நம்பி ஊர் திரும்பியதை அறிந்த ராமானுஜர் அவரைச் சந்தித்து பேசினார். நீண்ட நேரமாக அவர்கள் பரமனின் புகழைப் பேசிக் கொண்டிருந்தனர். ராமானுஜர் அவரிடம் சில சந்தேகங்களைச் சொன்னார். ""இந்த சந்தேகங்களுக்குரிய பதிலை பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்களேன்?'' என்றார்.
நம்பியும் கோயிலுக்குச் சென்று, பெருமாளிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராமானுஜர் கேட்ட கேள்விகளை அடுக்கினார். பெருமாளும் பதில் சொன்னார். நம்பி மறுநாள் ராமானுஜரை அழைத்து, ""ராமானுஜரே! தங்கள் கேள்விக்கு பேரருளாளன் பதில் சொன்னார். அது மட்டுமல்ல, இதை உடனடியாக உங்களிடம் சொல்லியாக வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்,'' என்றார்.
ராமானுஜர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
""என்ன...பெருமாள் என் பெயரைச் சொல்லி, என்னிடமே சொல்லச் சொன்னாரா? நான் செய்த பாக்கியம் தான் என்னே! சொல்லுங்கள் சுவாமி! அதைக் கேட்க நான் ஆவலாயிருக்கிறேன்,'' என்று பரபரத்தார்.
திருக்கச்சி நம்பி, பெருமாள் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்ல, ராமானுஜர் பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார். ""பேரருளாளா! என் சந்தேகம் தீர்ந்தது, சந்தேகம் தீர்ந்தது,'' என ஆவேசமாய் கத்தினார். தன்னை மறந்து ஆடினார்.
"அப்படி என்ன தான் சொல்லியனுப்பினார் பெருமாள்?'
திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ""நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் உறுதியாக வித்தியாசம் இருக்கிறது. இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன். அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,''.
இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர். வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், ""சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை,'' என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார். மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர், சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார். ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தார் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர், ""சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை. இந்த சமயத்தில் வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவே இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன். யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆள வந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை,'' என்றார்.
சீடர்கள் இந்தக் கருத்தை ஏற்றனர்.
ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், ""சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம். ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியை அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம்,'' என்றனர்.
அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர். ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியுடன் காஞ்சிபுரம் புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார். கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான்.
"யார் இவன்? முன்பின் தெரியாதவன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே!' பெரியநம்பி அவனிடம்,
"எழுந்திரப்பா! நீயார்?' என்றார்.
-தொடரும்...
நன்றி - தினமலர்