ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 2


ஒருவன் பசியால் மயக்கமடைந்துவிட்டால், உடனே என்ன  செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண்விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு, தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது.

"நாரம்' என்றால் "தண்ணீர்' இந்தச் சொல்லில் இருந்தே "நாரதர்' என்ற வார்த்தை பிறந்தது. பாவம் செய்தவர்களின் ஆதிக்கத்தால் உலகம் தத்தளித்த போது, உயிர் கொடுக்க வந்தவர் நாரதர். அவர், கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப்பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.

"காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்தயாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம்,'' என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார்.

"மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி... இந்த யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் ஷேமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் யாருக்கேனும் அர்ப்பணிக்கப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும்,'' என்றார்.

இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.

""முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே, அதற்கு விடையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்,'' என்று நாரதரின் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.

நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

""முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவரே எல்லாச்செயல்களிலும் வெற்றி வாகை சூடுபவராக இருப்பார். அவ்வகையில் மும்மூர்த்திகளில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கு யாகத்தின் பலனை கொடுங்கள்,'' என்றார்.

முனிவர்கள் சிக்கிக் கொண்டனர்.

""நாரதரே! நவரத்தினங்களை நம் முன் பரப்பி வைத்து, "எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள்' என்றால், எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை, உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும்,'' என்றார் காஷ்யபர்.

""ஆமாம்... இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்காக இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) எடுத்து உலக அமைதியைக் காக்க வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதே தெரியாமல் யாகம் நடத்தி என்ன பலன்?'' என்றார் நாரதர்.

நாரதரின் பேச்சு முனிவர்களை மேலும் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தம் இருப்பதாகப் பட்டது.

உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர்.

ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால், அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங்களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால், அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்க செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் யார் என்று ஆராய்ந்ததில்"பிருகு' என்னும் மாபெரும் தபஸ்வியை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதைக்கேட்டு பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார்.

பிருகு முனிவர் மகா தபஸ்வி தான்! ஆனால், பெரும் அகம்பாவி, யாரையும் மதிக்கமாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் எற்படக் காரணம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண், பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண், இந்தக் கண்ணைப் பெற்றிருந்ததால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.

நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான அவர், ஆணவத்தால் அழிந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு சொல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங்கிருந்து விடை பெற்று சென்றார். பிருகு முனிவரும் தெய்வ லோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.

-தொடரும்  

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக