‘இப்படியொரு கனமான கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே. நீங்கள்தான் பதிலுரைக்க வேண்டும்’’ உத்தவருக்கு தவிப்பு இன்னும் அதிகமாயிற்று.

கிருஷ்ணர் தன் நெஞ்சைத் தொட்டு, கண்களை மூடிக்கொண்டார். சுட்டு விரலால் உத்தவரை நோக்கிக் காட்டினார். அதிர்ந்து போனார், உத்தவர்.

‘‘எனக்குப் பிரியமானவன் நீதான். ஏன்? அந்த பரமேஸ்வரன் பார்வதி, பிரம்மாதி தேவர்கள், கந்தர்வர்களை விட நீயே என் இருதயத்திற்கு நெருக்கமானவன். இன்னொன்றும் சொல்கிறேன். என் திருமார்பில் உறைகிறாளே, சாட்சாத் அந்த மகாலட்சுமி,

அவளை விடவும் நீ எனக்கு பிரியமானவன். யார் யாரோ, என்னை எப்படி எப்படியெல்லாமோ பூஜிக்கின்றனர். ஸ்தோத்திரம் செய்கின்றனர். தாசன், அடிமை என்று சுற்றிச் சுற்றி வருகின்றனர். ஆனால் உன்னைப்போல் யாரும் இல்லை, ஏனெனில், உனக்கென்று தனிமனதே இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அமைத்துக் கொள்ளவும் தெரியவில்லை. பலரின் வாழ்வில் இந்த கிருஷ்ணனுக்கென்று ஓரமாக ஒரு பங்கு இருக்கும். ‘கிருஷ்ணன் இல்லையெனில் நான் ஜெயித்திருக்க மாட்டேன். அவன் என்னை எப்படி காப்பாற்றினான் தெரியுமா? என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அவர்களிடமும் மெலியதாக நான் என்கிற அகங்காரம் ஊஞ்சல் போல ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

ஆனால், உத்தவா, நீ மொத்தமாக உன்னையே எனக்குக் கொடுத்து விட்டாய். என் நினைப்புதான் உன் நினைப்பு. நான் சிரித்தால் நீ சிரிக்கிறாய், நான் மௌனமானால் நீயும் மௌனியாகிறாய். இப்போழுதும் கூட என்னை விட்டுச் செல்லாதே என்றுதான் கதறுகிறாய். என்னோடு நீ இல்லாத போதும் எப்படிக் கிருஷ்ணா உன் கூடவே இருப்பது என்று கேட்கிறாய். அதனாலேயே, நான் உனக்கு என் உண்மை சொரூபமான ஆத்மாவைப் பற்றிக் கூறினேன். தத்தாத்ரேயருக்கு பல குருக்கள் உண்டு என்று பேசினேன். அந்த அவதூதர் கூறிய குருக்கள் எல்லோருமே என் சொரூபம்தான் என்று உனக்கு விளக்கினேன். ஆனாலும் உனக்குள் இன்னும் ஏக்கம் தீர்ந்தபாடில்லை. அதனால்தான் சொல்கிறேன். உன்னிடத்தில்தான் என் முழு அன்பும் வெளிப்படுகிறது.

உனக்குள் என்னை அப்படியே நிறைத்து விடத் துடிக்கிறேன். என்னிடத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. கவலைப்படாதே. பக்தியே வடிவெடுத்து வந்தால் உன்னைக் கண்டு வெட்கம் கொள்ளும். பக்தி உனையேகூட குருவாகக் கொள்ளும் எனில் மிகையில்லை’’ என்று பிரேமையால் உத்தவரை வர்ஷித்தார்.

உத்தவர் உடல் விதிர்த்து போட்டது. கற்சிலையாய் கிருஷ்ணர் முன்பு சம்மணமிட்டு அமர்ந்தார். மாபெரும் ரிஷியின் சமாதி அனுபவம் கண நேரத்தில் சித்தித்தது. உத்தவர் உத்தவ சுவாமி ஆனார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்கிற பரமாத்ம சொரூபத்தோடும் சகலத்தின் மூலமான, ஆதியான வஸ்துவோடு இரண்டறக் கலந்தார். கிருஷ்ணன் தனது திருவடி நிழலில் கிடக்கும் உத்தவரை மெதுவாகத் தொட்டார்.

உத்தவர் சகல உலகத்தையும் இருப்பதாகக் காட்டும் மனதிற்கும் பீடமான ஆத்மாவினின்று பகவானைப் பார்த்தார். அந்த நிலையில் ஏக வஸ்துவான, பரப்பிரம்மமான கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் திகழ் சக்கரமாய் ஒளிர்ந்தார். பிரமிப்பு ஆனந்தமாகத் தாக்க, உத்தவர் நெடுமரம் சடாரென்று சாய்வதைப்போல, ‘‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’’ என்று அரற்றியபடி திருவடி பரவினார். அந்த செம்பாதங்களை தலையில் தரித்தார்.

‘‘பகவானே, உன் திருவடிகளை எப்போதும் என் இருதயத்தில் தாங்கும் பாக்கியத்தை மட்டும் தா. வேறு எதுவும் வேண்டாம். நான் உன்னுடையவன் என்றாகி விட்ட பிறகு நீ சொல்வதைச் செய்வதே என் பணி’’ என்று உத்தவ சுவாமியின் அந்தராத்மாவிலிருந்து வாக்குகள் பீறிட்டன.

‘‘உத்தவா பதரிகாசிரமம் செல். இதய ஸ்தானத்தில் என் சொரூபத்தை நிறுத்தி தியானித்துக் கொண்டிரு. பிறகு உனக்கே புரியும்’’என்று நெருங்கிய ஸ்நேகிதனான உத்தவருக்கு கிருஷ்ணர் விடை கொடுத்தார். உத்தவர் தளர் நடையோடு அடிக்கொரு தடவை கிருஷ்ணரின் முகத்தைப் பார்த்தபடியே நடந்து நடந்து வெகுதூரம் சென்று புள்ளியாக மறைந்தார்.

இந்த கட்டத்தில் பரீட்சித் குறுக்கிட்டு சுகாச்சாரியாரை நோக்கி, ‘‘சுகதேவா, அதற்குப் பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார்?’’ என்று கேட்டார்.

‘‘பகவான் தன் யதுகுல மக்களை நோக்கி, எல்லோரும் பிரபாஸ தீர்த்தத்திற்கு வாருங்கள். துவாரகை மூழ்கப் போகிறது என்று எச்சரிக்கை விடுத்தார். யதுகுல மக்கள் தங்களுக்கு ரிஷிகளின் சாபம் இருப்பதை அறிந்தோ, அறியாமலோ பிரபாஸ தீர்த்தத்தை அடைந்தனர். தீர்த்தக் கரையினில் பொடிப் பொடியான உலக்கையின் துகள்கள் கூரிய வாள் போன்ற கோரைப் புற்களாக வளர்ந்திருந்தன. யது குலத்தவர் நீரைக் கண்டவுடன் உற்சாகம் கொண்டனர். தாங்கள் கொண்டு வந்த மைரேயம் எனும் மதுவினைப் பருகினர். மதி மயங்கி தள்ளாடினர். மதுவின் நுரை கர்வத்தையும் கொப்பளிக்க வைத்தது.  உடற் திமிரை வளர்த்தது.

 தகாத வார்த்தைகளைப் பேசத் தூண்டியது. பெரும் சண்டை அங்கு நடந்தேறியது. கைகளால் அறைந்து அடித்துக் கொண்டவர்கள், கழிகளைத் தேடி ஓடினர். பிரபாஸ தீர்த்தத்தின் ஓரமாக வளர்ந்திருந்த கூரிய கோரைப்புற்களை பிடுங்கி ஒருவரையொருவர் குத்திக் கொண்டனர். அப்பன், பாட்டன், சிற்றப்பன். பெண்கள் என்று பார்க்காது வெட்டிக் கொண்டு மாண்டு போயினர். பிரபாஸ தீர்த்தத்தோடு யதுகுல ரத்தமும் ஆறாக ஓடி கலந்தது.

ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படத் தயாரானார். ஒரு மரத்திற்கு அருகே மறைந்து அமர்ந்தார். தாமரைப் பூவின் நிறத்தை ஒத்த அவர் பாதங்களைக் கண்ட ஜரன் எனும் வேடன், ‘‘அதென்ன? செக்கச் சிவந்த மான்போல இருக்கிறதே?’’ என்று அம்பை எய்தே விட்டான். வந்து பார்த்தபோது அது பகவான் கிருஷ்ணர் என்று தெரிந்தது. ‘‘ஐயோ! இப்பேர்ப்பட்ட பாவம் செய்துவிட்டேனே...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினான். ‘‘ஐயனே, இப்போதே என்னை கொன்று விடுங்கள்’’என்று கதறினான்.

சுகப்பிரம்ம ரிஷியின் கண்களில் கண்ணீர் பெருகியது. பரீட்சித் கேவிக் கேவி அழுதான். ஆனாலும் ‘‘குருதேவா, பகவான் அடுத்து என்னதான் செய்தார்?’’என்று கேட்டான். சுகப் பிரம்மம் ஸ்ரீமத் பாகவதத்தின் முடிவானதும் முக்கியமானதுமான விஷயத்தை விளக்கத் தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக