புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 8



ஆளவந்தார் தொடர்ந்தார். ""எல்லாரும் ரங்கநாதனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் குருவிடம் பக்தி கொள்ளுங்கள். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தொண்டு செய்யுங்கள்,'' என்றார். பின்பு பத்மாசனத்தில் அமர்ந்தார். தன் மனத்தை அடக்கி பரமனிடம் நினைவைக் கொண்டு சென்றார். அவரது கபாலம் வழியே உயிரை செல்லவிட்டார். அவரைச் சுற்றிநின்று பாடிக் கொண்டிருந்த சீடர்கள் பாட்டை நிறுத்தினர். திருக்கோஷ்டியூர் நம்பியும், இன்னும் சில சீடர்களும் தங்கள் உயிருக்குயிரான குரு பரமனடி சேர்ந்தது கண்டு, மயங்கி விழுந்து விட்டனர். சிலர் ஆளவந்தார் துறவறத்துக்கு வரும் முன்பு, அவரது மகனாக இருந்த பிள்ளைக்கரசு நம்பியை தேடிச் சென்றனர்.

அவரைக் கொண்டு அந்திமக்கிரியைகள் செய்ய முடிவெடுத்தனர்.கொள்ளிடக்கரையில் அவரது அந்திமக்கிரியை நடந்தது. இதற்கிடையே, பெரியநம்பி காஞ்சிபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நான்கு நாட்கள் நடந்து காஞ்சிபுரத்தை அடைந்த நம்பி, முதலில் வரதராஜப் பெருமாளைத் தரிசித்தார். பின்னர் திருக்கச்சிநம்பியை தேடிச் சென்று அவரைப் பணிந்தார். அவரது ஆஸ்ரமத்தில் இரவில் தங்கினார். மறுநாள் காலையில், ராமானுஜரைப் பார்க்க புறப்பட்டார். சாலக்கிணற்றில் இருந்து ராமானுஜர் பெருமானின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். அவர் தூரத்தில் வருவதைப் பார்த்த பெரியநம்பி, அயர்ந்து நின்று விட்டார்.

அந்த இளைஞரின் தேஜஸான முகத்தைப் பார்த்து உடலில் வித்தியாசமான உணர்வுகளெல்லாம் ஏற்பட்டது. ராமானுஜர் அந்தப் பெரியவரைக் கவனித்தார். "யார் இவர்?' என மனதில் கேள்வி. அவர் அருகில் வந்தார். ""ஐயா! தாங்கள் யார்?'' பணிவுடன் கேட்டார்.

""நான் பெரியநம்பி. ஆளவந்தார் என்னை அனுப்பி வைத்தார்,''.

ஆச்சரிய மிகுதியால் ராமானுஜர், ""அப்படியா? அந்த மகானுபாவருக்கு உடல்நலம் சரியில்லை என கேள்விப்பட்டேன். தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?'' என பணிவோடு கேட்டார்.

""நான் புறப்படும் போது உடல்நிலை பரவாயில்லை,'' என்ற நம்பியிடம், ""தாங்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?''என்றார்.

"" ஐயனே! தங்களை அழைத்து வரும்படி ஆச்சாரியார் எனக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றவே யான் வந்தேன்,'' என்றதும், ராமானுஜரின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. கை, கால்கள் விறைத்தன.

"" என்ன சொல்கிறீர்கள்? அந்த மகாபிரபுவா என்னை சந்திக்க வேண்டுமென்றார்கள். நான் பிறவிப்பயனை அடைந்தேன். அவர்களே என்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றால்...'' இதற்கு மேல் ராமானுஜரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி விட்டன.

""ஐயனே! சற்று பொறுத்திருங்கள். நான் பேரருளாளனான வரதராஜனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தத்தை சமர்ப்பித்து விட்டு வந்து விடுகிறேன்,'' என்றவர் அவசர அவசரமாய் ஓடினார். மிக விரைவில் திரும்பி வந்த அவர்,

""புறப்படுங்கள், ஆளவந்தார் பெருமானைக் காணச் செல்லலாம்,'' என்றார். நம்பிக்கு ஆச்சரியம்.

""ராமானுஜரே! தாங்கள் வீட்டுக்கு கூட செல்லவில்லை. இங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று திரும்ப பத்துநாட்களாவது ஆகுமே. வீட்டில் தேட மாட்டார்களா! இல்லத்தை யார் கவனிப்பார்கள்? அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு வந்து விடுங்களேன்,'' என்றார் நம்பி.

இதற்கிடையே ஒரு துயரச் சம்பவமும் ராமானுஜர் இல்லத்தில் நிகழ்ந்திருந்தது. ஆம்...ராமானுஜரின் அன்னை காந்திமதி அம்மையார் பரமபதம் சேர்ந்துவிட்டார். ராமானுஜர் இதற்காக வருத்தப்பட்டு மிகவும் சோர்ந்து போயிருந்தார். அன்னையின் பிரிவை எந்தக்குழந்தை தான் தாங்கும்? என்னதான் திருமணமாகி தாய்க்குப்பின் தாரமென அவளோடு வாழ்ந்தாலும், பெற்றவளின் பிரிவை மட்டும் ஒரு ஆண்மகனால் தாங்க முடிவதில்லை. தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஒரு ஆண்மகனை காலம் முழுவதும் துன்புறச் செய்கிறது. தஞ்சமாம்பாள் மட்டுமே வீட்டில் தனித்திருந்தார். எனினும், ராமானுஜர் அதை பொருட்படுத்தவில்லை. நம்பிகளே! மனிதனாய் பிறந்தவன் பரமனை பணிய வேண்டும், அவனது அடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். இதை முதலாவதாக முடித்து விட்டு, அடுத்ததாக இல்லறப் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். எனவே உடனே நாம் புறப்படுவோம், என்றார். அவர்கள் இருவரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.

செல்லும் வழியில், ஆங்காங்கே பிøக்ஷ வாங்கி சாப்பிட்டனர். எங்காவது படுத்து உறங்கி விட்டு, நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள். காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரையில் ஸ்ரீரங்கநாதன் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கம் சென்றடைய நான்கு நாட்கள் பிடித்தது. அப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் செல்ல பாலம் ஏது? காவிரியை பரிசலில் கடந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து, திருமடத்துக்கு சென்றனர்.

திருமடத்தின் வாசலில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அனைவர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. பெரியநம்பிக்கு வயிற்றையே புரட்டியது. ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ?
அப்படியானால் ஆளவந்தார்.... அவர் நினைத்தது சரிதான். ஆளவந்தார் ரங்கநாதனின் இருப்பிடத்தில் நிரந்தரமாய் துயில் கொள்ள சென்று விட்டார். சுவாமி! என்ன இது, இந்த பாவி வருவதற்கு கூட காத்திருக்காமல் போய் விட்டீர்களா? ஐயோ! இனி தங்களை என்று காண்பேன்? என பாதங்களில் விழுந்து கண்ணீரால் நீராட்டினார்.

ஆளவந்தாரை பார்க்க வேண்டுமென ஆவலுடன் ஓடிவந்த ராமானுஜரோ திக்பிரமை பிடித்தவர் போலானார். சுவாமி! இதைக்காணவா என்னை அவசர அவசரமாய் வரச் சொன்னீர்கள். ரங்கநாதா! இதென்ன கொடுமை. என் சுவாமியை என்னிடமிருந்து பிரித்து கொடுமை செய்த உன்னை சேவிக்காமலே ஊர் திரும்புவேன், என்றவராய் மயங்கி விழுந்து விட்டார்.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக