புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 10



வருபவர் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக மிகச்சிறந்த உணவாக அமைய வேண்டும், பட்சணங்கள் சில இருக்க வேண்டும் என்றெல்லாம் மனைவிக்கு உத்தரவாயிற்று. மறுநாள் அதிகாலையே தஞ்சாம்பாள் பலவகை உணவு சமைத்தார்.

ராமானுஜர் நம்பியை அழைத்து வருவதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார். ராமானுஜர் தனது எச்சிலை சாப்பிடப் போகிறார் என்ற தகவல், பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிக்கு தெரிந்து விட்டது. பெருமாளுடன் பேசிக்கொள்பவராயிற்றே அவர்! அவரிடம் அந்த குறும்புக்கார வரதராஜன், 

""நம்பி! உன் சீடனாக விரும்பும் ராமானுஜன், நீ வைக்கும் எச்சிலை சாப்பிட முடிவு செய்திருக்கிறான். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்,'' என்று நமுட்டு சிரிப்புடன் கூறிவிட்டான்.

விடுவாரா நம்பி! "அடடா! இந்த சிறுவன் ராமானுஜனுக்கு தான் நம்மீது எவ்வளவு பக்தி! ஒரு பிராமணன், நம் எச்சிலை சாப்பிட்டால், பாவத்தை அல்லவா சுமக்க வேண்டி வரும்! வேண்டாமப்பா, வேண்டாம். ஏதாவது ஓர் உபாயம் செய்து, இலையில் இருக்கும் எச்சிலை சாப்பிட விடாமல் செய்து விட வேண்டும்' என முடிவெடுத்தார்.

ராமானுஜர் தன்னை அழைக்க, ஆஸ்ரமத்துக்கு போய் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள், விருந்தை முடித்து விட வேண்டுமெனக் கருதி, வேறொரு வழியில் ராமானுஜரின் வீட்டுக்கு சென்றார். தஞ்சமாம்பாள் இருவரின் வரவுக்காகவும் காத்திருந்தார். நம்பிகள் ஒன்றும் தெரியாதவர் போல, அம்மா! தங்கள் கணவரை எங்கே? என்றார்.

""சுவாமி! அவர் உங்களைத்தானே தேடி வந்தார்,'' என்றார் தஞ்சமாம்பாள். ""சரியம்மா! எனக்கு உணவைக் கொடுங்கள். நான் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறேன். பெருமாள் கைங்கர்யத்துக்கு அவசரமாக செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் அது தாமதமாகக் கூடாது,'' என்றார்.

அவர் எதற்காக அவசரப்படுகிறார் என்பது தஞ்சாம்பாளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவரும் வேகமாக உணவைப் பரிமாறினார். திருக்கச்சிநம்பி, பெயருக்கு சாப்பிட்டு விட்டு, அவர் கையாலேயே இலையை எடுத்து வெளியே போட்டு விட்டு, ராமானுஜர் வீட்டுக்குள் வருவதற்குள் வெளியேறி விட்டார். பிராமணர் அல்லாத ஒருவர் தன் வீட்டில் சாப்பிட்டதால், தஞ்சமாம்பாள் வழமை போல, அவர் சாப்பிட்ட இடத்தைக் கழுவிவிட்டு, மிச்சம் மீதியை வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை குளித்து, புதிதாக சமையலை தொடங்கி விட்டார்.

வெளியே சென்ற ராமானுஜர், அவசர அவசரமாய் வீடு திரும்பினார். ""தஞ்சா... தஞ்சா... நம்பி இங்கு வந்தாரா?'' அவசர அவசரமாகக் கேட்டார். ""ஆமாம் சுவாமி! அவர் உணவருந்தி விட்டு, அவசரமாக பெருமாள் கைங்கர்யம் இருப்பதாக சொல்லி சென்றுவிட்டார். அவர் சாப்பிட்ட இலையை அவர் கையாலேயே தூக்கி வீசிவிட்டார். அவருக்கு போட்ட மிச்சத்தை உங்களுக்கு எப்படி பரிமாறுவது? அதை வேலைக்காரிக்கு கொடுத்து விட்டு, வீட்டைக்கழுவி, புதிதாக தங்களுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.
இதைக்கேட்டு ராமானுஜருக்கு கோபம் வந்து விட்டது.

""அடிப்பாவி! என்ன காரியம் செய்தாய்? அவர் சாப்பிட்ட எச்சத்தை தின்றாவது, அவருக்கு சீடனாக முயன்றேனே! அத்தனையையும் கெடுத்து விட்டாயே! அவர் எவ்வளவு பெரிய மகான். பெருமாளிடமே நேரில் பேசுபவராயிற்றே. பெருமாளே ஒருவரிடம் பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதடி ஜாதி! அவர் அமர்ந்த இடத்தை கழுவிவிட்டதாகச் சொல்லி தீராத பழி தேடிக் கொண்டாயே!'' என திட்டித் தீர்த்தார். பின்னர் வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இங்கிருந்து தப்பிய திருக்கச்சிநம்பி, நேராக வரதராஜனிடம் சென்றார். ""பெருமாளே! பேரருளாளா! இதென்ன சோதனை! நான் காலமெல்லாம் உனக்கு ஆலவட்டம் வீசி சேவித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். நீயோ, என்னை ராமானுஜருக்கு குருவாக்க விரும்புகிறாயே! அவர் சாதாரணமானவரா? ராமபிரானின் தம்பியான லட்சுமணனின் அவதாரம் அல்லவா? அவருக்கு குருவாகும் தகுதி எனக்கேது? அவர் என்னை வீட்டுக்கு வரழைத்து, நான் உண்ட எச்சத்தை சாப்பிட்டு, என்னை குருவாக ஏற்று, பெரிய மனிதனாக்க பார்க்கிறார். உன் அடியவர்களுக்கு தொண்டு செய்ய விரும்பும் என்னை ஒரு அடியவனாக்கி, எனக்கு தொண்டு செய்ய ராமானுஜர் விரும்புகிறாரே! இனி கொஞ்சநாள் நான் இங்கு இருக்க மாட்டேன்.
திருமலையில் வேங்கடாஜலபதியாய் காட்சி தரும் உன் திருமுகத்தை சேவித்தபடி, அங்கேயே சில காலம் தங்கி விடுகிறேன். அதற்கு அனுமதி கொடு,'' என்று பெருமாளிடம் பிடிவாதமாய்க் கேட்டார்.

""சரி...நம்பி, எங்கிருந்தாலும், நீர் எனக்கு தான் சேவை செய்யப் போகிறீர். திருமலைக்கு வாருமே,'' என பச்சைக்கொடி காட்டிவிட்டார். திருக்கச்சிநம்பி திருமலை சென்றுவிட்டார்.

நம்பி திருமலை சென்ற தகவல் அறிந்த, ராமானுஜர் அவரது வருகைக்காக காத்திருந்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் கடும் வெயில். பேரருளாளனான வரதராஜனும் வெப்பத்திற்கு தப்பவில்லை. நம்பி திருமலை போய் ஆறுமாதம் கழிந்து விட்டது.

ஒருநாள் வேங்கடவன் அவரிடம், ""நம்பி! நீ காஞ்சிபுரத்துக்கே வா. இங்கே நான் கடும் வெயிலால் அவதிப்படுகிறேன். இச்சமயத்தில், நீ என் அருகில் இருந்து ஆலவட்டம் வீசினால், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்புவேன்,'' என்றார்.குளிர்ந்த மேனி கொண்ட அந்தக் கள்வன் நடத்திய நாடகத்தைத்தான் பாருங்களேன்!

பொறுக்குமா நம்பிக்கு.....""ஆ...வரதராஜா! இதோ, இந்தக் கணமே கிளம்பி விடுகிறேன்...'' என்றவர் காஞ்சிபுரம் வந்து விட்டார்.

- தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக