கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 3

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 3


பத்து அவதாரங்களைக் கடந்தும் பலப்பல அவதாரங்களை எடுத்துள்ளான் பரந்தாமன். இருப்பினும், பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் போற்றி வருகிறோம். அதிலும் குறிப்பாக, இரண்டு அவதாரங்களை மட்டுமே பூர்ணாவதாரம் எனக் கொண்டாடுகிறோம். ஒன்று... ராமாவதாரம்; மற்றொன்று, கிருஷ்ணாவதாரம்.

இந்த இரண்டு அவதாரங்களும் மண்ணுலகில் இருந்த காலங்கள், அப்போது சேவை சாதித்தவை, அவதாரங்களின் அருளைப் பெற்ற கூட்டம், தரிசித்துச் சிலிர்த்த மக்கள் எனப் பல காரணங்களால், இவை பூரணத்துவம் பெற்றிருக்கின்றன.

 இந்தப் பூவுலகில், ஸ்ரீராமபிரான் 11 ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து, ராஜபரிபாலனம் செய்து, எப்படி வாழவேண்டும் என்பதை உலகத்து மக்களுக்குக் காட்டியுள்ளார்; பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 125 சம்பத்சரங்கள் வாழ்ந்து, கண்ணில் பட்ட அனைவருக்கும் க்ஷேமங்களை அள்ளித் தந்தார் என விவரிக்கிறது சாஸ்திரம். ஆக, இந்த இரண்டு அவதாரங்களின் பூரணத்துவத்தை,
அவர்கள் வாழ்ந்த காலங்களையும், அவர்களால் வாழ்ந்த பெருமக்களையும் நினைத்துப் பார்த்தாலே உணரமுடிகிறது, இல்லையா?!

ஸ்ரீராமாவதாரம் என்று சொன்னாலும், அதை முழுமை யாக விவரிப்பது 'ராமாயணம்என்றபோதிலும், அது... சீதையின் பெருமையைத்தான் அதிகம் விவரிக்கிறது; அவளை மையப்படுத்தியே கதைகள் சொல்லப்பட்டுள்ளன; கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றித்தான் அதிகம் சொல்லப்பட்டுள்ளன. அதிலும், சகஸ்ரநாம அத்தியாயம் என்பது, பகவானின் லீலாவிநோதங்களையும், அவரின் அற்புதங்களையும் அழகுற விவரிக்கிறது.

அதுமட்டுமா? அதன் பாட்டுடைத் தலைவனே ஸ்ரீகிருஷ்ணன்தானே! காவிய நாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களையும், அந்தத் திருநாமத்துக்கான விளக்கங்களையும் அழகுறச் சொல்லும் அத்தியாயத்தைக் கேட்பதும் படிப்பதும் எத்தனை புண்ணியம் நிறைந்தவை, தெரியுமா?!

இன்னொரு விஷயம்... பேசுவதைவிடக் கேட்டலே நன்று! உபந்யாசம் செய்பவரைக் காட்டிலும், அதன் கருத்துக்களைக் கூர்ந்து, ஆழ்ந்து கேட்பவர்களுக்குத்தான் புண்ணியங்கள் சேருகின்றன; மனதுள் நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. ஆக, கேட்டல் என்பது மிகமிகச் சுகமானது; சுதந்திரமானதும்கூட!

சரி... அப்படி சகஸ்ரநாம அத்தியாயத்தை முதன்முதலில் கேட்டு, உள்ளம் பூரித்தது யார் தெரியுமா?

சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்? அதாவது, பகவான் கிருஷ்ணர் சொன்ன கீதோபதேசத்தைக்காட்டிலும், அவரின் திருநாமங்களைச் சொல்கிற அத்தியாயத்தை அவரே காது கொடுத்துக் கேட்டார்; கிறங்கினார். அதனால்தான், பாட்டுடைத் தலைவன் கேட்டதை, நாம் பாடினாலும் மனம் ஒன்றிக் கேட்டாலும் நமக்குள் சத்விஷயங்கள் அரங்கேறும் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றனர் ஆச்சார்யர்கள்.

சகஸ்ரநாம அத்தியாயத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

பகவானின் ஒவ்வொரு திருநாமமும் வெறும் பெயர்கள் அல்ல; அவனுடைய கல்யாண குணங்களை மிக எளிமை யாகச் சொல்பவை; கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், மிகப் பெரிய குணத்தை, ஒற்றைத் திருநாமத்தின் மூலமாக நமக்கு உணர்த்துபவை!

பகவானின் ரூபம் பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது. பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை; வியூக மூர்த்தம் என்பது திருப்பாற்கடலில் காரண- காரியத்துக்காக திருமால் கொண்ட திருக்கோலம்; விபவாதாரம் என்பது அவதாரக் கோலங்கள்; அந்தர்யாமி என்பது நமக்குள் இருக்கிற இறைத்தன்மையின் அரூப நிலை; அர்ச்சாவதாரம் என்பது இன்றைக்கு திருக்கோயில்களில் கருவறையில் குடிகொண்டிருக்கிற இறைத் திருமேனி! எத்தனைத் திருவுருவங்கள் இருந்தாலென்ன... பரந்தாமன் ஒருவனே! எத்தனைத் திவ்விய நாமங்கள் கொண்டால் என்ன... இறைவன் ஒருவனே!

இறைவன் போற்றுதற்கு உரியவன்; அவனை எப்படி வேண்டுமானாலும் போற்றலாம்; போற்றித் துதி பாடலாம்! அதன் முதல் கட்டமாக, அவனைப் போற்றுகிற முதல் திருநாமம்... வசுரேதாஹா!

அதாவது, இறைவன் தேஜஸ் கொண்டவன்; பளிச்சென்று காட்சி தருபவன்; கடவுள் என்பவரைத் தரிசிக்க ஆயிரம் கண்கள்கூடப் போதாது. ஏனெனில், ஒளிமயமானவன் அவன். ஜோதி வடிவமே பகவான். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து புறப்பட்ட சுடரொளியானது, தேவகியின் வயிற்றில் சென்று கர்ப்பமாகத் தரித்தது என்கின்றனர். தேவர்களையும் உலகத்தையும் கம்சனிடம் இருந்து காப்பதற்காக, கடவுள் தாமே ஜோதியாக வந்து, தேவகியின் கர்ப்பப்பைக்குள் புகுந்துகொண்டார் என்றால், இந்த உலகைக் காப்பதில் பகவானுக்கு இருக்கிற கடமையையும் கருணையையும் நாம் உணரவேண்டும்.

ஆக, பகவானின் திருநாமங்களைக் கேட்டாலோ சொன்னாலோ புண்ணியம்தான்! ஆனால்... அது ஒன்று மட்டுமே நமக்கு மோட்சத்தைக் கொடுக்கும் என நினைத்துவிடக்கூடாது.

பிற உயிர்களிடத்தில் கருணை, இறைவனிடத்தில் பக்தி இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். கடவுளின் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... உள்ளே நம் மனதுள் பேரமைதி மெள்ள மெள்ளப் பரவும். அமைதி இருக்கிற இடத்தில், ஆரவாரத்துக்கு வேலையில்லை; அலட்டல் அங்கே இருக்காது. அலட்டலும் கர்வமும் இல்லையெனில், அங்கே அடுத்தவர் பற்றிக் கருணையுடன் சிந்திக்கத் துவங்கிவிடுவோம்.

பிற உயிர்களிடம் காட்டுகிற கருணையும், அமைதியான உள்ளமும் கொண்டிருக்க... அங்கே கடவுள் குறித்த சிந்தனை, அவன் மீதான அளப்பரிய பக்தி நம்மையும் அறியாமல் அதிகரிக்கும். பக்தி அதிகரிக்க, அதிகரிக்க... கடவுளுக்கும் நமக்குமான தொலைவு சுருங்கிக்கொண்டே வரும். அந்த அண்மை, ஆண்டவனிடம் இன்னும் இன்னும் என்று மனம் ஒன்றச் செய்யும். 'நீயே கதிஎன்று பகவானது திருவடியைப் பற்றிக் கொள்ளத் தூண்டும். ஒருகட்டத்தில், ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக்கொண்டே திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டே, வேறு எதையும் சிந்திக்காத நிலை ஏற்படும். அதன் பெயர்... சரணாகதி! இறைவனின் திருவடியில் சரணடைந்துவிட்டால், நமக்கு மோட்சம் என்பது நிச்சயம்!

இவை அத்தனைக்கும் ஆரம்பமாக இருப்பது, பகவானின் திவ்விய நாமங்கள்! அவனது நாமங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால், மனதில் படர்ந்திருக்கிற இருள் மறைந்துவிடும்; மெள்ள மெள்ள ஒளி ஊடுருவி, உள்ளுக்குள் வியாபிக்கத் துவங்கிவிடும்.

ஏனெனில், ஜோதி வடிவானவர் ஸ்ரீகிருஷ்ணர்!

- இன்னும் கேட்போம்

நன்றி - சக்தி விகடன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை