ஞாயிறு, 10 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 29 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 17

இஷ்டத்தை எல்லாம் கொடுக்கவேண்டும் அனிஷ்டத்தைப் போக்கவேண்டும் என்று சொன்னீர். இதையெல்லாம் செய்ய வேண்டியது சர்வேஸ்வரன் தானே என்றார் ராமானுஜர். அவரிடம் கேளும். நம்மிடம் கேட்கின்றீரே. இதைச் செய்யவேண்டியது ஸர்வேஸ்வரன் இல்லையோ. 

அந்த ஸர்வேஸ்வரன் பொறுப்பை எப்பவோ உம்மிடம் ஒப்படைத்து விட்டாராமே. அப்படித்தானே நாம் கேள்விப்பட்டோம். பொறுப்பை ஒப்படைத்தபிறகு அவரிடம்போனால் கோபம்தான் கிடைக்கும். அதுக்குன்னு ஒருத்தரை நியமித்து விட்டேன். என்னைப் பார்த்தால் நரகம்தான் என்பார் எம்பெருமான். 

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்கு உயவே        
பண்ணும் பரனும் பரிவில்னாம்படி* பல்லுயிர்க்கும்             
விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமானுசன்   
மண்ணின் தலத்துதித்து* உய் மறை நாலும் வளர்த்தனனே.      இராமானுச நூற்றந்தாதி 95.

உம்மையல்லவோ நியமித்துள்ளான். விஷ்ணு லோகத்திற்கு போவதற்கு உள்ள மார்க்கத்தைக் காட்டுவதே நீர். உம்மால் முடியாதது உண்டோ? அவதாரத்துக்காக ஸர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டருளினீர் ஆகில், அந்த ஈஸ்வரன் தான் உமக்கு வஸ்யன் அன்றோ. 

ஈஸ்வரன் பொறுப்பை ஒப்படைத்தது உண்மையே. 

ஆனாலும் அந்த ஸர்வேஸ்வரன் தான் மோக்ஷம் கொடுக்கவேண்டும், அடியேன் மனுஷன் தானே? தொண்டன் தானே? என்று ராமானுஜர் சொல்வதாகக் கொண்டு, நீர் மனுஷ்யனாகவே இரும். நீர் சொல்லும் வார்த்தையைத்தான் பகவான் கேட்கிறார். அதனால் நீர் சிபாரிசு பண்ணவேண்டும். உமக்கு வசப்படாதவரா ரங்கநாதன். உமக்கு வசப்படாதவரா திருவேங்கடமுடையான்? ஆகவே வசப்பட்ட அவர்களிடம் சொல்லி காரியத்தை ஆக்கிக் கொடும் என்று பிரார்த்திக்கிறார்.

श्रुत्यग्रवेध्यनिजदिव्यगुणस्वरूपः प्रतयक्षतामुपगतस्त्विह रङ्गराजः ।
वश्यस्सदा भवति ते यतिराज तस्माच्छक्तः स्वकीयजनपापविमोचने त्वम्॥ (17)

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: 
ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ் ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: 
ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (17)

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, 

ஸ்ருத்யக்ரவேத்ய நிஜதிவ்யகுணஸ்வரூப: – வேதத்தின் நுனியாக இருக்கிற வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க திவ்ய ஜ்ஞானம், திவ்ய ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய திவ்யஸ்வரூபமென்ன, திவ்யரூபமென்ன இவற்றை உடையவனாய், இப்படி வேதாந்தங்களின் மூலம் தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அது புஸ்தக அலமாரியில்தான் இருக்கும். ஓலைச்சுவடியில்தான் இருக்கும் என்றால் அவரை அறிய முடியுமா? 

ஆகவே ஊர் ஊரா தெருத்தெருவா கோயிலை ஏற்பாடு பண்ணிக் கொண்டு அங்கங்குபோய் நிற்கவேண்டும் சயனித்துக் கொள்ள வேண்டும் என்று பகவான் தீர்மானித்துவிட்டார். வேதாந்தத்தால் அறியமுடியும் என்பதை மாற்றி கண்ணுக்கு நேரே சேவித்துத்தெரிந்து கொள்ளலாம் என்று சயனித்துக் கொண்டீரே ஸ்ரீரங்கத்தில்.

இஹ து ப்ரத்யக்ஷதாம் உபகத: ரங்கராஜ: – இப்பூமண்டலத்திலோ என்னில் எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ஸ்ரீரங்கநாதன், இதே விஷயத்தைக் கூரத்தாழ்வான் “எம் பரோக்ஷம் உபதேச த்ரயி நேதி நேதி ...” என்றே சாஸ்திரம் சொல்ல, அதை ஏமாற்றி ஹஸ்திகிரிக்கு மேலே நின்று கண்ணுக்கு இலக்காகி நிற்கிறானே என்கிறார். அத்தகைய ரங்கராஜன் உமக்கு எவ்வளவு வசப்பட்டவர் பாருங்கள். ரங்கராஜன் சயனித்துக் கொண்டிருக்கிறார். நம்பெருமாள் நின்று கொண்டிருக்கிறார். ராமானுஜர் அமர்ந்திருந்தார். பொறுப்பைக் கொடுத்துவிட்டு பெருமாள் சயனித்துக் கொண்டுவிட்டார். நீர் உட்கார்ந்து கொண்டு ஆணையிடத் தயாராயும், அதை நிறைவேற்ற நம்பெருமாளும் நின்று கொண்டிருக்கிறாரே? நான் இனி அங்கெல்லாம் போவதாயில்லை. உம்மைத்தான் பிரார்த்திப்பதாய் இருக்கிறேன். 

தே ஸதா வஸ்ய: பவதி – தேவரீருக்கு, எப்போதும், சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், தான் ஸத்தை பெற்றவனாகிறான். (தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) 

தஸ்மாத் ஸ்வகீய ஜந பாபவிமோசநே த்வம் ஸக்த: பவஸி – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், தேவரீருடைய அடியவர்களின், தாஸ ஜனங்களினுடைய, ராமானுஜ ஸம்பந்திகள் என்று யாரெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு நீர் புருஷாகாரம் செய்யலாம் அல்லவா? – பாவத்தை விடுவிப்பதில், தேவரீர், – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

தும்பையூர் கொண்டி

எப்பொழுதும் ஆணையை மட்டும் திருவரங்கப் பெருமாள் போட்டுவிடுவார். அதை நிறைவேற்றுவது மற்ற பெருமாள்களாகும். தும்பையூர் கொண்டி என்று ஒருத்தி இருந்தாள். மடத்திற்கு தினசரி பால், மோர், வெண்ணை எல்லாம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். முதல் தேதியானால் பணம் கொடுக்க வேண்டும் அல்லவா? அப்படி பணம் கொடுக்க முயலும் போது அவள் கூறுகிறாள், “பணத்துக்காக எல்லாம் நான் மோர் கொடுக்கவில்லை. ராமானுஜர் ஏதோ பகவானுக்குச் சீட்டுக் கொடுப்பாராம். அதை வைத்துக் கொண்டு பகவான் மோக்ஷம் கொடுப்பாராம். அந்த சீட்டைப் பெற்றுக் கொடுங்கள்” என்று முறையிட்டாள். 

முதலியாண்டானுக்கும் கிடாம்பியாச்சானுக்கும் ஒரே திகைப்பு. பால்காரிக்கு இப்படி ஒரு சீட்டு இருக்கிறது என்று தெரிந்துள்ளதே பரம வித்வானுக்கு இது தெரியாமல் போய்விட்டதே? உள்ளேபோய் ராமானுஜரிடம் கேட்கிறார்கள். “ஏதோ சீட்டு வேண்டுமாம். பால்காரி கேட்கிறாளே” ஆமாம் என்று ராமானுஜர் பதில் கூறினார்.

ஸ்ரீ ராமானுஜர் சட்டென்று ஓலைச்சுவடியை எடுத்து, “இவளுக்கு மோக்ஷம் கொடுக்கலாம்,” ராமாநுசன். என்று எழுதிக் கையொப்பம் இட்டு கொடுத்துவிட்டார். அது பால்காரியிடம் சேர்க்கப்பட்டது. தும்பையூர் கொண்டி அப்பவே வியாபாரத்தை நிறுத்திவிட்டு திருப்பதி திருவேங்கடமுடையானை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். ஸ்ரீரங்கநாதர் தானே வாக்தானம் செய்தவர். ஏன் அங்கு போகவில்லை. அவர் ரங்கராஜா. உத்திரவு தான் கொடுப்பார். அதை செயல்படுத்த தேவப் பெருமாளிடமோ, திருவேங்கடமுடையானிடமோதான் செல்ல வேண்டும். நேரே திருமலைக்கு வந்தாள். கோவிலில் நுழைந்தாள். வாசலில் மஹாதுவாரத்தில் நிற்கும் பொழுதே திருத்திரை அறுந்து பகவான் சேவை ஸாதித்து, அங்கிருந்தே பரமபதம் கொடுத்து அவளை ஏற்றுக் கொண்டு விட்டார். அர்த்த புஷ்டியோடு பகவான் சிரித்துக் கொண்டே சொல்கிறார், “அவர் சொன்னார், நாம் செய்கிறோம்” 

ஆக தும்பையூர் கொண்டிக்கு மோக்ஷம் கொடுக்கச் செய்திருக்கிறீரே. அப்பொழுதும் பகவானே மோக்ஷம் கொடுக்கிறவர். அவர் ஒருவேளை பாபத்தைப் பார்த்தாலும் உம்முடைய புருஷகாரம் இருந்தால் கண்டிப்பாகக் கிடைத்துவிடும் அல்லவா? ஆக நீர் செய்ய வேண்டியது, நம்முடையவன் என்று உம் வட்டத்துக்குள் எம்மைச் சேர்த்துக் கொள்ளும். அப்பொழுது எனக்கும் கிடைத்துவிடும் அல்லவா? 

பகவானது கல்யாண குணங்களை வேதாந்தம் எப்படிச் சொல்கிறது. நிஷ்க்ரியம், நிர்குணம் என்றெல்லாம் வர்ணிக்கும். குணம் கிடையாது என்று அர்த்தம் இல்லை. தோஷ குணம் கிடையாது. அவருக்குக் குணங்கள் உண்டு. உயர்ந்த நல்ல பண்புகளுக்கே இருப்பிடமானவர். “உயர்வற உயர் நலம் உடையவன்” துர்குணங்கள் இல்லாதவன். 

அஹில ஹேய ப்ரத்யனீக கல்யாண குணமுடையவன். இதை எல்லாம் வேதத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாமா? நேர வந்து பெரிய பெருமாளைச் சேவியுங்கள். ப்ரத்யக்ஷமாகத் தெரிந்து கொள்ளலாமே. சேவித்தாலே அவரது ஸ்வரூபமென்ன, ரூபமென்ன, குணங்கள் என்ன என்று தெரிந்துவிடும். அதெல்லாம் தெரிந்துவிடும். போவதற்கு வழிதான் தெரியவில்லை. அதனால்தான் உம்மிடம் வந்துள்ளேன். 

அவர் சயனக் கோலத்தில் இருக்கிறார். 

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் இருந்துகிடந்தும்       
சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானே 
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே 
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ? (3)

என்பது நம்மாழ்வாருடைய பாசுரம். ஆக பகவான் இந்த லோகத்தில் வந்து நிற்பது, அமர்வது, நடப்பது, ஸயனிப்பது எல்லாம் உன்னோடே இருக்கேன், ஓலைச் சுவடியில் மட்டும் இல்லை, நேரேயே ப்ரத்யக்ஷமாக இருக்கின்றேன் என்று நமக்குக் காட்டிக் கொடுப்பதற்காகத்தான். அவரே கூட பிரபத்தி பண்ணியவர்களுக்கு, சரணாகதி செய்தவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பார். பாபத்தைப் பார்க்கமாட்டார். ஆனாலும் தேவரீர் சிபரிசு செய்து சேர்த்துவிடலாம். பகவான் நலமுடையவன். ஸர்வஜ்ஞன். இதை இத்தனையும் தெரிந்துகொள்வதற்கு நேரே திருவரங்கம் வாருங்கள். அந்த ஸ்ரீரங்கத்தில் நீர்தான் சரணாகதி பண்ணியிருக்கிறீர். உம்முடைய புருஷாகாரத்தினால் எங்களுக்கும் மோக்ஷம் வாங்கிக் கொடும். 17 வது ஸ்லோகம் முற்றிற்று. 

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: 
ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ் ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: 
ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ||  

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக