சனி, 9 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 28 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 16 

சரி. இப்ப உம்மிடம் உள்ள குற்றத்தையெல்லாம் விண்ணப்பம் செய்துவிட்டீரா? புரிந்தது. சரணாகதனாக வந்திருக்கின்றீர். என்னையே புகலாகக் கொண்டுள்ளீர். நான்தான் ரக்ஷிக்கணும் என்று புரிந்துவிட்டது. உமக்கு என்ன வேணும்? உமக்கு அநிஷ்டம் எது. இஷ்டம் எது. அநிஷ்டத்தைப் போக்கி இஷ்டத்தைக் கொடுக்கிறோம். வேண்டுவதென்ன என்று ராமானுஜர் கேட்க இப்பொழுது திரும்ப பிரார்த்திக்கிறார்:

பகவானின் அடியவனுக்கு, அடியவனுக்கு அடியவனுடைய குடிசையில் போய் கைங்கர்யம் பண்ண வேண்டும். 

அனாதி காலமாக விஷயாந்தரங்களில் பிராவண்யனாக இருக்கிறேனே. இது அநிஷ்டம். அதைத் தொலைத்துக் கொடுக்கவேண்டும். அனாதிகாலமாக உம்மிடத்து, பகவானிடத்தும் ப்ரீதி இல்லாமல் இருக்கின்றேனே. அது இஷ்டம். அந்த ருசியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அநிஷ்டத்தைத் தொலைத்து இஷ்டத்தை ஏற்படுத்திக் கொடும். உமக்கு அடியவனுக்கு, அடியவனுக்கு அடியவனுடைய குடிசையில் போய் கைங்கர்யம் பண்ண வேண்டும். அந்த தாஸ்ய ரஸத்தை அடியேனுக்குக் கொடுத்தருள வேண்டும் என்று மணவாள மாமுனிகள் பிரார்த்திக்கிற ஸ்லோகம்: 

शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्द्यया यतीन्द्र ! ।
त्वद्दासदासगणनाचरमावधौ यः तद्दासतैकरसताSविरता ममास्तु ॥ (16)

ஸப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர! |
த்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)

தாஸனுக்குத் தாஸனுக்குத் தாஸனிடம் கைங்கர்யம் பண்ணும் ருசி அடியேனுக்கு ஏற்படட்டும். முதல் பாதி ஸ்லோகம் அநிஷ்டத்தைத் தொலைக்கணும் என்பதும் இரண்டாவது பாதி இஷ்டத்தைக் கொடுக்கணும் என்றும் பிரார்த்திக்கிறது. 

எது அநிஷ்டம்:

ஸப்தாதி போக விஷயா – கைங்கர்யத்திற்கு விரோதியாய் இருப்பது விஷய ஸப்தாதி போகம். கோவிலுக்கு வரயா என்றால் ஒரு நாடகத்துக்குப் போகிறேன் என்று சொல்வது. ரொம்ப முக்கியமானவர்கள் எல்லாம் வந்து நாடகம் போடுகின்றனர். கோவில் நாளைக்கு இருக்கும். அங்க ஒரு கச்சேரி இருக்கு. உத்ஸவம் நாளைக்கும் இருக்கும் அல்லவா என்று சொல்வதைப் பார்க்கிறோம் அல்லவா? ஆனால் ஒன்றே ஒன்றை மறந்துவிட்டான். இது ப்ராப்தம் அது அப்ராப்தம் என்பதை மறந்து போய்விட்டான். சோறு போட்டவரும், ஶரீரம் கொடுத்தவரும், ஞானம் கொடுத்தவரும் ஒருத்தர். ஆனால் கேளிக்கைகளில் ஈடுபடுவது மற்றொருத்தரிடத்தில் என்று சொன்னால் திருட்டுத்தனம் இல்லையோ? அதைப் போய் இப்படிப் பண்ணுகிறீரே. அப்படித்தான் இருந்திருக்கின்றேன். சப்தாதி போகம் சப்த, ஸ்பர்ஸ ரூப, ரஸ, கந்த போகங்கள் அனுபவம். 

திரும்பத் திரும்ப சாப்பிடணுமா? தூங்கணுமா?

விஷயா ருசிரஸ்மதீயா - அது என்னமோ அப்படி விடாமல் ருசி இருக்கின்றது. சாப்பிடுகின்றோம். கோவிலுக்குப் போகலாம் என்றால் நேற்றுத்தான் போய்விட்டு வந்தேன் என்பார்கள். நேற்றுத்தானே சாப்பிட்டீர். காலையிலும் சாப்பிட்டீரே. ராத்ரியிலும் தூங்கினீரே. திரும்ப சாப்பிடணும், திரும்ப தூங்கணும் என்கிறீர் என்றால் இது மட்டும் வேளாவேளைக்குப் பண்ணனும் என்றும் கோவிலுக்குப் போவது ஏதாவது ஒரு நாளைக்குப் பண்ணினால் போதும் என்று தோணுகிறது. இதில்தான் ருசி அதிகமாக இருக்கிறது. 

வாசனை அல்லது ருசி சுக்கல் சுக்கலாகட்டும்.

ருசிரஸ்மதீயா நஷ்டா பவத் இஹ – இப்படி இருக்கிற ருசி நஷ்டமாகட்டும். 

யாது ஸததா விநாஸம் – நூறு நூறாக சுக்கல் சுக்கலாக உடைந்து போகட்டும். இப்பவே போகட்டும். ராமானுஜர் கேட்கிறார்: உயிர் போகிற சமயத்தில் இந்த ருசி போய்விடும் அல்லவா? வயதாக வயதாக ஒன்றொன்றாக ருசி போகும். பரவாயில்லை. ஶரீரத்தில் சக்தியில்லாமையினாலே போய்விட்டது. மனதில் ருசி சுலபமாகப் போகாது. பலவிஷயங்கள் இவரால் முடியாது. 

மனது வேண்டும் வேண்டும் என்று இன்னும் தேடும்.

அப்படியே மேல் மாடியில் ஏறி நின்று கொண்டு நினைப்பார். அந்த மலைக்கு மேல் ஓடிப்போய் ஏறி நின்று கொண்டு வேடிக்கை பார்க்கணும். ஏற முடியுமா? முடியாதில்லையா?. இதைப்போல எத்தனையோ விஷயம். சக்தி இல்லாமையினால் போய்விட்டது. ஶரீரம்விட்டுவிட்டது. ஆனால் மனது இன்னும் தேடும். ஶரீரம் இடம் கொடுக்காததால் மனது எப்ப பார்த்தாலும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும். இதுதான் இன்னம் ஆபத்து. வயது ஆகிவிட்டால் வைராக்யம் வரணும். வரவில்லை என்றால் நஷ்டமே. உயிர்போனால் இதெல்லாம்போய்விடும் என்று தேவரீர் காரணம் காட்ட வேண்டாம். இப்பவே போகவேண்டும்.

பவத்தயயா யதீந்த்ர! – தேவரீருடைய தயையாலேயே இதை எல்லாம் தொலைக்கவேண்டும். “சரி. தொலைக்கிறேன். விஷயாந்தரங்களில் ருசியைத் தொலைக்கணும். சரி என்ன வேண்டும்? 

பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்வாமி தேஶிகன் ஸாதித்தார்:

த்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ ய: - அடியாருக்கு அடியாருக்கு அடியார் என்று தொடர்ச்சியாக எண்ணுவது. அன்று ஒரு ஆழ்வார் எண்ணிட்டு போனாரே. “அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே” ஏழு தடவை எண்ணினாரில்லையோ! பாதுகா ஸஹஸ்ரத்தில் தேஶிகன் ஸாதித்தார்: “யஸ் ஸப்த பர்வ யவதான துக்தாம் ஶேஷித்வ காஷ்டாம் ---- முராரே.... ” பகவான் ஶேஷி, நான் ஶேஷன் என்று ஏழு தடவை கீழ கீழ எண்ணினாராம். இதைத்தான் த்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ ய: - அவதி என்றால் எல்லை. சரம என்றால் கடைசி. அடியவனுக்கு, அடியவனுக்கு அடியவனுக்கு என்று எண்ணிக் கொண்டே போவது. அப்படி எண்ணுகையில் ஒரு கடைசி இருக்கும் இல்லையா. அந்த அடியவனுக்குக் கைங்கர்யம் பண்ணும் ஆசையை எனக்கு அருளவேணும். 

கைங்கர்ய ருசியானது என்றும் எப்பொழுதும் என்னிடம் விலகாமல் இருக்கட்டும்

தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து – அந்தக் கடைசியில் இருக்கும் தாஸனுக்கு கைங்கர்யம் செய்வதில் ருசியானது என்றும் எப்பொழுதும் என்னிடம் விலகாமல் இருக்கட்டும். பக்தனுடைய பக்தனுக்கு தொண்டு புரிந்தால் அது பகவானுக்கே மிகவும் பிடித்தாக இருக்கிறது. அதுவே பரம புருஷார்த்தம். அது என்னிடம் இருந்து ஒரு நாளும் விலகாமல் இருக்கட்டும். மோக்ஷத்துக்கு போகின்றவரை இந்த பக்த பக்தனுக்கு கைங்கர்யம் பண்ணுகிற மாதிரி அடியேனை ஆக்கிவைக்க வேண்டும். 

இதைக் கேட்டுள்ளவர் ஆளவந்தார், பரமாசாரியார்:

விஷயாந்தரத்தில் ருசி தொலைந்தது என்றால்தான் கைங்கர்யத்தில் ருசியே வரும். ஆளவந்தார் பிரார்த்திக்கிறார்: “ந தேஹம் ந ப்ராணான் ந ச ஸுகம்” எனக்குத் தேஹமோ, ப்ராணனோ, ஸுகமோ இத்தனையும் வேண்டாம். “யாது ஸததா விநாஸம்” இது நூறு சுக்கலா உடைந்தே போகட்டும். 

“தாஸதைக” – உன் தாஸனுக்கு தாஸனுக்கு தாஸனுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டும். பிரம்மா பட்டம் தருகிறேன் என்று பகவான் சொல்கிறார். வேண்டாம். இந்திர பட்டம் வேண்டாம். வேறு என்னதான் வேண்டும். “தவ தாஸ்யஸுகைக ஸங்கிநாம் பவநேஷ்வஸ்த்வபி கீடஜந்ம மே!” உம்முடைய தாஸ்ய ரஸம் தெரிந்திருக்கின்ற ஒரு சின்ன தொண்டன் ஏழை, ஒரு மண்குடிசையில் இருக்கிறார். அந்த மண்குடிசையில் புழு வருமோல்லியோ. அந்தப் புழுவில் ஒரு பிறவி எனக்குக் கொடுத்தீர் என்றால் போதும். இதைக் கேட்டுள்ளவர் ஆளவந்தார், பரமாசாரியார். இவர் இட்ட பிச்சைதான் ராமானுஜர் ராமானுஜராக ஆனது. 

உத்தவர் பிரார்த்திக்கிறார். “நீ ராஸக்ரீடை சமயத்தில் காணப்படாமல் மறைந்து கொண்டபொழுது கோபியர்கள் கலங்கி உன்னைத் தேடித் திரிந்தார்களே. அவர்கள் பாதங்கள் பட்டு தூசி பறக்குமே. அந்தத் தூசித் துகள்களில் ஒரு துகளாக எனக்கு ஒரு பிறவியைக் கொடு” என்று கண்ணனிடம் பிரார்த்திக்கிறார். 

சுகர் பிரார்த்திக்கிறார், “நீ யமுனையில் காளிந்தி எனும் நாகத்தை ஒடுக்க கரையில் இருந்த கதம்ப மரத்தில் ஏறி நின்று பின் நதியில் குதித்தாயாமே. அத்தகைய கதம்பமரமாக எனக்கு ஒரு பிறவியைக் கொடு. அப்பொழுது உன் திருவடிகள் என் தலைமேல் இருந்திருக்கும் அல்லவா”. சுகர் சொல்லிக் கொள்கிறார். வெறும் பண்டிதராக இருந்து என்ன ஸாதித்து இருக்கிறேன் என்று. அதே போல கூரத்தாழ்வானும் சொல்கிறார்:

கண்தெரியாத ஊமைக்கும் உபதேசம்

ஒரு கண் தெரியாதவர், வாய் பேசாதவர் ராமானுஜரிடம் வருகிறார். அவர் தனக்கு உபதேசம் செய்து, மோக்ஷம் கொடுக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறார். இவருக்கோ காதும் கேட்காது. தன் அந்தரங்க அறைக்குள் கூட்டிப் போய் கதவை சாத்திவிட்டார். ஐந்து நிமிஷமாச்சு, பதினைந்து நிமிஷமாச்சு. என்ன நடக்கிறது என்றே ஒருத்தருக்கும் தெரியவில்லை. கூரத்தாழ்வான் சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தார். 

அப்பொழுது அந்தக் கண் தெரியாதவர் தலையில் ராமானுஜர் தன் திருவடியை வைத்து ஆசீர்வாதித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான், “ஹா! என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிந்தார்” அவர் முகத்தில் ஜலம் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்து என்ன பார்த்தீர் என்று கேட்டனர். “அவனுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. பெரும் பண்டிதனாக ஸ்ரீ பாஷ்யம் எல்லாம் எழுதி என்ன பயன். பண்டிதனாக பக்தனாக இருந்து என்ன ஸாதித்தேன். அவனோ இந்த நிமிஷம் மோக்ஷம் போய்விடப்போகின்றான்” என்றார் கூரத்தாழ்வான். இவர்களுக்குத் தேவையெல்லாம் தாஸ்ய ஸுகம். பகவானுடைய பக்தர்களுக்கு கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தமாகக் கொண்டுள்ளனர். 

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி       
வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்*    
தெழிகுரலருவி திருவேங்கடத்து*       
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே” 

என்று நம்மாழ்வார் பிரார்த்தித்தார் அல்லவா? அத்தனையையும் ஆசார்ய கைங்கர்யத்தில் இருக்கவேணும் என்பது இவருடைய பிரார்த்தனை. எம்பெருமானது க்ருபை அடியேனிடம் வேலை செய்யாது. தேவரீரின் க்ருபையே அடியேனை உய்விக்கும் என்று பிரார்த்திக்கிறார். 

ஸப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |

த்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16) 

16 வது ஸ்லோகம் முற்றிற்று.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக