சுதாரித்துக் கொண்ட பெரியநம்பி, ராமானுஜருக்கு மயக்கம் தெளிவித்தார். பின்பு ஆளவந்தாரின் அருகில் சென்ற ராமானுஜர், அவரது வலதுகையில் வித்தியாசத்தைக் கண்டார். அங்குள்ள சீடர்களை அழைத்து,
""ஆச்சாரியரின் கையைக் கவனித்தீர்களா?
இவரது மூன்று விரல்கள் மடங்கியிருக்கிறதே. அவருக்கு எப்போதுமே இப்படித்தான் இருக்குமா?'' என்றார்.
சீடர்கள் அவரிடம், ""இல்லையே! சாதாரணமாகத்தான் அவரது கை இருக்கும். இப்போது தான் விரல்கள் மடங்கியுள்ளன,'' என்றனர். ராமானுஜர், ஆளவந்தாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அழுதுகொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்திவிட்டு, அவர் என்ன செய்யப் போகிறார் என கவனித்தனர். மடமே நிசப்தமாய் விட்டது. ஆள வந்தார் இறந்தவரைப் போன்றே தெரியவில்லை. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. ராமானுஜர் அந்த முகத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல, அனைவருக்கும் தோன்றியது. அப்போது ராமானுஜர் சத்தமாக பேச ஆரம்பித்தார்.
""நான் திருமாலின் நெறியில் வாழ்வேன். மக்களின் அறிவின்மையை போக்குவேன். அவர்களுக்கு, வலதுதோளில் கரத்தையும், இடதுதோளில் சங்கையும் வேதமந்திரம் கூறி முத்திரையாகப் பதிப்பேன். திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி திருமண் கொண்டு நாமம் இடுவேன். தொண்டர்களைக் கவுரவிக்க வைணவப் பெரியவர்களின் பெயர் வைப்பேன். சீடர்களுக்கு திருமாலை வழிபட வேண்டும் என ஆணையிடுவேன். மந்திர உபதேசம் செய்து வைப்பேன்,'' என்றதும், ஆளவந்தாரின் மடங்கியிருந்த ஒரு கைவிரல் விரிந்து நேராக நின்றது.
"ஆ...இது என்ன பேரதிசயம்... இந்த இளைஞர் பேச ஆரம்பித்ததும், இறந்து போனவரின் கைவிரல் விரிகிறதென்றால், இதை விட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?' என சீடர்களெல்லாம் விக்கித்து நின்றனர்.
மீண்டும் ராமானுஜர் பேசினார். ""மக்களைப் பாதுகாக்க தத்துவ ஞானத்தை தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன்'', என்றதும், மூடியிருந்த இன்னொரு விரல் நேரானது. ""விஷ்ணு புராணத்தை எழுதியருளிய பராசர முனிவரின் பெயரை, படித்த வைணவர் ஒருவருக்கு வைப்பேன்,'' என்றதும் மூடியிருந்த மூன்றாவது விரலும் நேராக நின்றது.
இந்த அதிசயம் நிகழ்ந்ததும், ஆளவந்தார் போல, இவரே ஒரு காலத்தில் வைணவர்களின் தலைவர் ஆவார் என அங்கிருந்தோரெல்லாம் பேசிக் கொண்டனர். பின்னர் ராமானுஜர் ஊர் திரும்பி விட்டார். ஆனால், அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இளைஞருக்குரிய எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், ஏதோ முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார். பெரும்பாலான நேரத்தை திருக்கச்சி நம்பியுடன் கழித்தார்.
குடும்பத்தை கவனிக்காததால், அவரது மனைவி தஞ்சமாம்பாள் வருத்தமடைந்தார். அவருக்கு கோபம் கொப்பளித்தது. ஆனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். வீட்டுப் பொறுப்பை தனித்து ஒரு பெண்மணி கவனித்துக் கொள்வது என்பதும் சிரமம்தானே!
தஞ்சமாம்பாளுக்கு நியாயமான வருத்தமே என்றாலும், ராமானுஜர் தன் போக்கில் சென்று கொண்டிருந்தார்.
தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி திருக்கச்சி நம்பியிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்.
அவரும், ""நீர் பிராமணர், நான் பிற வகுப்பினன்,'' என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், ராமானுஜர் அவரிடம், ""என்னைத் தாங்கள் சீடனாக ஏற்காததன் காரணம், நான் அதற்கு தகுதியற்றவன் என்பதால் தானே,'' என்றும் சொல்லிப் பார்த்தார். நம்பி அவருக்கு ஆறுதல் கூறினார்.
""ராமானுஜரே! வருத்தம் வேண்டாம். வரதராஜனிடம் பக்தி கொள்ளுங்கள். இப்போது போலவே, பெருமாளின்
அபிஷேகத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள். ஆளவந்தாரிடம், நீங்கள் செய்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு தகுந்த குருவை இறைவன் வெகு விரைவில் தருவார்,'' என்றார்.
ராமானுஜருக்கோ அவர் தன்னை சீடனாக ஏற்க மறுப்பதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
"இறைவனிடம் நேரில் பேசும் ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தால் என்ன! இவரை என் குருவாக அடைந்தே தீருவேன். அதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பேன்,'என வைராக்கியம் கொண்டவராய், அவரை ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் சாப்பிட்ட மீதி உணவை, பிரசாதமாகக் கருதி, தான் உண்டுவிட்டால், அவர் நம்மைப் பாராட்டி, சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பது அவரது திட்டம்.
திருக்கச்சிநம்பி விருந்துக்கு வர மனமுவந்து ஒத்துக் கொண்டார். ""தங்களைப் போன்றவர்கள் வீட்டில் அமுதுண்ண அடியேன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,'' என்று ராமானுஜரிடம் சொன்ன அவர், குறித்தநாளில் வீட்டுக்கு வந்து விட்டார்.
தஞ்சமாம்பாளிடம் ராமானுஜர், திருக்கச்சிநம்பி தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரப்போகும் தகவலைச் சொன்னார். ஆனால், நம்பி சாப்பிட்ட பிறகு, அவர் மீதம் வைப்பதை சாப்பிடப் போகிறேன் என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் என்ற தங்கள் அந்தஸ்து இதன் மூலம் குறையக்கூடும் என மனைவி தடுத்து விட்டால் என்னாவது என்பது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ராமானுஜர் நம்பியை அழைத்து வருவதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார். அவர் தனது எச்சிலை சாப்பிடப் போகிறார் என்ற தகவல், பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிக்கு தெரிந்து விட்டது. எப்படி தெரியுமா?
-தொடரும்...
நன்றி - தினமலர்