முதலி! நீ என் சொந்தக்காரன். எனவே, நான் உனக்கு இந்த ஸ்லோகத்திற்குரிய பொருளைக் கற்றுத்தருவது முறையாக இராது எனக் கருதுகிறேன். ஒருவேளை நீ குற்றம் செய்தவனாக இருந்தாலும், என் உறவினன் என்ற முறையில் அது என் கண்ணில் படாது. எனவே, நீ திருக்கோஷ்டியூர் நம்பியிடம் செல்.அவரிடம் இதன் பொருளை அறிந்து கொள், என்றார்.
குருவின் சொல்லை ஏற்று, முதலியாண்டானும் அங்கு சென்றார். நம்பி அவரை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளவில்லை. அவர் பல முறை அலைந்தது கண்டு இரக்கப்பட்டு இறுதியாக, ""ராமானுஜர் போன்ற உயர்ந்தவர்கள் உறவினர்களாயினும், அவர்களது குணம் தெரிந்தே சீடர்களைத் தெரிவு செய்வர். நீ அவரையே சரணடை.
அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்,'' எனச் சொல்லி அனுப்பி விட்டார். முதலியாண்டான் ராமானுஜரிடம் வந்து நடந்ததைச் சொன்னார்.
அந்த நேரத்தில் பெரியநம்பியின் திருமகள் அத்துழாய் அங்கு வந்தாள். அவள் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது.
""அண்ணா! தங்களைக் காண அப்பா என்னை அனுப்பி வைத்தார். என் பிரச்னையைத் தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,'' என்றாள்.
ராமானுஜர் அவளிடம் மிகவும் கனிவுடன், ""முதலில் உட்கார். அமைதியாயிரு. உன் பிரச்னையை தயங்காமல் சொல்,'' என்றார்.
""அண்ணா! வீட்டில் எனக்கு என் மாமியாரால் பிரச்னை. நான் தினமும் மிகவும் தூரத்திலுள்ள குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன். அது காட்டுப்பாதை.
மிகவும் சிரமப்படுகிறேன். காலையும், மாலையும் புதுத்தண்ணீர் எடுத்து வந்து தான் சமையல் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கஷ்டமாக உள்ளது என என் மாமியாரிடம் வாய் தவறி சொல்லி விட்டேன். அவ்வளவு தான். அவளுக்குகோபம் உச்சந்தலையில் ஏறிவிட்டது.
"ஏ அத்துழாய், மனதில் பெரிய சீமான் வீட்டுப் பெண்ணென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு அலைந்து திரிந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை என்றால், உன் பிறந்த வீட்டிலிருந்து ஒரு வேலைக்காரனை அழைத்து வர வேண்டியது தானே' என கத்தினாள். என் மனது மிகவும் கஷ்டப்பட்டது. அப்பாவிடம் வந்து, மாமியார் சத்தம் போட்டதை சொன்னேன். அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து, "உன் அண்ணன் ராமானுஜனி டமே உன் பிரச்னையைச் சொல்' எனச் சொல்லி அனுப்பி வைத்தார். தாங்கள் தான் என் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்,'' என்றாள். ராமானுஜர் அவளைத் தேற்றினார்.
""சகோதரி! கவலை கொள்ளாதே, இது சிறு விஷயம். இதோ! இந்த முதலியாண்டானை உன்னுடன் அழைத்துச் செல். அவன் உன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை, தண்ணீர் எடுக்கும் வேலையை எல்லாம் கவனித்துக் கொள்வான்,'' என்றார்.
குருவின் சொல்லை ஏற்று முதலியாண்டான் அத்துழாயுடன் அவளது ஊருக்குச் சென்றார். அவளது வீட்டில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து, அவள் இட்ட ஏவல்களை முகம் சுளிக்காமல் செய்து வந்தார். அவ்வூர் மக்கள் முதலியாண்டானை சாதாரண சமையல்காரனாகவே நினைத்தனர்.
ஒருநாள் அவ்வூருக்கு ஒரு பெரியவர் வந்தார்.
வேதத்திலுள்ள ஒரு மந்திரத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். முதலியாண்டான் அக்கூட்டத்திற்குச் சென்றார். அந்த பெரியவர், தப்பும் தவறுமாக பொருள் சொல்வதைக் கேட்ட முதலியாண்டான், அவரது பேச்சை இடைமறித்தார். ""பெரியவரே! தாங்கள் சொல்லும் பொருள் சரியானதல்ல,'' என்று கூறியதும், பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.
""நீ சாதாரண சமையல்காரன். உனக்கு வேதத்தைப் பற்றி என்ன தெரியும். பேசாமல் உட்கார்,'' என்றார்.
முதலியாண்டான் அவர் கோபித்தது கண்டு, பதிலுக்கு உணர்ச்சிவசப்படவில்லை.
மிகவும் அமைதியுடன், அம்மந்திரத்துக்குரிய பொருளை மிகவும் எளிமையாகவும், விளக்கமாகவும் சொன்னார்.
கூட்டத்தினர் அசந்து விட்டனர்.
அந்தப் பெரியவர் மேடையில் இருந்து இறங்கி, முதலியாண்டானின் காலில் விழுந்து, ""தவறான பொருள் சொன்னதற்காக தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இம்மந்திரத்துக்கு பொருள் தெரிகிறதென்றால், நீங்கள் சாதாரணமானவராக இருக்க முடியாது. நீங்கள் சமையல்காரர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள் யார்?'' என்றார்.
""ஐயா! நான் ராமானுஜரின் சீடன். எனது குருநாதரின் உத்தரவுப்படி நான் ஒரு வீட்டில் சமையல் பணி செய்கிறேன்,'' என்றார்.
""ஆஹா... எவ்வளவு பெரிய மகானின் சீடர் தாங்கள்,'' என்று பாராட்டிய அவரும், அந்தக் கூட்டத்தினரும் உடனடியாக ஸ்ரீரங்கம் புறப்பட்டனர். ராமானுஜரைச் சந்தித்து, முதலியாண்டானின் பெருமையை எடுத்துக் கூறினர். ""மகானே! தாங்கள் அவருக்கு வைத்த சோதனை போதும். அவர் சற்றும் கர்வமில்லாதவர். இனியும் அவர் சமையல் பணி செய்யக்கூடாது. தாங்கள் மீண்டும் அவரை ஸ்ரீரங்கம் அழைத்து, மந்திர உபதேசம் செய்யுங்கள்,'' என்றனர். ராமானுஜர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் சீடனை பெருமைப்படுத்த எண்ணிய அவர், சீடர் இருக்குமிடத்துக்கே வந்து விட்டார்.
-தொடரும்...
நன்றி - தினமலர்