புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 21



அவருக்கு உபதேசம் செய்தார்.

இப்படியாக பல அற்புதங்களைச் செய்து சீடர்களை அதிசயிக்கச் செய்தார் ராமானுஜர்.
ஒருமுறை பெரியநம்பி கூட, ராமானுஜரின் கால்களில் விழுந்து வணங்கினார். சீடர்கள் அதிர்ந்தனர்.

""குருவே! உங்கள் குரு உங்கள் கால்களில் விழுகிறார். நீங்கள் அதைத் தடுக்கவில்லையே,'' என்றனர் சற்றே கோபத்துடன்.

அப்போது பெரிய நம்பியே சொன்னார்.

""சீடர்களே! வருந்த வேண்டாம். நான் இவரிடம் நம் குரு ஆளவந்தாரைக் கண்டேன்; அதனால் அவரைப் பணிந்தேன்,'' என்றார்.

ராமானுஜர் சீடர்களிடம், ""ஒரு சீடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியநம்பி நமக்கு காட்டியருளினார். அதனால் தான் அதைத் தடுக்காமல் இருந்தேன்,'' என்றார்.

இந்நிலையில் ராமானுஜருக்கு கடும் சோதனை வந்தது. காஞ்சிபுரத்தில் கிரிமிகண்டன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஸ்ரீரங்கத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமானுஜர் வைணவநெறி வளர்ப்பது குறித்து கவலையடைந்த அவன், ராமானுஜரை அழைத்து வரும்படி சில பணியாளர்களை அனுப்பினான். பணியாளர்கள் எல்லாருமே பருமனான தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் ஸ்ரீரங்கம் வந்து ""ராமானுஜர் எங்கே?'' என விசாரித்தனர்.

மடத்தில் ராமானுஜர் இருப்பதைஅறிந்து அங்கு சென்ற போது, விஷயம் அவரது உள்ளார்ந்த சீடரான கூரத்தாழ்வானுக்கு தெரிந்து விட்டது. அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார்.

""குருவே! உங்களை அழிக்க கிரிமிகண்டன் ஆட்களை ஏவியுள்ளான். அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரியாது. எனவே நீங்கள் என் வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு இங்கிருந்து தப்பி விடுங்கள். நான் தங்கள் காவியாடையுடன் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். ஆனால், நீங்கள் இவ்வுலகுக்கு தேவை. உங்களால் உலக மக்கள் உய்வடைய வேண்டும். என்னை அனுப்புங்கள்,'' என்றார்.

ராமானுஜர் சற்று யோசித்தார். பின்னர் சரியென ஒப்புக்கொண்டார். உடனடியாக இருவரும் உடையை மாற்றிக் கொண்டனர். ராமானுஜர் அங்கிருந்து தப்பி விட்டார். கூரத்தாழ்வான் வெளியே வந்தார். அவரை ராமானுஜர் என நினைத்துக் கொண்ட அந்த குண்டர்கள் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மன்னன் கிரிமிகண்டன் அவரை வரவேற்கவே செய்தான். ராமானுஜர் வைணவர் என்றாலும் கூட அவர் மீது மரியாதை வைத்திருந்தான். கொள்கையில் இருந்த கருத்து வேறுபாடு மட்டுமே அவனது கோபத்துக்கு காரணமாக இருந்தது. இதற்கெல்லாம் இன்னொரு காரணமும் உண்டு. ராமானுஜரின் ஆன்மிக வாழ்வின் துவக்கத்தில் அவர் ஒரு இளவரசியிடம் இருந்த பிரம்ம ராட்சஸை ஓட்டினார் அல்லவா? அந்த இளவரசியின் உடன்பிறந்த தம்பி தான் கிரிமிகண்டன். ஒரு காலத்தில், தன் சகோதரியைக் குணப்படுத்தியவர் ராமானுஜர் என்ற வகையிலும், அவன் இவர் மீது மதிப்பு வைத்திருந்தான்.

வந்தவரை ராமானுஜர் என்று நினைத்துக் கொண்ட அவன், ""ராமானுஜரே! தங்களுடன் வேறு எந்த விரோதமும் எனக்கில்லை. இவ்வுலகில் சைவம் தழைக்க வேண்டும். சைவமே அனைத்துக்கும் அடிப்படை. சிவனே முழுமுதற் கடவுள். அவரையே தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும்வழிபடவேண்டும்,'' என்றான்.

ராமானுஜராகக் கருதப்பட்ட கூரத்தாழ்வார் மன்னனிடம், ""மன்னா! சிவனை விடவும் த்ரோணம் பெரிது (சிவன் என்றால் மரக்கால். த்ரோணம் என்றால் பதக்கு என்ற அளவை. மரக்காலை விட பதக்கு அளவில் கூடியது என்ற பொருளில் இதைச் சொன்னார்) திருமாலே உலகின் முதற்பொருள். அந்த பரந்தாமனின் திருவடிகளுக்கு மட்டுமே என் தலை வணங்கும்,'' என்றார் ஆவேசமாக. அவ்வளவு தான். அங்கிருந்த புலவர்கள் அதை ஏற்காமல் எதிர்வாதம் செய்தனர். நீண்டநேரமாக வாதப்பிரதிவாதம் நடந்தது.

மன்னனுக்கு ஆத்திரம். அவர் மீது வைத்திருந்த மரியாதையை விடுத்து, ""சாமியாரே! என் சகோதரியை குணப்படுத்திய நன்றிக்காக உம்மை உயிரோடு விடுகிறேன். சிவனை பெரியவர் என ஒப்புக் கொள்கிறீரா இல்லையா?'' என்றான். கூரத்தாழ்வார் அசையவில்லை. அவர் முற்றும் தெளிந்த ஞானி. ஞானிகள் உயிருக்கு அஞ்சுவதில்லை. என்ன நடந்தாலும் சரி, தூக்கு மேடைக்கே சென்றாலும் சரி...தன் வாதமே சரியென்பதில் அவர் பிடிவாமாக இருந்தார்.

மன்னன் ஏவலர்களை அழைத்தான். ""இவரை இழுத்துச் செல்லுங்கள். இவரது தலையைக் கொய்தாலும் தவறில்லை. இருந்தாலும் செய்ந்நன்றி தடுக்கிறது. இவரது கண்களை பழுத்த கம்பி கொண்டு குத்தி குருடாக்கி விடுங்கள்,'' என உத்தரவிட்டான்.

ஏவலர்கள் கூரத்தாழ்வரின் கண்களைக் குருடாக்கினர்.

அந்தச் சூழலிலும் அவர் ஏவலர்களிடம், ""என் சகோதரர்களே! கண்ணிருக்கும் போது தெரிந்த மாய உலகம் இப்போது மறைந்து முற்றிலும் பரந்தாமன் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறான். இதற்காக உங்களுக்கு நன்றி. நீவிர் பல்லாண்டு வாழ்க,'' என்றார்.

அவர் தங்களை வாழ்த்தியதைக் கண்ட அந்த காவலர்கள் அவர் மீது கருணை கொண்டு, ஒரு பிச்சைக்காரனை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து, ""இந்த பெரியவரை ஸ்ரீரங்கத்தில் கொண்டு விட்டுவிடு,'' என்றனர். அவர்கள் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர்.

இதற்குள் தப்பிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தின் மேற்கே இருந்த அடர்ந்த காட்டுக்குள் சீடர்களுடன் புகுந்தார். அவரது பஞ்சுக் கால்களில் முள் தைத்தது. ஆங்காங்கே கற்குவியல் பதம் பார்த்தது. அவர்கள் களைத்து தாகம், பசியோடு காட்டில் சுற்றி, ஏதும் கிடைக்காமல் பாதி மயக்கத்தில் ஓரிடத்தில் அமர்ந்தனர். அப்போது காட்டுக்குள் இருந்து கன்னங்கரேலென்ற நிறத்துடன், ஒரு கூட்டம் அவர்களை நோக்கி ஓடிவந்தது.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக