ஐந்தாவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்
(ரஹோகணனுடைய ஸந்தேஹங்களுக்கு ஜடபரதர் ஸமாதானம் கூறுதல்).
ரஹோகணன் சொல்லுகிறான்:- நீர் பரமாத்மாவுக்கு வாஸஸ்தானமாயிருப்பவர். எங்களைப் போன்ற ஜனங்களைப் பாதுகாக்கும் பொருட்டே நீர் இச்சரீரம் கொண்டவர். நீர் ஆத்மஸ்வரூபத்தை அறிந்து அதையே அனுபவித்துக்கொண்டிருக்கும் தன்மையராகையால் அபராதம் செய்தவரிடத்திலும் விரோதத்தைப் பாராட்டுகின்றவரல்லர். நீர், எப்பொழுதும் பரமாத்மானுபவத்தில் ஆழ்ந்திருப்பவராயினும் எல்லோரும் அவமதிக்கும்படி ப்ராஹ்மண அதமனுடைய (ப்ராஹ்மணர்களில் மிகவும் தாழ்ந்தவன் போன்று) வேஷம் பூண்டிருக்கின்றமையால் அது ஒருவர்க்கும் தெரியாமல் மறைந்திருக்கின்றது. இத்தகைய உமக்கு நமஸ்காரம்.
ப்ராஹ்மணச்ரேஷ்டரே! ஜ்வரத்தினால் வருந்தினவனுக்குச் சுத்தமான ஔஷதம் போலவும், கோடை காலத்து வெயிலில் அடிபட்டவனுக்குத் தண்ணீர் போலவும், ஆபாஸமான தேஹத்தில் ஆத்மாபிமானமாகிற ஸர்ப்பத்தினால் நன்கு கடியுண்ட விவேகமென்னும் கண்ணுடைய எனக்கு வருத்தங்களையும் தாபங்களையும் போக்குவதாகிய உமது மொழி அம்ருதம் போன்ற, ஔஷதமாயிருக்கின்றது. ஆனால் எனக்கு இவ்விஷயத்தில் சில ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) உண்டு. அவற்றைப் பிறகு கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நீர் மொழிந்தது ஆத்மயோக விஷயங்கள் பலவும் நிறைந்திருக்கையால் எனக்கு எளிதில் அறிய முடியாமல் இருக்கின்றது. அதை நான் நன்றாக அறியும்படி விவரித்துச் சொல்வீராக. இதை நன்றாக அறிய வேண்டுமென்று என் மனம் மிகவும் குதூஹலப்படுகின்றது.
யோகேச்வரரே! கார்யங்களைச் செய்யும்பொழுது வேர்வை முதலியவை ப்ரத்யக்ஷமாய் உண்டாக நாம் காண்கின்றோம். மிகவும் ச்ரமப்பட்டாயென்று உலகத்தில் ஜனங்கள் வழங்குவதும் உண்மையாகவே தெரிகின்றது. அப்படியிருக்க அது உண்மையன்றென்று நீர் மொழிந்தீர். நீர் சொன்னதின் கருத்தை என் மனம் எளிதில் அறியமுடியாமல் ப்ரமிக்கின்றது. ஆகையால் இதை விவரித்துச் சொல்வீராக.
ப்ராஹ்மணர் (ஜடபரதர்) சொல்லுகிறார்:- மன்னவனே! ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களின் பரிணாமமாகிய சரீரங்களில் ஏதோ ஒரு காரணத்தினால் பூமியில் இங்கனம் ஸஞ்சரிக்கின்ற சில சரீரங்கள் ஜனங்களென்று கூறப்படுகின்றன. அவற்றின் பாதங்களின் மேல் குதிகால்களும் அவற்றின் மேல் கணைக்கால்களும் அவற்றின் மேல் முழங்கால்களும் அவற்றின் மேல் துடைகளும் அவற்றின் மேல் இடையும் அதன்மேல் மார்பும் அதன் மேல் கழுத்தும் தோள்களும் தோளின் மேல் பல்லக்கும் அதன் மேல் ஸௌவீர தேசங்களுக்கு அரசனென்று சொல்லப்படும் சரீரமும் இருக்கின்றன. நீ அச்சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்து (நினைத்து) நான் ஸிந்து ஸெளவீர தேசங்களுக்கு ராஜனென்று கொடுமதம் (கொடிய கர்வம்) கொண்டிருக்கின்றாய். மிகவும் வருந்திச் சுமக்கின்றமையால் மன இரக்கத்திற்கு இடமாய்ச் சோகிக்கத் தகுந்தவர்களுமாகிய இவர்களை வெட்டிக்குப் (வீணாகப்) பிடித்து மன இரக்கமில்லாதிருக்கின்றாய். நான் ஜனங்களைப் பாதுகாக்கின்றேனென்று பிதற்றுகிற நீ தேஹாத்ம விவேகமுள்ள பெரியோர்களின் ஸபையில் விளங்கமாட்டாய். நீ தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து விவேகமற்று நன்னடத்தையினின்று தவறியிருக்கின்றாய். ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான தேஹங்களெல்லாம் பூமியிலேயே உண்டாவதும் அதிலேயே நசிப்பதுமாயிருத்தலை நாம் என்றும் காண்கின்றோம். ஆகையால் நித்யவஸ்துவாகிய ஆத்மாவினிடத்தில் ராஜனாயிருக்கை முதலியவைகளும் பருமன் இளைப்பு முதலியவைகளும் உண்டென்பதற்குத் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்த (நினைத்து மயங்கிய) உன் சொல்லொழிய வேறொரு காரணமும் இல்லை.
“நான் மாத்ரமா சொல்லுகிறேன்: ஜனங்களெல்லோரும் இங்கனமேயன்றோ வழங்குகிறார்கள். அதனால் அவை ஆத்மாவினிடத்தில் உண்டென்று ஊஹிக்கலாமே” என்னில், உலகமெல்லாம் உன்னைப்போல் அஜ்ஞானத்தினால் அங்கனம் வழங்குகிறதன்றி அது உண்மையன்று. அறிவுடையோர் அங்கனம் வழங்கமாட்டார்கள். அநித்யமான (நிலையற்ற) கார்ய வஸ்துக்களுக்கு லயஸ்தானமாகிய இப்பூமியும் அநித்யமே. இது பூதஸூக்ஷ்மங்களின் ஸமூஹங்களால் உண்டானது. அப்பூத ஸுக்ஷ்மங்களை ஈச்வரன் தனது ஸங்கல்பத்தினால் ப்ரக்ருதியினின்று உண்டாக்கினான். ஆகையால் அவை அநித்யங்களே. இங்கனம் இளைப்பு பருமன் பெருமை சிறுமை மேன்மை தாழ்மை இவற்றிற்கிடமாகிய ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான சரீரங்களெல்லாம் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவையென்றும், பஞ்சபூதங்கள், அவற்றின் ஸ்வபாவங்கள், அந்தக்கரணம், வாஸனை, காலம் என்று பலவாறாய் விரிந்திருப்பதாகிய ப்ரக்ருதியால் ஏற்பட்டவையென்றும் ஸுக்ஷ்ம புத்தியுடன் ஊஹித்து உணர்வாயாக.
ஆத்மா ஜ்ஞானஸ்வரூபன்; இயற்கையில் கர்ம ஸம்பந்தமில்லாமையால் பரிசுத்தன்; புருஷார்த்தமாயிருப்பவன். எல்லா இடங்களிலும் ஆத்மா ஒருவாறாகவேயிருப்பான்; உள்ளும் புறமுமில்லாதவன்; ஜ்ஞானத்தினால் எங்கும் நிறைந்திருப்பவன்; நித்யன்; தனக்குத் தான் தோற்றுந்தன்மையன் ; பசி தாஹம் சோகம் மோஹம் மூப்பு இறப்பு என்கிற ஊர்மிகள் இன்றி ஓய்ந்திருப்பவன். பகவானென்றும் வாஸுதேவனென்றும் சொல்லப்படுகிற பரமாத்மாவுக்கு ஸர்வ ப்ரகாரத்தினாலும் உட்பட்டிருப்பவனாகையால் வாஸுதேவனென்றே இவனைக் கவிகள் வழங்குவார்கள்.
ரஹோகணனே! ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு பகவத் பக்தர்களான பெரியோர்களின் பாததூளியின் அபிஷேகத்தினால் உண்டாகுமன்றி மற்ற தவத்தினாலாவது யாகம் முதலிய வைதிக கர்மத்தினாலாவது தானத்தினாலாவது க்ருஹஸ்தாச்ரம தர்மங்களைக் குறைவற அனுஷ்டிக்கையாலாவது வேதாப்யாஸத்தினாலாவது ஜலம் அக்னி ஸுர்யன் இவர்களை உபாஸிக்கையாலாவது உண்டாகாது. பெரியோர்கள் க்ராம்ய (உலக இன்பத்தைப் பற்றிய) கதைகளுக்கு இடங்கொடாமல் உத்தமலோகனான பகவானுடைய குணங்களையே எப்பொழுதும் சொல்லிப் பொழுது போக்கிக்கொண்டிருப்பார்கள். மோக்ஷத்தில் விருப்பமுடையவர் அவரிடம் சென்று அந்தப் பகவானுடைய குணங்களைக் கேட்பார்களாயின், வாஸுதேவனிடத்தில் நல்ல மதி (அறிவு) உண்டாகப் பெறுவார்கள். நான் முன்ஜன்மத்தில் பரதனென்னும் பேருடைய மன்னவனாயிருந்தேன். அப்பொழுது நான் ஐஹிக ஸுகங்களிலும் பரலோக ஸுகங்களிலும் சிறிதும் மனப்பற்றின்றிப் பகவானை ஆராதித்துக் கொண்டிருந்தும் கடைசியில் ஓர் மான் குட்டியினிடத்தில் மனப்பற்று செய்து அதனால் பகவத் ஆராதன ரூபமான ப்ரயோஜனமெல்லாம் தடைபட்டு மான் ஜன்மத்தை அடைந்தேன். வீரனே நான் பகவானை ஆராதித்த மஹிமையால் முன் ஜன்மத்தின் நினைவு மாறப்பெறாதிருந்தேன். அந்த பகவத் ஆராதனத்தின் மஹிமையை என்னென்று சொல்லுவேன்? இப்பொழுது நான் ஜனங்களோடு சேர்ந்து பழகினால் என்ன கெடுதி நேருமோவென்று பயந்து பற்றற்றவனாயும் மறைந்தும் அலைந்துகொண்டு இருக்கிறேன். ஆகையால் மோக்ஷத்தை விரும்பும் மனிதன் பற்றற்ற பெரியோர்களோடு ஸஹவாஸம் செய்து ஜ்ஞானம் உண்டாகப்பெற்று அந்த ஜ்ஞானமாகிற கத்தியைக்கொண்டு தேஹத்திலும் அதைத் தொடர்ந்த மற்ற க்ருஹ (வீடு) க்ஷேத்ர (நிலம்) புத்ராதிகளிடத்திலும் விளைகிற மனப் பற்றுக்களை அறுத்துப் பகவானுடைய சரித்ரங்களை வாயால் சொல்லுவதும் காதால் கேட்பதும் செய்து அவனை எப்பொழுதும் மறவாமல் த்யானித்துக் கொண்டிருப்பானாயின் ஸம்ஸார மார்க்கத்தின் கடைக் கரையாகிய அந்தப் பகவானைப் பெறுவான்.
பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.