உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக்கிறது. அந்தக் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும்.
அது என்ன என்கிறீர்களா?
நம் சந்ததிகளுக்கு, அதாவது அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருவது! அந்தச் சொத்துக்களைக் கொண்டு, நம் குழந்தைகள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும், குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ்வார்கள் என்பது உறுதி!
ஒரு நிமிஷம்... இங்கே சொத்து என்று நான் காசு - பணத்தையோ, வீடு - வாசலையோ சொல்லவில்லை; நிலங்களையும் தோப்புகளையும் சொத்து என்று நினைத்துவிடாதீர்கள். வாகனங்களையும் நகைகளையும் சேர்த்து வைத்தால், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
நான் சொல்கிற சொத்து இவையல்ல! அந்தச் சொத்து அளவிடற்கரியது; நாம் நன்றாக இருக்கவேண்டும், அடுத்தடுத்த சந்ததிகளும் குறைவின்றி நிறைவுடன் வாழவேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசை ஆசையாக வைத்துவிட்டுப்போன அற்புதமான சொத்து. நமது பூர்வீகச் சொத்து!
அந்தச் சொத்து... மகாபாரதம்! வேதவியாசர், பீஷ்மர் போன்றோர் நமக்கு அருளிய மிக உயர்ந்த சொத்து இது.
இதில் நம் கடமை என்ன என்கிறீர்களா?
இவை எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியினரும் மகாபாரதத்தைப் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, உய்யவேண்டும்; இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்! அவர்கள் கொடுத்திருக்கிற அளப்பரிய சொத்தான மகாபாரதத்தை, பகவத்கீதையை, இறைவனின் சகஸ்ர நாமங்களைச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமது முக்கியமான கடமை! இதுதான் வேதவியாசர், பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களுக்கு நாம் செய்கிற பிரதியுபகாரம்.
அதேநேரத்தில், வாழையடி வாழையாக வளரக்கூடிய நம் சந்ததிக்கு இதனைச் சரியாகவும் முறையாகவும் எடுத்துச் சென்றோம் என்றால், அவர்கள் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்!
'என்னதான் சொன்னாலும், மகாபாரதம் படிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே..! அவ்வளவு சுலபத்துல புரியாதே!’ என்று மலைக்கத் தேவையே இல்லை.
இன்றைய காலகட்டத்தில், வேதங்கள் தெரிந்த நல்ல அறிஞர்கள் பலர், மகாபாரதத்தைச் சுவையாகவும் எளிமையாகவும் அழகுறத் தந்துள்ளனர். அவை அனைத்துமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம் தாத்தாக்களும் அப்பாக்களும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து, கீதையின் சாரத்தையும் ஸ்ரீகிருஷ்ண நாமங்களையும் தெளிவுறத் தெரிந்து வைத்துள்ளனர். கொஞ்சம் நம் வீட்டு அலமாரிகளிலும் பரணிலும் தேடினாலே, அந்தப் புத்தகங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது, கடைகளில் இருந்து அந்தப் புத்தகங்களை வாங்கி, நம் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கலாம்.
இன்னொரு விஷயம்... ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில், நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து, ஸ்ரீபகவத் கீதையையும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.
இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!
பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி. அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான். கடைக்காரரிடம் 'ஒரு வாழைப்பழம் வேண்டும்’என்று கேட்க, உடனே கடைக்காரர், 'கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’என்றார். உடனே பழம் வாங்க வந்தவர், 'அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’என்று சோகத்துடன் கேட்டாராம்! அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!
சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!
'என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு... கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’என்று குழப்பமாக இருக்கிறதா?
கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!
ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான். ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி. அதாவது பரமாத்மா! 'நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ... ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள். ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!
அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ''பீஷ்மர் என்பவர் ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்'' என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.
இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர். 'நான் சொன்ன கீதையே போதும்; அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள். மாறாக, 'ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான். அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!
இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... மனசு, தாமரையாய் பூரிக்கும்; பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில், ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!
- இன்னும் கேட்போம்
நன்றி - சக்தி விகடன்