ஆளவந்தாரின் சீடர்களான பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோர் தங்கள் குரு உடலை விட்டு நீங்கப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் ஆளவந்தாரைப் போலவே, நூறுக்கு மேற்பட்ட வயதுடைய திருவரங்கப்பெருமாளரையர் என்பவரை அங்கே அழைத்து வந்தனர். அவரைக் கொண்டு ஆளவந்தாரிடம் சில கேள்விகள் கேட்டனர்.
அரையர் கேள்விகளை ஆரம்பித்தார்.
"" சுவாமி! நாராயணப் பெருமானை நாம் கண்ணால் காண முடியாது. அப்படியிருக்க, அவனுக்கு எப்படி ஒருவன் தொண்டு செய்வது?'' என்றார். ஆளவந்தார் புன்னகை பூத்தார்.
""அரையரே! இது மிகவும் எளிது. பெருமாளின் அடியவர்களுக்கு செய்யும் தொண்டு, பெருமாளுக்கு செய்யும் தொண்டாகும். இதில் ஜாதி, பேதமெல்லாம் பார்க்கக்கூடாது. திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும் பெருமாளின் தீவிர தொண்டர். அந்த அடியவருக்கு நீங்கள் சேவை செய்யலாம். காஞ்சியில் திருக்கச்சி நம்பி வேளாளர் குலத்தவராயினும், பெருமாளே அவர் மூலம் தான் தன் எண்ணங்களை வெளிப்
படுத்துகிறார். அவர்களைப் போன்ற தொண்டருக்கு தொண்டராய் இருப்பதே இறைவனுக்கு செய்யும் பணியாகும். என்னைப் பொறுத்தவரை திருப்பாணாழ்வாரே என்னை இந்த உலக வாழ்விலிருந்து மீட்டுச் செல்பவராக இருப்பார்,'' என்றார்.
""அப்படியானால், தாங்கள் இவ்வுலக வாழ்வை விரைவில் நீத்து விட முடிவு செய்து விட்டீர்களா?'' என உருக்கத்துடன் கேட்டார் அரையர்.
""ஐயா! தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்த அற்பக் காரணத்துக்காக வருந்தக்கூடாது,'' என்றார் ஆளவந்தார்.
ஆளவந்தார் உடலை நீக்கப்போகிறார் என்பதை அறிந்து பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் துடித்துப் போனார்கள். அவர் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, ஆளவந்தாரின் உயிர் பிரிந்த அடுத்த கணமே தாங்களும் இறந்துவிடுவது என முடிவு செய்தார்கள். தற்கொலை செய்தாவது இறந்து விட வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.
சில சீடர்கள் அவரிடம், ""தாங்கள் மறைந்த பிறகு எங்களை வழிநடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு உபதேசம் செய்பவர் யார்? கலங்கரைவிளக்கை காணாத கப்பல் போல இவ்வுலகக் கடலில் நாங்கள் தத்தளிக்க இயலாதே,'' என புலம்பினர்.
ஆளவந்தார் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
""சீடர்களே! யாரும் மனம் உடையக்கூடாது. நம் ரங்கநாதன் எல்லாரையும் காப்பாற்றுவான். அவனுக்கு நீங்கள் தினமும் தொண்டு செய்யுங்கள்.
திருப்பதிக்கும், காஞ்சிபுரத்துக்கும் அவ்வப்போது சென்று வாருங்கள். ஸ்ரீரங்கம் அவனது சொந்தவீடு என்றால், திருப்பதி அவனது மலர்ப்பாதங்களில் நம்மைக் கொண்டு சேர்ப்பது,'' என்றார்.
திருவரங்க பெருமாளரையர் வருத்தத்துடன் அவர் அருகில் சென்றார். ""சுவாமி! தங்கள் திருமேனியை அடக்கம் செய்ய வேண்டுமா, தகனம் செய்ய வேண்டுமா?'' என்றார். இதற்கு ஆளவந்தார் எந்தப்பதிலும் சொல்லவில்லை.
மறுநாள் ரங்கநாதர் திருவீதி உலா வந்தார். ஆளவந்தாரின் சீடர்கள் ரங்கநாதனை தரிசிக்க சென்று விட்டனர். அப்போது ஒரு சீடருக்கு தெய்வ அருள் வந்தது. "பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் எக்காரணம் கொண்டும் ஆளவந்தாருக்கு பின் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது' என அருள்வாக்கு தந்தார். இவ்விஷயம் ஆளவந்தாரின் காதுகளை எட்டியது. அவர் தன் சீடர்களிடம், ""தற்கொலை கொடிய பாவமல்லவா? இது இறைவனுக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் திருவீதி உலா வரும் போது, சீடன் மூலமாக பேசியிருக்கிறான். உங்கள் யார் வாயிலும் இனி தற்கொலை என்ற சொல்லே வரக்கூடாது. உங்கள் அகங்காரம் ஒழிய வேண்டும். பரமனின் அடியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். எம்பெருமான் ரங்கநாதனின் திருவடிகளில் மலர் சூட்டவேண்டும்,'' என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.
சிலகாலம் இப்படியே நீடித்தது. உடல்நிலை சற்றே தேறிய நிலையில் ஒருநாள் இறைவனின் திருவீதி உலாவையும் ஆளவந்தார் பார்த்தார். இவர் சுகமில்லாமல் இருக்கும் செய்தி காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு அந்தணர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆளவந்தாரைப் பார்க்க வந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து இருவர் வந்திருக்கிறார்கள் எனத்தெரிந்தவுடனேயே ஆளவந்தார் மகிழ்ச்சிக் கடலில்மூழ்கினார். ராமானுஜரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவர் முகத்தையே பிரகாசமாக்கியது. அவர்களை வரவேற்ற அவர், ராமானுஜர் பற்றி விசாரித்தார். ராமானுஜர் யாதவப்பிரகாசரின் பள்ளியிலிருந்து விலகியதும், பின்னர் திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்றதும், சாலக்கிணற்றில் இருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருவதும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார். தன் சீடர் பெரியநம்பியை அழைத்தார். "" நம்பி! நீ உடனே காஞ்சிபுரம் போ. ராமானுஜனை அழைத்துக் கொண்டு விரைவில் வா,''என்றார்.
குருவின் கட்டளைக்கு தலைவணங்கி பெரியநம்பி காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். இந்த நேரத்தில் ஆளவந்தாரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இம்முறை பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனாலும், மனம் கலங்காத அவர், ரங்கநாதனை தரிசிக்க தினமும் கோயிலுக்கு சென்றார். ஒருநாள் கோயிலுக்கு சென்று திரும்பியதும் சீடர்களை அழைத்தார்.
""அன்புச் சீடர்களே! நான் இதுநாள் வரையில் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்,'' என்றார். சீடர்கள் உருகிப் போனார்கள். ""தெய்வம் தவறு செய்யுமென்றால், தாங்களும் செய் திருப்பீர்கள்,'' என்றபடியே கண்ணீர்உகுத்தனர்.
-தொடரும்...
நன்றி - தினமலர்