புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 5



அதன் அழகு அவரைக் கவர்ந்தது. "" உமை மணாளா'' என தன் மார்போடு அணைத்துக் கொண்டார். தனக்கு லிங்கம் கிடைத்த விபரத்தை யாதவப்பிரகாசரிடமும், சக மாணவர்களிடமும் சொன்னார்.
யாதவப்பிரகாசர் அவரிடம், மகனே! உன் மிதமிஞ்சிய இறை பக்தியால் இது கிடைத்துள்ளது. இதை நீ தொடர்ந்து பூஜித்து வா, என்றார்.

குருவின் உத்தரவுபடி, கோவிந்தர் அதை பூஜிக்கலானார். காசி யாத்திரை முடிந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

லிங்கத்தை எடுத்துக் கொண்டு கோவிந்தர் வந்தார். காஞ்சிப் பயணத்தின் நடுவே அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தனர். அத்தலம் தான் காளஹஸ்தி. அவ்விடத்தை பார்த்தவுடனேயே, கோவிந்தர் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. குடும்பப்பற்று, உலகப்பற்று எல்லாம் அறுந்தது. அவர் யாதவப்பிரகாசரிடம் ஓடினார்.

"" குருவே! இவ்விடத்தை விட்டு நகர என் மனம் ஏனோ மறுக்கிறது. நான் காஞ்சிபுரத்துக்கு வரவில்லை. இங்கேயே நான் தங்கப் போகிறேன்.

பாணலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இங்கேயே என் காலத்தைக் கழித்து விடுகிறேன். நீங்கள் என் அன்னையிடமும், பெரியம்மாவிடமும் இந்த தகவலைச் சொல்லி விடுங்கள்,'' என்றார்.

தன் மாணவனின் உறுதியான பக்தி யாதவப்பிரகாசரை மிகவும் கவர்ந்தது. அவரது கோரிக்கையை ஏற்றார். கோவிந்தரை அங்கேயே விட்டுவிட்டு மாணவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்தனர்.

கோவிந்தரின் தாயிடம் யாதவப்பிரகாசர் நடந்ததைச் சொன்னார். மகன் சிவ வழிபாட்டில் இறங்கியது குறித்து அவர் மகிழ்ச்சியே அடைந்தார். இருப்பினும், பெற்ற பாசத்தால் மகனை ஒருமுறை பார்த்து வர முடிவெடுத்தார். அக்காவிடம் சொல்லிவிட்டு காளஹஸ்தி புறப்பட்டார். தாயைக் கண்டு மகனுக்கு பெரும் மகிழ்ச்சி. சில நாட்கள் அங்கு தங்கி விட்டு, ஊர் திரும்பினார் அந்தத்தாய்.

"ராமானுஜன் தொலைந்தான், இனி எவ்வித தொல்லையும் இல்லாமல் பாடம் எடுக்கலாம்' என யாதவப்பிரகாசர் மகிழ்வுடன் பாடங்களை ஆரம்பித்தார்.

அப்போது வாசலில், ""ஐயா, உள்ளே வரலாமா?'' என கேட்டு வாசலில் ஒரு வாலிபன் நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அங்கே ராமானுஜர் நின்றார். முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவரை உற்று நோக்கினார் யாதவப்பிரகாசர்.

அவரை அழைத்துக் கொண்டு நல்லவர் போல் அவரது தாயிடம் சென்றார். ""அம்மா! ராமானுஜனை விந்திய மலைக்காட்டில் விட்டு வந்து விட்டேனே என நான் வருந்தாத நாள் கிடையாது. பொறுப்பில்லாமல் நடந்து விட்டேனோ என கவலைப்பட்டேன். இப்போது அவன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது,'' என குழைந்தார்.

தாயும், மகனும் அவர் சொல்வதை நம்புவது போல் நடித்துக் கொண்டார்கள்.

"" ராமானுஜா! நீ இனி நம் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம்,'' என அவர் கூறவும், தன்னைக் கொல்லத் துணிந்தவர் என்றும் பாராமல், "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்ற குறளின் அடிப்படையில், ராமானுஜர் அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். இச்செய்கையால், அந்த ஆசிரியர் கூனிக் குறுகிப் போனார். ராமானுஜரும் அதே பள்ளிக்கு படிக்கச் சென்றார்.

இந்நிலையில், வைணவத்தலைவர் ஆளவந்தார் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். அவர் நூறுவயதை தாண்டிய பெரியவர். வரதராஜப் பெருமாளை சேவித்து விட்டு, வெளியே வந்தபோது, ஒரு இளைஞனின் தோள்பட்டையில் கையூன்றி, யாதவப்பிரகாசர் எதிரே வருவதைக் கண்டார்.

அந்த இளைஞர் ஒளிபொருந்தியவனாகக் காணப்பட்டார்.

அவரது தேஜஸ் கண்டு வியப்படைந்த அவர், அவரைப்பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்.

""இவ்விளைஞனை யாதவப்பிரகாசர் போன்றவர்களிடம் சிக்க வைத்து விட்டாயே,'' என அவர் பெருமாளிடம் முறையிட்டார். இருப்பினும், ராமானுஜருடன் அவர் பேசவில்லை. பெருமாள் சித்தப்படி நடக்கட்டும் என அவர் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் கிளம்பி விட்டார்.

ஒருசமயம், காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார்.

""ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு,'' என எச்சரித்தார்.
அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை. அதை விரட்ட பல மந்திரங்களைச் சொன்னார். எதற்கும் கட்டுப்படாத அந்தப் பிரம்ம ராட்சஸ், யாதவப்பிரகாசரிடம், ""நீர் என்னை விரட்ட முயன்றால் அது நடக்காது. உம் மந்திரத்தை விட நான் சக்திவாய்ந்தவன்,'' என சவால் விடுத்தது.

யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். ""அப்படி வாரும் வழிக்கு!''என்ற அந்தப் பேய் சொன்னது கேட்டு யாதவப்பிரகாசர் அதிர்ந்தார். ""பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவி வசிக்கிறாள். அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான்போய்விடுவேன்,'' என்றது.
உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், ""பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார்.

""ஐயனே! தங்கள் திருவடிகளை என் மீது வைத்தால் நான் விலகி விடுவேன்,'' என்று சொன்ன ராட்சஸ், அந்தப் பெண்ணை விட்டு வெளியே வந்து அவரது காலடியில் அமர்ந்தது. ராமானுஜரும் அதன் மீது பாதங்களை வைத்தார்.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக