ராமானுஜர் - பரணிபாலன் - 19

ராமானுஜர் - பரணிபாலன் - 19



ஆனால், அந்த முகமாற்றம் ராமானுஜருக்கு பாதகமாகி விடுமோ என்ற நிலை இல்லை. திருமாலின் பத்தினியான லட்சுமி தாயார் அமர்ந்திருக்கும் செந்தாமரை போல் நம்பியின் முகம் மலர்ந்தது. அது மட்டுமல்ல! ராமானுஜரை அதுவரை ஒருமையில் அழைத்த நம்பிகள், திடீரென மரியாதையாக பேசினார்.

""ராமானுஜரே! தங்கள் பணிவு என்னைக் கவர்ந்தது. ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தங்களது பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்?'' என்றவர், அனைவரும் எதிர் பாராத வகையில், மற்றொரு ஏவுகணையையும் வீசினார். ""ராமானுஜரே! இனி தாங்கள் தான் என் குரு.

உங்கள் விரிந்த இதயத்தைப் பார்த்தால், நீங்கள் நிச்சயமாக அந்த மாலவனின் அம்சம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் தோன்றவில்லை. தங்கள் முன்னால், மிகவும் தாழ்ந்த நிலையில் நிற்கும், அடியேன் செய்த தவறை மன்னித்தருளுங்கள்,'' என்றார்.

ராமானுஜர் அப்படியே நம்பிகளின் காலடிகளில் விழுந்து விட்டார். ""அன்பிற்குரிய ஆசிரியரே! என்ன வார்த்தை சொன்னீர்கள். தங்களைப் போன்ற மகாத்மாக்கள் இந்த சிறியவனிடம் மன்னிப்பு கேட்பதா? தாங்கள் எவ்வளவு சக்தி மிக்கவர் என்பதை தங்களாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. உலகையே உய்விக்கும் "ஓம் நமோ நாராயண' மந்திரம் தங்கள் திருவாயிலிருந்து வந்ததால், அதன் சக்தி பல மடங்கு அதிகரித்திருக்கிறது. என்னைத் தங்கள் சீடனாக மட்டுமல்ல, மகனாகவும் நினையுங்கள். தங்கள் தொண்டனாகவே நான் என்றும் இருப்பேன்,'' என்றார், உணர்ச்சிவசப்பட்டு. அந்த அரியகாட்சி கண்டு மக்கள் சிலை போல் நின்றனர். திருக்கோஷ்டியூர் நம்பியும் விடுவதாக இல்லை.

""ராமானுஜரே! தாங்கள் என் மகன் தெற்காழ்வானை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார். குருவின் கட்டளையை ஏற்று, தன் சீடர்களுடன் திருக்கோஷ்டியூரில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் ராமானுஜர்.

இச்சம்பவம் மூலம் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விதை விதைத்த அன்றே, அது செடியாகி, மரமாகி, காய்த்து, பழம் கையில் கிடைத்து விட வேண்டும் என்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம்.

எதையும் உடனே அடைந்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், இறைவன் நம் செய்கைக்கு உடனடி பலன் தந்து விடுவதில்லை. செடி வளர ஒரு மாதம், மரமாக மாற இரண்டு மாதம், பூத்து காயாக இரண்டு மாதம், கனியாக மாற ஒருமாதம் என நம்மைக் காக்க வைக்கிறான். அப்படியானால் தான் கனிக்கு மதிப்பு. நேற்று விதை, இன்று கனி என்றால் கனிக்கு மரியாதை இருக்குமா? இதுபோல் தான், திருக்கோஷ்டியூர் நம்பி மூலமாக ஒரு விளையாடலை அந்த ரங்கநாதன் நிகழ்த்திக் காட்டியுள்ளான் என எண்ண வேண்டியுள்ளது.

"ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து) அஞ்ஞானிகளுக்கு மிகச் சாதாரணமாக பட்டிருக்கலாம். ஆனால், இதன் மதிப்பு என்ன என்பதை இச்சம்பவம் நிகழ்ந்ததன் மூலம் தான் உணர முடிகிறது. அதாவது, கஷ்டப்பட்டால் தான் எதுவும் கிடைக்கும். அப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பொருளையே கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலையும் இருக்கும். இதற்காகத்தான் குழந்தைகள் கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு அப்பொருளின் மதிப்பை உணர்த்த வேண்டும். அப்படியானால் தான் அதை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குள் வரும். எதிர்கால வாழ்க்கைக்கு இப்பழக்கம் பெரிதும் உதவும். இதை இன்னும் சில சம்பவங்கள் மூலமும் ராமானுஜர் நிகழ்த்திக் காட்டினார்.

ஒருமுறை ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான், ஒரு ஸ்லோகத்திற்கு பொருள் விளக்கம் கேட்டார். 

""எல்லாவற்றையும் துறந்து, நானே கதியென சரணடைந்தால், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்,'' என்ற பொருளில் வரும் ஸ்லோகத்திற்குரிய விளக்கமே அவர் கேட்டது. ராமானுஜர் இதற்கு உடனடியாக விளக்கம் தரவில்லை.

""கூரேசா! நீ கேட்ட இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்வதற்கு எனது குரு திருக்கோஷ்டியூர் நம்பி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதற்கு கட்டுப்படுபவர்களே இதை அறியமுடியும்,'' என்றார் ராமானுஜர்.
கூரத்தாழ்வார் அந்த நிபந்தனையை ஆவலுடன் செவிமடுத்தார்.

""கூரேசா! இதன் பொருள் அறிய விரும்புபவர் ஒரு வருடகாலம் ஐம்புலன்களையும் அடக்கி, சிறிதும் ஆணவமின்றி, குருவுக்கு தொண்டு செய்ய வேண்டும். அவரே இதன் பொருள் அறிய முடியும்,'' என்றார்.
அதற்கு ஆழ்வார், ""குருவே! தாங்கள் சொல்வதில் சிறு சந்தேகம். இந்த வாழ்க்கை நிலையற்றது. இன்னும் ஓராண்டு நான் வாழ்வேன் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படியானால், நான் இதன் பொருளை அறிய முடியாமலே போய்விடுவேனே,'' என்றார்.

""சரி... இதற்கு பதிலாக காலத்தைக் குறைக்கும் மாற்று ஏற்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு மாத காலம் பிச்சையெடுத்து வாழ வேண்டும். அப்படி செய்வது ஓராண்டு கால புலனடக்கத்திற்கு ஒப்பாகும்,'' என்றார் ராமானுஜர். கூரத்தாழ்வார் குருவின் சொல்லை ஏற்றார். ஒருமாதம் பிச்சையெடுத்தார். இதன்பிறகு அதன் பொருளை அறிந்தார்.

இதன் பிறகு ராமானுஜரின் மற்றொரு சீடரும், உறவினருமான முதலியாண்டான் இதே ஸ்லோகத்தின் உட்பொருளை அறிய ராமானுஜரை அணுகினார். அவருக்கு ராமானுஜர் வைத்த பரீட்சை கடுமையானதாக இருந்தது.

-தொடரும்...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை