உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தை அல்லது தூரத்து உறவுக்காரரின் குழந்தையைப் பார்க்கிறீர்கள். அந்தக் குழந்தையின் பெயர் தெரியாது உங்களுக்கு. அப்போது, அந்தக் குழந்தையை... 'ராமா, வாடா’ என்று அழைப்பீர்களா? 'வாமனா இங்கே வா, சாக்லேட் தரேன்’ என்று சொல்வீர்களா? 'நரசிம்மா, பக்கத்துல வந்தேன்னா, ஒரு கதை சொல்லுவேன்’ என்று அழைப்பீர்களா?
எல்லாமே பகவானின் திருநாமங்கள்தான்; திருமாலின் பெயர்கள்தான். ஆனால், 'கண்ணா, இங்கே வாடா!’ என்றுதான் கூப்பிடுவோம். கண்ணனின் திருநாமத்துக்கு மட்டுமேயான பெருமை அது!
கண்ணன் என்பவன் அழகானவன். அனைவரையும் ஈர்ப்பவன். அந்த அழகை, 'கஸ்தூரி திலகம் லலாட படலே...’ எனும் ஸ்லோகம் அழகுற விவரிக்கிறது.
ஒருவரைப் பார்க்கிறபோது, முதலில் அவர் முகம் பார்ப்போம். அப்படிப் பார்க்கிற வேளையில், சட்டெனத் தட்டுப்படுவது அவரின் நெற்றிதான். அந்த நெற்றி நிர்மலமாக, ஒன்றுமில்லாததாக இருந்தால் நன்றாகவா இருக்கும்?! நெற்றியில் விபூதியோ, கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீசூர்ணத்துடன்) ... அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக் கொள்ளவேண்டும்.
நெற்றியில் (ஸ்ரீசூர்ணத்துடன்) திருமண் வைத்திருப்பதற்கு உங்களையும் என்னையும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சாட்ஷாத் ஸ்ரீகண்ணனையே எடுத்துக் கொள்வோம். அவனே எப்போதும் திருமண் (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொண்டுதான் காட்சி தருகிறான்.
திருமண் என்பது, பகவானின் திருவடி. அவனுடைய திருவடியை நாம் நம் சிரசில், நெற்றியில் சூடிக் கொள்வதாக ஐதீகம். ஆனால், பகவானே தன் நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டிருக்கிறானே?! அது எவருடைய திருவடி?
சீதாதேவிக்கும் ஸ்ரீராமபிரானுக்கும் பங்குனி மாத உத்திர நட்சத்திர நன்னாளில் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் 364 நாளும் இல்லாத ஒரு விஷயம், பங்குனி உத்திர நாளில் நடைபெறும். அந்த நாளில், ஏக சிம்மாசனத்தில் அதாவது ஒரே சிம்மாசனத்தில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். அதுமட்டுமா? பெருமாள் எப்போதுமே தெற்கு வாசல், பிராட்டி எப்போதுமே வடக்கு வாசல் என்று இருக்கிற ஸ்ரீரங்கத்தில், அன்றைய நாளில், தாயார் சந்நிதிக்கு வந்து எழுந்தருள்வார் பெருமாள்.
திருமணமாகி பெண்கள் புகுந்த வீட்டுக்குச் செல்கிறார்களோ இல்லையோ, வேட்டகத்துக்கு அதாவது பெண்ணின் வீட்டுக்கு, மாப்பிள்ளை நிச்சயம் செல்வார் அல்லவா?! அதன் பிறகுதான் பெண்ணை அழைத்துக்கொண்டு புகுந்த வீட்டுக்குச் செல்வார்கள். அதேபோல், தாயாரின் சந்நிதிக்கு வருவாராம் பெருமாள்!
சரி... திருமண் விஷயத்துக்கு வருவோம்.
கம்ப ராமாயணத்தில், சீதா கல்யாணத்தின்போது, ஸ்ரீராமபிரானை விவரிக்கிற வேளையில், 'தன் திருநாமத்தை தானே சார்த்தி...’எனப் போற்றுகிறார் கம்பச்சக்கரவர்த்தி.
எதற்காக அவரே திருமண் இட்டுக் கொண்டாராம்?!
வைஷ்ணவ அடியவர்கள் அனைவரும் திருமண் (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொள்கிறார்களே, நாமும் இட்டுக்கொண்டு பார்ப்போமே என விரும்பினாராம் பகவான். 'கற்கண்டு சாப்பிட்டேன். எவ்வளவு சுவையாக, பிரமாதமாக இருக்கிறது தெரியுமா?’என்று ஒருவர் சொன்னால் போதுமா? கற்கண்டின் சுவை குறித்து காதாரக் கேட்டாலோ, அல்லது பேப்பரில் எழுதியிருப்பதைப் படித்தாலோ அந்தச் சுவையை உணர்ந்துவிட முடியுமா? இரண்டு கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால்தானே, அதன் சுவையை நம்மால் அறிய முடியும்?! அதனால், அடியவர்கள் திருமண் இட்டுக் கொள்வதால் கிடைக்கிற சுகானுபவத்தைத் தானும் அனுபவிக்க ஆவல் கொண்டார் பகவான். தவிர, திருமண் இட்டுக் கொள்ளுங்கள்; வெறும் நெற்றியாக இருக்காதீர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவும் அவர் திருமண் இட்டுக்கொண்டு காட்சியளித்தார்.
பகவானின் திருநாமங்களைச் சொல்வதும், (ஸ்ரீசூர்ணத்துடன்) திருமண் இட்டுக் கொண்டு அவனை ஸேவிப்பதும் மிகுந்த பலனைத் தரக்கூடியவை.
நம்மில் சிலர், 'விபூதி, கோபி சந்தனம், திருமண் போன்றவற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு வெளிவேஷம் போடமாட்டேன்’ என்பார்கள். இன்னும் சிலர், 'கோயிலுக்குப் போய் ஸ்வாமி கும்பிடுவதில்லை’ என்பார்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்... சுக்கிராச்சார்யர், வால்மீகி, வேதவியாசர் எனப் பெருமக்கள் அனைவரும் (ஸ்ரீசூர்ணத்துடன்) திருமண் இட்டுக் கொண்டார்கள்; ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். அவனின் பேரருளையும் பெற்றார்கள்.
நம் வீடுதான். என்றாலும் குளிக்கிற இடத்தில் சமைக்கிறோமா, என்ன? சமைக்கிற இடத்திலா படுத்துக்கொள்கிறோம்? அல்லது, வரவேற்பறையின் நடுவே நின்றுகொண்டு குளிக்கிறோமா? குளியலறையில் சமைத்தால், பருப்பும் அரிசியும் வேகாதா? வரவேற்பறையில் குளித்தால், நம் அழுக்கு போகாதா? சமையலறையில் துண்டை விரித்துக்கொண்டு படுத்துத் தூங்கினால், தூக்கம் வராமலா போய்விடும்?! ஆனால், அந்தந்த விஷயத்துக்கு என்று ஒதுக்கி வைத்து, அதன்படி செயல்படுவதுதானே முறை! கோயில்களும் அப்படித்தான். பகவானை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒன்றி, அவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டு வணங்கி வழிபடுவதற்குக் கோயில்களே சிறந்த இடம். அப்படிப்பட்ட சூழலுடன் கோயில்களை நிர்மாணித்ததே, வழிபடுவதற்காகத்தான்.
உருவமாகவும் உருவமில்லாதவனாகவும் இருப்பவன் இறைவன். ஆனால், நாம் வழிபடுவதற்கு, விக்கிரகத் திருமேனி என்பது மிகவும் அவசியமாகிறது.
அந்த விக்கிரகத் திருமேனிக்கு முன்னே நின்று கொண்டு, 'நாராயணா... நாராயணா... நாராயணா’ என்று சொல்லியோ, 'கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...’என்று ஜபித்தோ வேண்டி நில்லுங்கள். வேறு எதுவும் நீங்கள் கேட்க வேண்டாம். உங்களுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்பது பகவானுக்குத் தெரியும்?!
ஆகவே, காலையில் நீராடி, பூஜையறையில் நின்று விபூதியோ குங்குமமோ, சந்தனமோ கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொண்டு, இறைவனை முழுவதுமாகச் சரணடையுங்கள்.
நெற்றியில் உள்ள அந்தத் திருச்சின்னம், உங்கள் ஒவ்வொரு நாளிலும் பொழுதிலும் உங்களுக்குத் துணை நின்று உங்களைக் காப்பாற்றும். எந்தவொரு தவறான பாதைக்கும் செல்லாமல், உங்களை வழிநடத்தும்!
திருமண் என்பது திருச்சின்னம் மட்டுமல்ல; அது பகவானின் திருவடி. பகவானின் திருவடியை திருச்சின்னமாகக் கொண்டுவிட்டால், தவறான பாதையில் நீங்கள் திசை மாறவே முடியாது!
ஸ்ரீகிருஷ்ணருக்கு 'ஏகஹ... ந ஏகஹ’ என்றொரு திருநாமம் உண்டு. அவன், ஒருவனாகவும் இருப்பவன்; ஒருவன் அல்லாதவனாகவும் அதாவது எதுவும் அற்ற நிலையிலும் இருந்து அருள்பவன்!
அவன் திருவடியை திருமண்ணாக இட்டுக் கொள்ளுங்கள். உங்களை நல்ல வழிக்கு இட்டுச் செல்வது அவன் பொறுப்பு!
- இன்னும் கேட்போம்
நன்றி - சக்தி விகடன்