கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 20

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 20



இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான, சட்டென்று புரிந்து கொள்ள முடியாத மொழி எது தெரியுமா? அதேபோல், உலகிலேயே மிக மிக இனிமையான, சொல்லிச் சொல்லிப் பூரித்து வியக்கும்படியான மொழி எது என்று அறிவீர்களா?

இரண்டுக்கும் ஒரே பதில்தான். அந்த மொழி... தமிழ். மிகத் தொன்மையான தமிழ் மொழியைப் போன்று இனிமை நிறைந்தது எதுவுமில்லை. அதனால்தான் பாரதியார், ''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்றார். சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளையெல்லாம், ஆசிரியர்களின் துணை கொண்டு படித்தால் புரிந்து உணர முடியும். ஆனால், தமிழ் அப்படியில்லை. பாடப் பாட ராகம் என்பது போல், படிக்கப் படிக்கத்தான் தமிழ் மொழியின் வளமையையும் இனிமையையும் புரிந்துகொள்ள முடியும்.

நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். அப்படியொரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் இதிலென்ன சோகம் என்றால், இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் தமிழ் படிப்பதையோ, பேசுவதையோ விரும்பவில்லை; மதிப்புக்குறைவு என்பது போல் நினைக்கிறார்கள். இந்த நிலை, மிக வேதனையான ஒன்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் விருப்பப் பாடமாக எந்தெந்த மொழிகளையெல்லாமோ கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, தமிழைப் பயிலுவதற்குக் குழந்தைகளை விடமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள்.

தமிழ் மொழியைக் கொண்டு, இறைவனை எப்படியெல்லாம் போற்றி வணங்கியிருக்கிறார்கள் தெரியுமா, நம் முன்னோர்கள்? ஒரு சின்ன வார்த்தை விளையாட்டைப் பாருங்கள். திருமாலைக் குறிப்பிடும் போது, 'ஆணல்லன், பெண் அல்லன், அலியும் அல்லன் என்று ஒரு பாடல் உள்ளது. அதாவது, கடவுள் எனும் சக்தி, பிரம்மமானது ஆண் இல்லை; அந்த சக்தி பெண்ணும் இல்லை. அலியாகவும் இல்லை என்கிறது.

இந்தப் பாடலைப் பிடித்துக்கொண்ட பௌத்தர்கள், 'ஆமாம், இதைத்தானே நாங்களும் சொல்கிறோம்! அதாவது, ஒன்றுமில்லை என்று நாங்கள் சொல்வதை வேறு விதமாகச் சொல்லியிருக்கிறது வைணவம் என்றார்கள்.
சரி... அதை விடுங்கள். ஆண் அல்லன்; பெண் அல்லன்; அலியும் அல்லன் என்பது சரியா? ஆண் என்றால் 'ன்விகுதி சேர்க்க வேண்டும்; பெண் என்றால் 'ள் விகுதி சேர்க்க வேண்டும்: ஆண் - பெண்ணைச் சொல்லாதபோது, வந்தது போனது என்று 'துவிகுதிதானே சேர்க்க வேண்டும்?! அப்படியெனில், 'ஆண் அல்லன்; பெண் அல்லள்; அலியுமல்லது... என்றுதானே சொல்ல வேண்டும்? எனில், இந்தப் பாட்டில் பிழையுள்ளதா என்ன?

இதுவொரு வார்த்தை விளையாட்டு. ஆண் அல்லன், பெண் அல்லன், அலியும் அல்லன் என மூன்றிலும் 'ன்விகுதி சேர்த்து, இறைவன் புருஷோத்தமன் என்று, அவன் ஆண் என்பதை சூசகமாக உணர்த்துகிற பாடல் அது! இறைவன் எல்லாமுமாக இருப்பவன் என்று சொல்வதும் உண்மை. இறைவன் என்று சொல்லும்போதே 'ன் விகுதி சேர்த்துச் சொல்வதும் பிழையல்ல!

இதையே... கம்பர் பெருமான், 'ஒண்ணேயென்னில் ஒண்ணேயாவான் என்று பாடுகிறார். அதில் 'ஒன்றானவன் என்றால் ஒன்றானவன்; இரண்டானவன் என்றால் இரண்டானவன்; பலதுமானவன் என்றால் பலதுமாக இருப்பவன்; இருப்பவன் என்றால் இருப்பவன்; இல்லாதவன் என்றால் இல்லாதவன் என்று சொல்லிக் கொண்டே செல்கிறார் கம்பச் சக்கரவர்த்தி.

அதாவது, இறைவன் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவன்; இலக்கணங்களை மீறியவன்; அனைத்து ஜீவாத்மாக்களிலும் உறைந்திருக்கிற பரமாத்மா. நீங்கள் எப்படியெல்லாம் நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் இருப்பவன்.

அதனால்தான், பகவானுக்கு அமூர்த்திமான் என்று திருநாமம் அமைந்தது. அமூர்த்திமான் என்றால், வெளிப்படாதவன்,  வடிவங்களுக்கு அப்பாற்பட்டவன், வடிவங்கள் இல்லாதவன் என்று அர்த்தம். அதேநேரம், அமூர்த்திமான் எனும் திருநாமம் இருப்பது போல், அதற்கு நேர்மாறாக அநேகமூர்த்தி என்கிற திருநாமமும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்டு. சதமூர்த்தி என்றும் அவனைப் புகழ்கிறார்கள்.

சதமூர்த்தி என்றால் நூறு மூர்த்திகள்; நூறு மூர்த்தங்களைக் கொண்டவன் என்று மட்டுமே அர்த்தம் அல்ல. திருமழிசை ஆழ்வார், இறைவனைப் போற்றுகிற போது ஐந்து, ஐந்து, ஐந்து... என்று இணைந்திருப்பவன் எனப் பாடுகிறார். பஞ்ச பூதங்கள், பஞ்ச கர்மங்கள், பஞ்ச யோகங்கள், பஞ்ச ஞானங்கள்... என ஐந்தைந்தாக இருக்கிற அனைத்தையும் உள்ளடக்கியிருப்பவன், இறைவன். திருமழிசை ஆழ்வார் பாடிய சுமார் 100 பாடல்களிலும்  இப்படித்தான் பாடிப் பரவசப்படுகிறார். நம்மைப் பரவசப்படுத்துகிறார். பலப் பல மூர்த்திகளைக் கொண்டவன் என்று நெக்குருகுகிறார்.

இவற்றையெல்லாம்விட புராணத்தில், 'ஷோடஸ ஸ்த்ரீ சகஸ்ராநி என்று ஸ்ரீகிருஷ்ணனைச் சிலாகிக்கிறார் பராசர பட்டர். அதாவது, 16,108 மனைவிகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ணன் என்கிறார். அதாவது, 16,108 திருமேனிகளை எடுத்தவனாம் கண்ண பரமாத்மா. இத்தனை மனைவியரைக் கொண்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை ஒருபோதும் பிரிந்ததே இல்லை. ஆனால், ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமபிரான், திருமணமான பத்தே மாதங்களில் தன் மனைவி சீதாதேவியைப் பிரிந்து தவித்தான் என்று விளையாட்டாகவும் கேலியாகவும் சொல்வார்கள்.

16,108 மனைவிகளுக்காக அத்தனை திருமேனிகளை எடுத்தவன் ஸ்ரீகண்ணன். ராசக்கிரீடையின்போது, ஒவ்வொரு கோபியருக்கும் ஒரு கண்ணனாக உருவெடுத்து வியக்க வைத்தவன் அந்த மாயவன்! அதனால்தான் அமூர்த்திமான், அநேக மூர்த்தி, சதமூர்த்தி... என்றெல்லாம் அவனுக்குத் திருநாமங்கள் அமைந்துள்ளன.

இந்த உலகம் செழிப்புறுவதற்கும், உலகத்து மக்கள் சிறப்புற்று வாழ்வதற்கும் எந்தத் தருணத்தில், எப்படி வரவேண்டுமோ அப்படியெல்லாம் வந்து நமக்கு அருளுவான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். உருவமின்றி வருவான்; உருவம் எடுத்தும் வருவான். கல்லாகவும் புல்லாகவும் வருவான். காற்றாகவும் மழையாகவும்கூட வருவான். தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டும் வருவான்; தான் யாரோ எவரோ என்பது போலவும் வந்து நின்று உதவுவான். மாயக்கண்ணனின் லீலைகளையும் அவன் எடுக்கிற திருவுருவங்களையும் எவராலும் கணித்துச் சொல்லிவிட முடியாது.

இதனால்தான், 'அவ்யக்தஹா எனும் திருநாமமும் அமையப் பெற்றான், இறைவன். 'அவ்யக்தஹா என்றால், வெளிப்படாதவன், புலப்படாதவன் என்று அர்த்தம். தன் பெருமைகளைத் தானே அறியாதவனாக, மனிதப் பிறப்பெடுத்து, தன்னை மறைத்துக் கொண்டவன் அல்லவா இறைவன்! அதனால்தான் அவனுக்கு இந்தத் திருநாமம்.

சத மூர்த்தியாக, நூறு நூறு மூர்த்திகளையும் கீர்த்திகளையும் கொண்ட மகா மூர்த்தி பகவான். எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான்; எல்லாமுமாகவே அவன் உறைந்திருக்கிறான்!

சரி... இத்தனைப் பிரமாண்டமானவனை, மாயக்கண்ணனை, எல்லாமுமாக இருப்பவனை எப்படி நெருங்குவது? அவனின் அருளை எவ்விதம் பெறுவது?

இதற்கும் பகவானே வழி சொல்கிறார்...

பகவத்கீதையில் இப்படி நம்மைப் போல் தவித்து மருகி நிற்கிற அர்ஜுனனிடம், ''யக்ஞம், யாகம், தபஸ் போன்றவற்றைச் செய்தால் என்னை அறிந்துவிடலாம், நெருங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்டவன் நான். பக்தி எனும் ஒன்றால் மட்டுமே என்னை அறியவும் நெருங்கவும் முடியும்!'' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

பக்தி என்பது அன்பின் மற்றொரு வடிவம். பக்தி என்பது தேடலின் ஆரம்பப் புள்ளி. தேடலுடன் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டால், அந்த அழகுக் கண்ணன், தேடியும் ஓடியும் வருவான் நம்மிடம்!

- இன்னும் கேட்போம்  

நன்றி - சக்தி விகடன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை