ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஆற்றில் இறங்கும் அழகர்!


ஒவ்வோர் ஊருக்கு ஒவ்வொரு பெருமை இருப்பது போல், மதுரைக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. சித்திரை மாதம் பிறந்து விட்டால் மதுரை முழுவதுமே மங்கலக் கோலம் பூணும். சித்திரா பௌர்ணமி நெருங்க நெருங்க, வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் மதுரையில் குவிவார்கள். ‘அழகர் ஆற்றில் இறங்கும் விழா அன்று ஊரே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

மீனாட்சி அம்பிகைக்குத் திருமணம். அண்ணனான கள்ளழகர் சகல வித ஏற்பாடுகளுடன் புறப்பட்டார். அவர் வந்து சேர்வதற்குள் மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் முடிந்து விட்டது. வைகைக் கரையை நெருங்கிய கள்ளழகருக்கு விவரம் தெரிந்தது. கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர் அப்படியே வண்டியூர் போய்விட்டார்.
மற்றொரு தகவல்: முனிவரான சுதபஸ் என்பவர் நூபுர கங்கையில் நீராடி பெருமாளை நோக்கி தவம் செய்தார். அவருடைய உள்ள மும் உணர்வும் இறைவன் திருவடிகளிலேயே இருந்தன.

தவத்தில் தன்னிலை மறந்த சுதபஸின் இருப்பிடம் நோக்கி துர்வாச முனிவர், தன் ஏராளமான சீடர்களுடன் வந்தார். சுதபஸை பார்த்த துர்வாசர், ‘‘ஹ§ம்!... நாம் சிஷ்யர்களுடன் வந்திருக்கிறோம். ‘வா என்று ஒரு வார்த்தை சொல்லாமல், கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறாயா? நீ தவளையாகப் போ!’’ என்று கோபத்தில் சாபம் கொடுத்தார்.

சாபம் பலித்தது. ‘‘துர்வாச முனிவரே! எனக்குச் சாபம் கொடுத்த தாங்களே, சாப விமோசனமும் அருளுங்கள்!’’ என வேண்டினார் சுதபஸ்.

துர்வாசர், ‘‘சுதபஸ்! நீ வைகைக் கரையில் தவம் செய்து வா! சித்ரா பௌர்ணமிக்கு மறு நாள் அங்கு வரும் அழகர் உனக்குச் சாபவிமோசனம் தருவார்!’’ என்று சொல்லிச் சென்றார். அதன்படி வைகைக் கரையில் தவமிருந்தார் சுதபஸ். அப்போது அங்கு வந்த அழகர் அவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அந்த அழகர் இன்றும் ஆற்றில் இறங்கி நமக்கு அருள் புரிய வருவது கண்கூடு.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்கள் முன்பாகவே மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருக்கும் அழகர், மூன்றாம் நாள் மாலை மதுரைக்குக் கிளம்புவார். அலங்காநல்லூர் போய்ச் சேர்ந்ததும் அங்கே, அழகரைக் குதிரை வாகனத்தில் வைத்து அலங்காரம் செய்வார்கள். மதுரை எல்லையான மூன்றுமாவடி என்னும் இடத்தில், கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் ‘எதிர்சேவை நிகழ்ச்சி களை கட்ட, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குக் கள்ளழகர் வந்து சேருவார். அங்கே அவருக்கு நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படும்.
அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் செய்வார்கள். சுவாரஸ்யம் அப்போதே ஆரம்பமாகி விடும்.
ஒரு பெரிய மரப்பெட்டியில், அழகருக்கு அலங்காரம் செய்யும் பொருட்களும் வண்ண வண்ணப் பட்டாடைகளும் இருக்கும். ஸ்வாமிக்கு அலங்காரம் செய்பவர் (கண்ணால் பார்க்காமல்) பெட்டிக்குள் கையை விட்டு ஏதாவது ஓர் ஆடையை எடுத்து ஸ்வாமிக்கு அணிவிப்பார். அந்த ஆடையுடன்தான் அழகர் ஆற்றில் இறங்குவார்.

அழகர் ஆற்றில் இறங்கும்போது எந்த வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளாரோ, அதற்கேற்றாற் போல் அந்த வருடத்தின் பலன்கள் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்வாமி, பச்சைப் பட்டாடையில் வந்தால் நாடு செழிக்கும். சிவப்புப் பட்டாடையில் வந்தால், போதுமான விளைச்சலும் அமைதியும் இருக்காது, பேரழிவு உண்டாகும். வெள்ளை அல்லது ஊதா நிறம் எனில், நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள் பட்டாடையில் வந்தால், மங்கலகரமான நிகழ்ச்சி நடக்கும்.

இப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதும். ‘இந்த வருடம் அழகர் ஆற்றில் இறங்கும்போது, என்ன நிறத்தில் பட்டாடை கட்டி வருவாரோ? என்று எதிர்பார்ப்பு நிறைந்த ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஐந்தாவது நாள் சித்ரா பௌர்ணமி. அமர்க்களம்தான். ஆற்றில் இறங்குவதற்காக அழகர் தல்லாகுளத்தை விட்டுக் கிளம்புவார். கொண்டாட்டம் துவங்கி விடும். ஒருவர் மீது ஒருவர் மானாவாரியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக பட்டியலில் இடம்பெற்று விட்டாலும், முன்னோர்கள் காலத்தில் இது இல்லை.
முன்னோர்கள் காலத்தில் அழகரது வருகையையட்டி புதிதாகப் பாதை அமைப்பார்கள். தூசி கிளம்பாமல் இருக்கவும், வெயிலின் கொடுமையைத் தணிக்கவும் சாலையில் தண்ணீர் பீய்ச்சும் பழக்கத்தை வைத்தார்கள். அது, இந்தக் காலத்தில் ஒரு தனி வைபவமாகவே ஆகிவிட்டது!

அழகர் ஆற்றில் இறங்கியதும், மதுரையில் இருக்கும் ஸ்வாமியான ஸ்ரீவீரராகவப் பெருமாள், அழகரை எதிர்கொண்டு அழைப்பார். இருவரும் ஆற்றிலேயே, மாலை மாற்றி மரியாதை செய்து கொள்வார்கள். அது முடிந்ததும் சுதபஸ் (தவளையாக மாறிய) முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர், வண்டியூரை நோக்கிக் கிளம்புவார்.

வழிநெடுக வரவேற்பு பலமாக இருக்கும் அழகருக்கு. ஐந்தாம் நாள் இரவே வண்டியூரை அடையும் அழகர், மறு நாள் சந்தனக் காப்பு அலங்காரம் கொண்டு வண்டியூரில் உள்ள பெருமாள் கோயிலை வலம் வருவார்.
அது முடிந்ததும் அழகர் சர்ப்ப வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேர்வார். அங்கே அழகர், தங்க கருட வாகனத்துக்கு மாறி, சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தந்து, அங்கிருந்து மதுரை நோக்கி வருவார்.

ஆறாம் நாள் இரவு, ராயர் மண்டகப்படி மண்டபத்தில் தங்கும் அழகர், அன்று இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தரிசனம் தந்து பக்தர்களைப் பரவசப் படுத்துவார்.

ஏழாம் நாள் காலை. அழகர் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (முழுவதுமாக தந்தத்தால் இழைக்கப்பட்டது இது) தல்லாகுளம் வருவார். அங்கு அலங்காரம் கலைக்கப்பட்டு, அழகருக்குப் பூப்பல்லக்கில் அலங்காரம் நடக்கும்.

எட்டாம் நாள் காலை, ஸ்வாமி பூப்பல்லக்கில் அழகர் மலை திரும்புவார். வழியில் பல இடங்களில் பக்தர்கள் அன்போடு அழகரை வழிபடுவார்கள். ஒன்பதாம் நாள் காலை அழகர்கோவிலை அடைவார் அழகர். பத்தாவது நாள் அவருக்கு அபிஷேகத்துடன் சித்திரைத் திருவிழாவின் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும்.

நன்றி - விகடன்

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 4


ஆம்...... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள்?

பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதிபட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ, அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய்விட்டது.

""ஐயையோ! அப்படியானால், எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள்! யாகத்தின் பலனை யாருக்கு கொடுக்கப்போகிறார்களோ,'' என குழம்பி விடாதீர்கள். 

பெருமாள் பிருகுவின் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு காலில் கண் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால், எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் காரணம். ஆனால், எல்லாரது எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர், தனக்கு பெருமாளால் ஞானக்கண் போகும் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் விட்டதுதான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.

""ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயார் என் மார்பில் இருக்கிறாள் எனத்தெரிந்தும் எட்டி உதைத்தான்! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார்களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக, அவர்கள் எல்லாரையும் இறைஞ்சி, யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு, ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி, பெருமாள், பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார். ஆனால், ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்தபடியே, ""முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது, என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள், எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன்,'' என்று ஆறுதல் மொழி சொன்னார்.

பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.

"ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே!'' என நினைத்த போது,

கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது.

அவர் "அம்மா...அப்பா...' எனக் கதறினார்.

அதே நேரம், இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே, லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார்.

மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், உடனே லட்சுமி நரசிம்மரை பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை மனதில் இருத்தி "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' எனச் சொன்னால், கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன், பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன், எங்கும் பரவி நின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க, லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு, ""லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும்,'' என்றார்.

மகாவிஷ்ணு அவரிடம் சமாதானமாக, ""கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம்பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள்,'' என்றார்.

""நாங்கள் ஒரு யாகம் நடத்துகிறோம். யாகபலனை பெற தாங்கள் பூலோகம் வரவேண்டும்,'' என்று பிருகு சொல்ல, ""அவ்வாறே ஆகட்டும்,'' என பெருமாள் அருள்பாலித்தார். பிருகு புறப்பட்டார்.

மகாலட்சுமிக்கோ கடும் கோபம்.

""இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! (முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது) இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள்,'' என்று சொல்லி விட்டு, சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார். பகவான் அவளைச் சமாதானம் செய்தார்.

""லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம், அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம்.

காரணம் என்ன! அவன் தூஷணையை கைவிட்டு, நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு, என் பொறுமை பற்றி சோதிக்கவே இங்கு வந்தான். அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதித்திருக்க வேண்டும். ஆனால், கோபிக்கிறாயே!'' என்றார்.

லட்சுமி அவரிடம், ""தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும், நீர் சந்தர்ப்பவாதி. எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன்,'' என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு அவள் வந்து சேர்ந்தாள். பேரழகுள்ள ஊர்.... அதுமட்டுமல்ல! அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.

—தொடரும்  

நன்றி - தினமலர்

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 3


பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. 

அவர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர். பிருகு முனிவர் சோதிக்க வந்தவரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல், அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார். பிரம்மாவுக்கு கோபம். "இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை, எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்ம ரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்' என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கிக் கொண்டார்.  ""ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின்பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார். பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந்திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால், கொசுவுக்கு சமமான நீ, இந்த சபையை அவமதித்தாய்,'' என்று சத்தமாகப் பேசினார். பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது. ஆனாலும், அவர்  பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார்.

""நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன். உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய், வருகிறேன்,'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். 

அடுத்து அவர் சிவலோகத்தை அடைந்தார். அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலகர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ, இவர்கள் யாரையும் மதிக்கவில்லை, நந்தீஸ்வரரிடம் அனுமதி பெறவும் இல்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே, அத்துமீறி புகுந்தார்.

சிவன் கோபத்தின் பிறப்பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது, உள்ளே நுழைந்த பிருகுவிடம், ""நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது, அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு "தவசீலன்' என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன்,'' என்றவராய் திரிசூலத்தை எடுத்தார். ஆனால், அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார்.

""நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்துவிட்டது. உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும், பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே'' என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள். ஆனாலும், பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. சிவனிடமும் கோபப்படுவது போல் நடித்து, அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

"ஹரி ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மகாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப்பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மகாவிஷ்ணு துயிலில் இருந்தார். மகாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

பிருகு வந்தது மகாவிஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும், அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மகாவிஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார். "ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே' என்ற ஸ்லோகத்தை தினமும் சொல்வதுடன், பள்ளிக்கு கிளம்பும் முன் "கேசவா... கேசவா... கேசவா' என ஏழு தடவைகள் சொன்னபின், பள்ளிக்கு கிளம்பினால் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல், நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மகாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது  மட்டுமல்ல! ""ஏ நாராயணா! பிரம்மலோகத்துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ, எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு,''  என கத்தினார்.நாராயணனோ அது காதில் விழாதது போலவும், உறக்கம் கலையாதது போலவும் நடித்தார்

எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என்று தான் நினைப்பார்கள். இங்கே, பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது. 

- தொடரும்  

நன்றி - தினமலர்

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 2


ஒருவன் பசியால் மயக்கமடைந்துவிட்டால், உடனே என்ன  செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண்விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு, தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது.

"நாரம்' என்றால் "தண்ணீர்' இந்தச் சொல்லில் இருந்தே "நாரதர்' என்ற வார்த்தை பிறந்தது. பாவம் செய்தவர்களின் ஆதிக்கத்தால் உலகம் தத்தளித்த போது, உயிர் கொடுக்க வந்தவர் நாரதர். அவர், கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப்பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.

"காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்தயாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம்,'' என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார்.

"மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி... இந்த யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் ஷேமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் யாருக்கேனும் அர்ப்பணிக்கப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும்,'' என்றார்.

இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.

""முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே, அதற்கு விடையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்,'' என்று நாரதரின் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.

நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

""முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவரே எல்லாச்செயல்களிலும் வெற்றி வாகை சூடுபவராக இருப்பார். அவ்வகையில் மும்மூர்த்திகளில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கு யாகத்தின் பலனை கொடுங்கள்,'' என்றார்.

முனிவர்கள் சிக்கிக் கொண்டனர்.

""நாரதரே! நவரத்தினங்களை நம் முன் பரப்பி வைத்து, "எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள்' என்றால், எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை, உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும்,'' என்றார் காஷ்யபர்.

""ஆமாம்... இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்காக இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) எடுத்து உலக அமைதியைக் காக்க வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதே தெரியாமல் யாகம் நடத்தி என்ன பலன்?'' என்றார் நாரதர்.

நாரதரின் பேச்சு முனிவர்களை மேலும் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தம் இருப்பதாகப் பட்டது.

உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர்.

ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால், அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங்களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால், அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்க செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் யார் என்று ஆராய்ந்ததில்"பிருகு' என்னும் மாபெரும் தபஸ்வியை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதைக்கேட்டு பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார்.

பிருகு முனிவர் மகா தபஸ்வி தான்! ஆனால், பெரும் அகம்பாவி, யாரையும் மதிக்கமாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் எற்படக் காரணம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண், பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண், இந்தக் கண்ணைப் பெற்றிருந்ததால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.

நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான அவர், ஆணவத்தால் அழிந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு சொல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங்கிருந்து விடை பெற்று சென்றார். பிருகு முனிவரும் தெய்வ லோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.

-தொடரும்  

நன்றி - தினமலர்