ராமானுஜர் - பரணிபாலன் - 6

ராமானுஜர் - பரணிபாலன் - 6



ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், ""உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன்,'' என்றான் அவளுக்குள் இருந்த ராட்சஷன்.

""நீ விலகியதற்கு என்ன சாட்சி?'' எனக் கேட்டார் ராமானுஜர்.

""ஐயனே! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்வேன். அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன்,'' என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது. அவள் பழைய நிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடன் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜரின் புகழ் பெருகியது. ராமானுஜரின் பெருமையை, இச்சம்பவத்தின் மூலம் உணர்ந்து கொண்டாலும் கூட, யாதவப்பிரகாசருக்கும், அவருக்கும் கருத்து மோதல்நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.

ஒருமுறை வகுப்பறையில், வேதத்தில் வரும் மந்திரம் பற்றி இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. தன் கருத்தை மறுத்துப் பேசிய ராமானுஜரை, இனி தனது பள்ளிக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என யாதவப்பிரகாசர் அனுப்பி விட்டார்.

அப்போதும் குருவின் மீது கோபம் கொள்ளாத ராமானுஜர், ""தங்கள் சித்தம் அதுவானால் அதன்படியே நடக்கிறேன்,'' என்றார். அதன்பிறகு அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதன்பின், தனது குருவாக யாரை ஏற்பது என அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பரமதயாளனான வரதராஜப் பெருமாள் அந்தப் பெரியவரை அனுப்பி வைத்தார்.

அவர் வேறு யாருமல்ல. திருக்கச்சி நம்பி தான். அவரைக் கண்டதும், ராமானுஜரின் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

""வரதராஜா! குருவின்றி தவித்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல குருவைக் காட்டி விட்டாய். இவரையே என் குருவாய் ஏற்பேன்,'' என மனதிற்குள் சொல்லியபடியே, அவரை பணிவோடு வரவேற்றார். அவரை அமரச்சொன்னார்.

""ஐயா! தாங்கள் என் வீடு தேடி வந்தது நான் செய்த பெரும்பாக்கியம். நான் அறிவில் மிகவும் குறைந்தவன். குழந்தையின் செயல்பாடுகளை ஒத்தே எனது செயல்களும் அமைந்திருக்கிறது,'' என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்தார் ராமானுஜர்.

""ராமானுஜா! நீயா இப்படி சொல்வது? நீ பிராமணன், கல்வியில் உன்னை விட வல்லவர் யார் இருக்க முடியும்? குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஆனதும், மன்னன் மகளிடம் ஒட்டியிருந்த தீய சக்தியை ஓட்டி, இம்மண்டலமெங்கும் உன் புகழ் விரிந்து கிடக்கிறது. என்ன காரணத்தால் உன்னை நீயே குறைத்துப் பேச வேண்டும்?'' என்றார் திருக்கச்சி நம்பி.

ராமானுஜர் அவரிடம், ""சுவாமி! தாங்கள் அப்படி சொல்லாதீர்கள். யாதவப்பிரகாச பண்டிதர் என்னை வகுப்பிலிருந்து நிறுத்தி விட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். குருவின்றி தனி மரமாய் நிற்கும் எனக்கு ஒரு குரு வேண்டும். அது தாங்களாக இருக்க வேண்டும் என்பது என் அவா,'' என்றார்.

""ராமானுஜா! என்ன பேச்சு இது. நான் ஜாதியில் வேளாளன். படிப்பு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அரிச்சுவடியே அறியாத ஒருவன் எப்படி மற்றொருவனுக்கு குருவாக முடியும்? வயதில் பெரியவன் என்ற தகுதியைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது?

உன்னிடமிருக்கும் அறிவுக்கு நீயே பலருக்கு குருவாக இருக்கலாம். சாஸ்திர அறிவு எனக்கு இல்லவே இல்லை.

பேரருள் புரியும் வரதராஜப்பெருமாளுக்கு தொண்டு செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன் நான். எம்பெருமான் கோடை காலத்தில் வெப்பத்தால் சிரமப்படுவார். அதற்காக வெட்டிவேர் பறித்து ஆலவட்டம்(விசிறி) செய்து அவருக்கு விசிறுவேன். அன்று மலர்ந்த பூக்களை யாராவது வைத்திருந்தால், அதை பிச்சையாகப் பெற்றோ, பணம் கொடுத்து வாங்கியோ அவருக்கு அணிவிப்பேன். கனிவகைகளை வாங்கி படைப்பேன். இதைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி நான். என்னைப் போய் உனக்கு குருவாக இருக்கச் சொல்கிறாயே. வேண்டுமானால் கல்வியில் உயர்ந்த உன்னிடம் நான் வேண்டுமானால் சிஷ்யனாக இருந்து கொள்கிறேன்,'' என்றார் நம்பி உருக்கத்துடன்.

ராமானுஜர் அவ்வுரை கேட்டு நெகிழ்ந்தார்.

""சுவாமி! அந்த பரந்தாமனே கதியென அவருக்கே சேவை செய்யும் ஒரு தகுதி போதாதா
தங்களுக்கு. இறைவனிடம் யார் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறாரோ, அவரே குருவாக இருக்க தகுதி படைத்தவர். அவ்வகையில் நீங்கள் என்னை சீடனாக ஏற்கத்தான் வேண்டும்,'' என சற்று அடம்பிடிப்பது போலவே பேசினார் ராமானுஜர்.

நம்பியோ யோசித்தார்.

இதற்குள் திருக்கச்சிநம்பியின் கால்களில் தடாலென விழுந்து விட்டார் ராமானுஜர். அவரது கண்களில் இருந்து ஆறாய் நீர் பெருகி ஓடியது. திருக்கச்சிநம்பி அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார்.
""ராமானுஜா! இறைவன் சித்தம் அதுவானால் அதைத் தடுக்க வல்லவர் யார்? இன்றுமுதல் நீ நம் ஊர் எல்லையிலுள்ள சாலக்கிணறுக்கு போ. அங்கிருந்து சுவாமியின் திருவாராதனத்துக்கு அபிஷேக நீர் கொண்டு வா. மற்றதை பின்னால் பார்ப்போம்,'' என்றார்.

ராமானுஜரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். இங்கே நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீரங்கம் சென்றடைந்த வைணவ மகாதலைவர் ஆளவந்தாருக்கு உடல்நிலையில் அசவுகரியம் ஏற்பட்டது. அவரைச் சுற்றி சீடர்கள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். நோய் முற்றி இருந்தாலும், நாராயணனின் நாமம் மட்டும் அவரது வாயிலிருந்து அகலவில்லை.

-தொடரும்...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை