பெரியநம்பியின் காலில் விழுந்த இளைஞர் எழுந்தார். ஆஹா...தெய்வசித்தம் என்பது இதுதானோ? யாரைத் தேடிப் போகிறோமோ, அவர் எதிரே வந்து விட்டால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்போம். அந்நிலையில் தான் பெரியநம்பி இருந்தார்.
"" ராமானுஜா! உன்னைத் தேடித்தான் நான் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கிறேன்.
ஓய்வெடுத்து விட்டு செல்லலாமென மதுராந்தகத்தில் இறைவனின் இக்குளக்கரையில் சற்றுநேரம் தங்கினோம். நீயோ இங்கேயே வந்து விட்டாய். என்ன விஷயமாக இங்கு வந்தாய்?'' என்றார் பெரியநம்பி. ராமானுஜர் மிகுந்த நெகிழ்ச்சியுடன்,""சுவாமி! நானும் தங்களைப் போலவே மகிழ்வுடன் உள்ளேன். தங்களை குருவாக ஏற்கும்படி வரதராஜப் பெருமாள் திருக்கச்சிநம்பி மூலமாக திருவாய் மலர்ந்தருளினார். என்னைத் தாங்கள் சீடனாக ஏற்க வேண்டும் என்று வேண்டியே நானும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டேன். வரும்
வழியில் உங்களைக் காண்கிறேன். நம்மை சந்திக்க வைத்தது அருஞ்செயலை அவனே செய்தான்'' என்றார்.
இதைக்கேட்டு மகிழ்வெய்திய பெரியநம்பி, ""சரி...இன்னும் இங்கு இருக்க வேண்டாம். தாமதிக்காமல், காஞ்சிபுரம் செல்வோம். அங்கே பேரருளாளனின் சன்னதியில் பஞ்ச சம்ஸ்காரம் (தீயில் வாட்டிய சங்கு, சக்கர சின்னங்களை கையில் முத்திரையிடுதல், பிரபந்தங்களை படித்தல் முதலானவை) செய்து, உன்னை சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். ஒரு வருடம் நாம் காஞ்சிபுரத்திலேயே தங்கியிருப்போம். அதன்பிறகு ஸ்ரீரங்கம் கிளம்பலாம்,'' என்றார்.
ராமானுஜர் அதைப் பணிவுடன் ஏற்றார். அது மட்டுமல்ல, உடனே அவரது சீடராக வேண்டும் என்ற ஆர்வத்தில்,
""சுவாமி, எமன் நேரம் காலம் பார்க்கமாட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், ஓடிக் கொண்டிருந்தாலும், நடந்து போனாலும்... அவன் எதையும் கண்டுகொள்ள மாட்டான். அந்நிலை எப்போதும் யாருக்கும் வரலாம். எனவே, காலத்தை வீணாக்காமல் இப்போதே புறப்பட்டு விடுவோம்,'' என்றார் ராமானுஜர்.
அவர்கள் காஞ்சிபுரத்தை அடைந்தனர். தன் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அங்கே பெரியநம்பியையும், அவரது மனைவியையும் தங்க வைத்தார் ராமானுஜர். மறுநாள் ராமானுஜருக்கும், அவரது மனைவி தஞ்சமாம்பாளுக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை பெரியநம்பி பதித்தார். அவர் சாப்பிட்ட மீதத்தை அவர்கள் சாப்பிட்டனர். இவ்வாறாக தனக்கு ஆச்சாரியார் இல்லாத குறையைப் போக்கிக் கொண்டார் ராமானுஜர்.
பாடங்கள் துவங்கின. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்விய பிரபந்தப்பாடல்களை பொருளுடன் விளக்கினார் பெரியநம்பி. பயிற்சி வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது.
இறைவன் எல்லாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏனெனில், தான் இருப்பது மனிதர்களுக்கு நினைவிருக்க வேண்டும் என்பதில் அவன் விட்டுக் கொடுக்கவே மாட்டான். "இன்பத்தை மட்டும் தா இறைவா' என யார் கேட்டாலும் அவன் கொடுப்பதும் இல்லை. எவ்வளவு புண்ணியம் செய்தவரும் அவன் தரும் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அதற்கு காரண காரியம் இருக்கும். இப்படி ஒரு துன்பம் மீண்டும் மனைவி ரூபத்தில் வந்தது ராமானுஜருக்கு.
ஏற்கனவே திருக்கச்சிநம்பியை அழைத்து உபசரித்த விஷயத்தில் மனைவி அவசரப்பட்டு விட்டதாக ராமானுஜர் அதிருப்தியில் இருந்தார். இப்போது, மீண்டும் ஒரு துன்பம் அவளால் வந்தது. ஆனால், முன்பு வந்ததை விட பேரிடியாக இது அமைந்தது.
ஒருநாள் கிணற்றடியில் தஞ்சமாம்பாள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே பெரியநம்பியின் மனைவியும் தண்ணீர் இறைக்க வந்தார்.
தஞ்சமாம்பாள் பாத்திரம் நிறைய தண்ணீர் இறைத்து வைத்திருந்தார். பெரியநம்பியின் மனைவி தண்ணீர் இறைத்த போது, தாம்புக்கயிறிலிருந்து சிதறியநீர்த்துளிகள் தஞ்சமாம்பாள் இறைத்து வைத்திருந்த தண்ணீரில் பட்டுவிட்டது. அவ்வளவு தான்! கிணற்றடி சண்டை துவங்கி விட்டது.
தஞ்சமாம்பாள் தான் சண்டையைத் துவக்கினார்.
""ஏனம்மா! இங்கே நான் தண்ணீர் இறைத்து வைத்திருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? இப்போது கயிற்றுத் தண்ணீர் இதில் தெறித்து விழுந்ததே! இதை இனிமேல் நான் எப்படி பயன்படுத்துவேன்? நான் இறைத்த பிறகு நீங்கள் இறைக்க வேண்டியது தானே! இப்போது என்ன கொள்ளை போகிறதாம்! நீங்கள் என் கணவரின் ஆச்சாரியரின் மனைவி என்பதற்காக உங்கள் அதிகாரத்தை காட்டுகிறீர்களோ! அதற்காக, நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை,'' என்று சூடாக வார்த்தைகளைக் கொட்டினார்.
அத்துடன் "சே...இதென்ன வெட்டி வேலை',என்றவராய், தண்ணீரை கீழே கவிழ்த்தார். விறுவிறுவென வீட்டுக்குள் போய் விட்டார்.
பெரியநம்பியின் மனைவி அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அந்த அம்மையாரின் கண்களில் கண்ணீர். அவர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் விசும்பிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், ராமானுஜரும், பெரியநம்பியும் வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் அவர்கள் வந்தனர். பெரியநம்பி வீட்டுக்குள் சென்றார். மனைவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ""ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?'' எனவும், நடந்ததை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார் மனைவி. நம்பியின்முகம் அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிக் கொண்டிருந்தது.
-தொடரும்...
நன்றி - தினமலர்