புதன், 19 செப்டம்பர், 2012

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 19


'இந்த ஒட்டுமொத்த உலகையே தன் திருமேனியாகக் கொண்டவன் பரந்தாமன். அதனால், அவனுடைய அடியவர்களுக்குச் செய்யும் தொண்டையே தனக்குச் செய்கிற, தன் திருவடிக்குச் செய்கிற கைங்கர்யமாக ஏற்றுக் கொள்கிறான் அவன் என்பார்கள் சான்றோர்கள்.

ஒருவரின் காலைப் பிடித்து விடுகிறோம். மெள்ள அவர் கால் வலியைப் போக்குவதற்காகக் கைகளால் பிடித்து விடுகிறோம். வலியில் இருந்து நிவாரணம் பெற்றவர், அப்படியே தூங்கிப் போகிறார். தூங்கி எழுந்தவரிடம் கேட்டால், 'எனக்கு அவர் எங்கே கைங்கர்யம் செய்தார்? என் கால்களைத்தானே பிடித்துவிட்டார்?என்றா சொல்வார்? அவர் கால்களுக்குச் செய்கிற சேவை என்பது அவருக்குச் செய்கிற சேவை அல்லவா? அதேபோல், ஸ்ரீகண்ணபிரானின் அடியவர்களுக்குச் செய்கிற கைங்கர்யம், அவனுடைய திருவடிகளுக்குச் செய்கிற சேவைக்கு இணையானது!

'உலகில் உள்ள எல்லா உயிர்களின் திருமேனியாக, திருவுருவமாக இருப்பவன் இறைவன் என்கிறீர்கள். அப்படியெனில், ராவணனுக்குக் கைங்கர்யம் செய்தாலும், அது இறைவனுக்குச் செய்கிற சேவையாகத்தானே ஆகும்? கும்பகர்ணனுக்கும் சிசுபாலனுக்கும் செய்கிற கைங்கர்யமும் இறைவனுக்கு உரிய சேவை என்றுதானே ஆகும்?என்று சிலர் கேட்கலாம். அனுமனுக்கும் ஆழ்வார்களுக்கும் செய்கிற கைங்கர்யத்தை இவர்களுக்கும் செய்யலாம் அல்லவா என்று சிலர் கேட்பார்கள்.

இதற்கும் ஆச்சார்யர்கள் அற்புதமாக விளக்கம் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதாவது, 'ராவணனைப் போன்றவர்களுக்குத் தாராளமாகக் கைங்கர்யம் செய்யுங்கள். ஆனால், 'நான் வெறும் சரீரம் மட்டுமே! சரீரியாக இருக்கிற இறைவனுக்கு அடிமை நான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டால், தாராளமாக ராவணனைப் போன்றவர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாம்; சேவையாற்றலாம்! என்று விளக்கினார்கள்.
இங்கே ஒரு விஷயம்... 'நான் இறைவனின் அடிமை எனும் மனோபாவம் பூரணமாக இருந்துவிட்டால், அவர்கள் ஏன் இப்படி அசுரத்தனத்தில் ஈடுபடப் போகிறார்கள்?!

சரி... இந்த உலகையே தன் திருமேனியாகக் கொண்டவன் ஸ்ரீகண்ணபிரான் என்றால், எவ்வளவு பிரமாண்டமானவன் அவன் என்பதை உணரமுடிகிறதா, உங்களால்? இந்த உலகம் எத்தனைப் பிரமாண்டமானது! அந்த உலகையே தன் திருமேனிக்குள் கொண்டிருப்பவன் என்பதற்காகத்தான், அவனுக்கு 'விஸ்வமூர்த்தி எனும் திருநாமம் அமைந்தது. விஸ்வம் என்றால் ஜகத், உலகம் என்று அர்த்தம்!

அதுமட்டுமா? அப்பேர்ப்பட்ட விஸ்வமூர்த்திக்கு, மகாமூர்த்தி என்றும் ஒரு திருநாமம் உண்டு. அதாவது, ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் மத்யமும் இல்லாமல் இருப்பவன் இறைவன்! தன் அவதாரங்களில், ஸ்ரீவராக மூர்த்தமாகத் திருக்காட்சி தந்த போது, அவன் எத்தகு பிரமாண்டமானவன் என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது. வராகம் எனும் பன்றியின் உருவெடுத்து நின்றபோது, அவனுடைய காலில் தண்டை அணிந்திருந்தானாம். அந்தத் தண்டையில் சின்னச் சின்னதாகக் கற்கள் பதிந்திருந்தனவாம். உற்றுப் பார்த்தால், ஒரு கல் மேரு மலையாகவும், இன்னொரு கல் இமாலயமாகவும் திகழ்ந்ததாம்! அடேங்கப்பா... பிரமாண்டத்தின் உதாரணங்களாகச் சொல்லப்படுகிற இந்த மலைகளையெல்லாம், தன் தண்டையின் கற்களாகப் பதித்து, அணிந்திருந்தான் என்றால், ஸ்ரீமகாவிஷ்ணு எவ்வளவு மகாமூர்த்தியாகத் திகழ்கிறான் என்று பாருங்கள்!

அப்படி விஸ்வமூர்த்தியாக, மகாமூர்த்தியாக, பிரமாண்ட புருஷனாக விளங்கும் இறைவனை, பரந்தாமனை அடிபணிவதைத் தவிர, வேறென்ன வேலை நமக்கு! அவனுக்கு முன்னே வெறும் தூசுகளாக இருக்கிற நமக்கு எதற்கு கர்வமும் மமதையும்! ஆக, இப்படியான மூர்த்தங்களாக வெளிப்பட்டு, நம் கர்வத்தையும் மமதையையும் அழிக்கச் சொல்கிற தத்துவங்களை உணர்ந்து தெளியவேண்டும், நாம்!

இறைத் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருந்து, அனவரதமும் அவனின் திருப்பாதங்களைச் சரணடைந்து கிடந்தால், கர்வமற்ற, பாசாங்குகள் இல்லாத, போலித்தனம் இல்லாத மனிதர்களாக நாம் வாழலாம். அப்படி சிறப்புற வாழ்ந்தால், நமக்கு உள்ளேயும் வெளியேயும் புத்தொளி ஒன்று பரவும். அது இறைவனின் ஆசீர்வாதம்; அருட்கொடை!
 
அதனால்தான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு தீப்தமூர்த்தி எனும் திருநாமம் அமையப்பெற்றது.

தீப்தமூர்த்தம் என்றால் என்ன?

தீப்தம் என்றால் ஒளி. இந்த உலகில் உள்ள எந்தப் பொருட்கள் எல்லாம் ஒளியைத் தருகின்றனவோ, அந்தப் பொருட்கள் அனைத்துக்கும் ஒளியாகத் திகழ்பவன் இறைவனே! மிகப் பெரிய பேரொளியாகத் திகழ்கிற மூர்த்தியைக் கொண்ட பகவான், உலக மக்களின் நலனுக்காக, உலகில் உள்ள ஒளி தரும் பொருட்கள் யாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான்; இரண்டறக் கலந்திருக்கிறான் என்று அர்த்தம்!

வால்மீகி, நாரதமுனி போன்றவர்களை இறைவனுக்குச் சமமாகப் போற்றி வணங்குகிற தேசம் இது! இதற்கான காரணத்தை பராசர பட்டர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் தெரியுமா?

பகவானுக்கென தனிப்பட்ட கல்யாண குணங்கள் உண்டு. அந்தக் குணங்களில் ஒன்றிரண்டு இவர்களிடமும் இருப்பதாலேயே, இவர்கள் இறைவனுக்கு இணையானவர்களாகப் போற்றப்பட்டனர்; வணங்கப்பட்டனர் என்கிறார் பராசர பட்டர்.

அவனுடைய ஒளியின் சிறு பகுதியால், இந்த உலகத்துப் பொருட்கள் விசேஷ ஒளியுடன் இருந்து, நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது என்றால், அவனுடைய ஒரு சில குணங்களைக் கொண்டே பரந்தாமனுக்கு நிகராக ஒருவர் திகழ முடியும் என்றால், அந்தப் பொருட்கள் கிரகித்துக் கொள்வதுபோல், நாம் இறைவனைக் கிரகித்துக் கொள்ளக்கூடாதா? அவனைத் தெரிந்து அறிந்து உணர்ந்தால், அவனுடைய பேரொளியின் சிறு துகள் அளவு ஒளி நமக்குள்ளும் இறங்காதா? அந்த ஒளியுடன் இருக்கிறபோது, இருட்டுச் சிந்தனைகளும் குருட்டுப் புத்திகளும் நம்மில் இருக்காது என்பது புரிகிறதுதானே உங்களுக்கு?!

அவனுடைய கல்யாண குணங்களில் ஒன்றையேனும் நாம் உள்வாங்கிக் கொண்டு, வாழத் துவங்கிவிட்டால், நாம் செய்கிற எல்லாக் காரியங்களும் நல்லதாகத்தான் இருக்கும். நம்முடைய எல்லாச் செயல்களும் எல்லோரது நன்மைக்காகவே என்றே மாறும்! அதனால்தான் 'நல்லதை நினை; நல்லதைச் செய்என்று சூசகமாகச் சொல்லிவைத்தார்கள், பெரியோர்.

இந்த உலகில், இறைவனை விட நல்லவர் வேறு எவர் இருக்கமுடியும்? அவனுடைய ஒரேயொரு குணம் வந்துவிட்டால், நாமும் நல்லவராகத்தானே இருப்போம்?

ஸ்ரீகிருஷ்ண பக்தனாக இருங்கள்; அவனுக்குத் தாசனாக மாறுங்கள்; அவன் திருவடிக்கு அடிமை என்றே எண்ணுங்கள்; நாம் நல்லவர்களாகிப் போவோம். குறிப்பாக, மனிதர்களாகி விடுவோம்!

- இன்னும் கேட்போம்

நன்றி - சக்தி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக