பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில்
கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக்காடு. பெருமாளின் 108 திவ்யதேசங்களில்
இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள். இங்கே பெருமாளுக்கு கோயிலும் இருக்கிறது. திருமங்கையாழ்வார் இந்தத் தலம் பற்றி பாசுரம் பாடியுள்ளார்.
இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஒருமுறை, ""
எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது?'' என்று திருமாலிடம் முனிவர்கள்
கேட்டனர். பெருமாள் தன்னுடைய சக்கரத்தை உருட்டிவிட்டு, ""இது எங்கே போய்
நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம்,'' என்றார். சக்கரத்துக்கு "நேமி' என்ற பெயரும்
உண்டு.
"ஆரண்யம்' என்றால் "காடு'. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம்
"நேமி ஆரண்யம்' என்றானது.
பின்னர் இதுவே "நைமிசாரண்யம்' ஆகிவிட்டது. இந்தக்
காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங்களுக்கு மூலகர்த்தா, வியாசர் எழுதிய
பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின்
வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். ஒருமுறை,
நைமிசாரண்யத்தில் வசித்த முனிவர்கள்
சூதமுனிவரை அணுகி,""சுவாமி! தாங்கள் எங்களுக்கு, "வேங்கடம்' என்னும்
மலையில் குடி கொண்டுள்ள சீனிவாசனின் வரலாற்றை உரைக்க வேண்டும்,'' என்றனர்.சூதருக்கு
மிகுந்த மகிழ்ச்சி. ""சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கிவிடும்.
நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்க
வழி செய்து கொண்டீர்கள். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு
மறுபிறப்பு கிடையாது. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலக வாழ்வு பற்றிய கவலையில்லாதவர்கள்.
எனவே , உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக்கதையைக்
கவனமாக கேட்டால் போதும், அவர்களுக்கு செல்வ வளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான
வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள்,'' என்று சொல்லி கதையை ஆரம்பித்தார்.
இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரதமுனிவர் தான். இவர் ஓரிடத்தில்
இருக்கமாட்டார். "நாரம்' என்றால் "தண்ணீர்' . ஆம்... பசியாலும், களைப்பாலும்
மயக்கமடைந்தவனின் முகத்தில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அவன் உணர்வு பெற்றுவிடுவான். கொஞ்சம் தண்ணீரைக்
குடிக்கச் செய்துவிட்டால் போகும் உயிர் திரும்பிவிடும். நாரதரும் அப்படியே. கலகங்கள்
செய்தாவது உயிர்களுக்கு நன்மை தருபவர் அவர். அதனால் தான், "தண்ணீர் போல் உயிரூட்டுபவர்'
என்ற பொருளில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே
கலகத்தை உருவாக்குவார். சில சமயங்களில் அசுரர்களை இக்கட்டில் சிக்கவைக்கும் உபாயங்களை
சமயோஜிதமாக செய்து விடுவார். அந்தளவுக்கு அவர் ஒரு தைரியசாலி.
பிரம்மனின் புத்திரர் இவர். எந்த நேரமும் "நாராயணா' என்று மந்திரம்
சொல்பவர். அவர் ஒரு நாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின்
தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளை சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின்
வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்று கொண்டிருந்தனர்.
நாரதர் பிரம்மாவிடம், ""தந்தையே! திருமால் கிருஷ்ண அவதாரம்
எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்துவிட்டனர்.
இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பொன்னாசையையும்
தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களை காப்பாற்றவும், பாவிகளை சீர்திருத்தவும், மீண்டும்
அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்க
செய்வதற்குரிய கோரிக்கையை, தாங்கள் தான் அவரிடம் எடுத்து செல்ல வேண்டும். படைத்த உங்களுக்கு
உயிர்களை பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா,'' என்றார்.
பிரம்மா நாரதரிடம்,
""மகனே! நீ கலகக்காரன் என்பது ஊர் அறிந்த உண்மை. இன்று உன் தந்தையிடமே கலகம்
செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகலலோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும்
தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்துவிடும். நாராயணனின்
திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்துவிடுவார்கள்.
அவர்களது அனுமதி பெற்றாலும் கூட, கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா!
அவர் அருகேயே செல்பவன். பாற்கடலின் மேல் நின்று
கொண்டே அவரிடம் பேசும் ஆற்றலுள்ளவன். மேலும்,
உன் வாயில் "நாராயண' நாமம் ஒலித்துக்
கொண்டே இருக்கும். சக்தி மிக்க உன்னால் அவரை எந்நேரமும் அருகில் சென்று பார்க்க முடியுமே!
எனவே நீயே போய் நாராயணனை பார்,'' என்றார். ஒருவரிடம் ஒரு விஷயத்தை சொல்லும் முன்பு,
பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன் பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில்
போய் பார்த்து கேட்டறிந்தால் தான் சரியான தகவல்களை பெற முடியும். நாராயணரிடம் புகார்
சொல்லும் முன்பு பூலோகத்தின் தன்மையை நேரில் போய் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு
ஏற்ற இடத்தைக் கண்டுபிடிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார். எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும்,
இந்த உலகத்தின் பேரில் தாம் "பூ' இருக்கிறது. "பூ' மணக்கும் தன்மையும், வாடும்
தன்மையும் உடையது, மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது.
இதுபோல் நல்லவர்கள் பலர் தங்கள்
செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச்செய்கிறார்கள்.
ஆனால், இதே உலகில் பிறந்த வேறு சிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகைவாடச் செய்கிறார்கள்.
கெட்டவர்கள் செய்யும் கைங்கர்யத்தால் உலகிலுள்ள நல்லவர்களும் வாடுகிறார்கள். இதனால்
தான் இந்த உலகை "பூலோகம்' என்றனர். இத்தகைய குணாதிசயம் கொண்ட உலகத்தை வாழச் செய்ய
வந்து சேர்ந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமலே
இங்கு வந்த காரணம் என்ன?
- தொடரும்
நன்றி - தினமலர்