ராமானுஜர் - பரணிபாலன் - 22

ராமானுஜர் - பரணிபாலன் - 22



கும்பலாக வந்தவர்கள் வேறு யாருமல்ல! அந்த காட்டில் வசிக்கும் மக்கள் தான். அவர்களது கையில் பழங்களும், விறகும் இருந்தன. அவற்றை ராமானுஜர் முன்பு அவர்கள் வைத்தனர். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களது அன்பான காணிக்கையை ஏற்றுக்கொண்டார் ராமானுஜர்.

கிரிமிகண்டனின் தாக்குதலால், ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே உள்ள காட்டில் தஞ்சம் புகுந்தார். அக்காட்டுப்பகுதிக்கு ராமானுஜரின் சீடர்களான எம்பார், முதலியாண்டான், பிள்ளை உறங்காவில்லிதாசர் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். கிரிமிகண்டன், வேவுபார்க்க ஒற்றர்களை அனுப்பி, ராமானுஜரைக் கைது செய்து விடுவான் என்ற அச்சத்தில் இடைவிடாது பயணத்தைத் தொடர்ந்தனர். சோழநாட்டின் காட்டுப்பகுதியை கடக்கும் வரை உணவு, உறக்கம் இல்லாமல் தவித்தனர்.

இடைவிடாமல் நடந்ததால், உடல்வலியும், கல்லும், முள்ளும் குத்தியதால் உடலெங்கும் ரணமும் ஏற்பட்டது. வழியில் கண்ட பாறையில் படுத்தவர்கள் கண்ணயர்ந்து விட்டனர். இந்த நேரத்தில் தான், கிராம மக்கள் ராமானுஜர் மற்றும் சீடர்கள் அருகே வந்தனர். அவர்களை பனி வருத்தாமல் இருக்க காய்ந்த சுள்ளிகளை எரித்து தீமூட்டி வைத்தனர். இதமான இளஞ்சூடு அவ்விடத்தில் பரவியதைக் கண்ட ராமானுஜரும், சீடர்களும் கண்விழித்தனர்.

எதிரில் காத்திருந்த மக்கள் அவர்களை வணங்கினர். எம்பெருமானின் அருளால் நல்ல மனம் கொண்ட காட்டுவாசிகளின் ஊருக்கு வந்திருப்பதை அறிந்து அவர்கள் மகிழ்ந்தனர். அருகே ஓடிய காட்டாற்றில் நீராடி விட்டு, பழங்களை இறைவன் தந்த பிரசாதமாக எண்ணி விருப்பத்தோடு சாப்பிட்டனர்.

இரண்டு நாளாக பட்டினி கிடந்த அவர்களுக்கு, பழங்கள் தேவாமிர்தமாக இனித்தன.

அவர்களிடம் பேச்சுக் கொடுத்த ராமானுஜருக்கு, சோழநாட்டின் எல்லையைக் கடந்துவிட்டது புரிந்தது. அந்த காட்டுவாசிகளின் உதவியோடு, அவர் நாட்டுக்குள் வந்தார். ஸ்ரீரங்கதாசர் என்னும் அந்தணர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். பின், சாளக்கிராமம் என்னும் ஊரை அடைந்தார் அங்கே வடுகநம்பியின் வீட்டு விருந்தினரானார். வடுகநம்பி, ராமானுருக்கு சேவை செய்வதையே தன் லட்சியமாகக் கொண்டார். 

தொண்டனூர் நம்பி என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு தொண்டனூருக்குப் புறப்பட்டார் ராமானுஜர். அங்கு தன் சீடர்களுடன் ஒருநாள் தங்கிவிட்டு புறப்பட்டார். அந்த நாட்டின் மன்னனான விட்டலதேவன் ராமானுஜரின் பெருமையைக் கேள்விப்பட்டான்.

விட்டலதேவன் ராமானுஜரை அரண்மனைக்கு விருந்தினராக அழைத்து மகிழ்ந்தான். சமண மன்னனான அவனுடைய மகள் பிரம்ம ராட்சஷனால் பீடிக்கப்பட்டு நோயுற்றிருந்தாள். பலவிதமான வைத்தியம் செய்து குணமாகவில்லை. தன் மகளுக்கு ஒரு நல்ல வழி ராமானுஜர் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் விட்டலதேவன் அவரை அரண்மனைக்கு அழைத்திருந்தான்.

அரசகுமாரியை, ராமானுஜர் பார்த்த மாத்திரத்திலேயே அவளிடம் இருந்த கெட்ட சக்தி ஓடிவிட்டது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமணராக இருந்த விட்டலதேவன் விஷ்ணுவை முழுமுதல் கடவுளாக ஏற்றுக் கொண்டான். அவனுக்கு ராமானுஜர் "விஷ்ணுவர்த்தன்' என்று திருநாமம் இட்டார்.
அரண்மனையில் சமணர்களுக்கும் ராமானுஜருக்கும் தர்க்கவாதம் நடந்தது. இதில் ராமானுஜர் வெற்றி பெற்றார்.

விட்டலதேவனிடம் விடைபெற்ற ராமானுஜர் யதுகிரி புறப்பட்டார். அந்த இடம் தற்போது கர்நாடகாவில் மேல்கோட்டை, திருநாராயணபுரம் என்று அழைக்கப்படுகிறது. புனிதமான இத்திருத்தலத்தில் ராமானுஜர் துளசிக்காட்டில் சென்று கொண்டிருந்தார். அங்கே, புற்று ஒன்றில் அழகிய பெருமாள் சிலை இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அங்கிருந்த மக்களின் உதவியோடு புதைந்திருந்த சிலையை எடுத்து பிரதிஷ்டை செய்தார்.
அந்த சிலையை எடுக்க உதவிய மக்கள், ராமானுஜரிடம், ""சுவாமி! இங்கு திருநாராயணன் கோயில் முன்பு இங்கு இருந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அந்நியப் படையெடுப்பினால் அழிந்து விட்டது.
அச்சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய நல்ல நேரம் வந்துவிட்டது. அதனால் தான் தங்களைப் போன்ற அருளாளர்களின் திருவடி இங்கே பட்டிருக்கிறது, '' என்று சொல்லி மகிழ்ந்தனர்.

""நீங்கள் சொல்வது உண்மை தான்! நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் திருநாராயணன் காட்சியளித்து, தான் ஒரு புற்றுக்குள் இருப்பதாகவும், வெளியில் எடுத்து மக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், எனக்கு அன்புக் கட்டளையிட்டார். அதையே நான் செய்தேன்,'' என்றார். அவ்விடத்தில் மிகப் பெரிய கோயிலை நிர்மாணித்தார்.

இங்குள்ள கல்யாணி தீர்த்தத்தின் கரையில் ராமானுஜர் நடந்து கொண்டிருந்தார். குளத்தின் வடக்கில் வெள்ளைநிற திருமண் கட்டிகளைக் கண்டு மகிழ்ந்தார். அதற்கு முன்புவரை, நெற்றிக்கு இடும் திருமண்ணுக்காக தொண்டனூர் செல்ல வேண்டியிருந்தது. அந்த சிரமம் அன்றோடு தீர்ந்தது.
மீண்டும் ஒருநாள் கனவில் தோன்றினார் திருநாராயணன்.

""ராமானுஜா! உன் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம். இக்கோயிலின் உற்ஸவர் செல்வப்பிள்ளை தற்போது டில்லி பாதுஷா அரண்மனையில் இருக்கிறது. நீரே அதை மீட்டுக் கொண்டு வருவதற்கு தகுதியான நபர். அதனால், உடனடியாக டில்லி சென்று வருவாயாக!'' என்றார்.

தன் சீடர்களுடன் ராமானுஜர் டில்லி சென்றார். அவருடைய தெய்வீகத் தோற்றத்தைக் கண்ட பாதுஷாவும், செல்வப்பிள்ளையைப் பெற்றுச் செல்ல அனுமதியளித்தார். அரண்மனை கருவூலத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு சிலையைக் காட்டி, ""என் மகள் பீபிக்கு இச்சிலை மீது விருப்பம் அதிகம்,'' என்று பாதுஷா காட்டினான். ராமானுஜர் அச்சிலையைக் கண்டதும், "இதோ என் செல்லப்பிள்ளை!,' என்று கூவி அழைத்தார். அச்சிலையும் ஓடோடி வந்து அவரின் மடியில் அமர்ந்து கொண்டது. அச்சிலையை திருநாராயணபுரத்திற்கு கொண்டு வந்த ராமானுஜர் விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்.

- தொடரும்...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை