புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 4



ஆனாலும் என்ன செய்ய முடியும்? ராமானுஜர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து விட்டார். அவரது மனதில் ஒரு தைரியம் தோன்றியது. யாரோ அவரைத் தட்டிக் கொடுப்பது போல் தெரிந்தது. ""ராமானுஜா! கலங்காதே! நாராயணன் உன்னோடு இருக்கிறான். அவன் எங்கும் பரவியும் இருக்கிறான். அவன் துணையிருக்கும் போது ஏன் அச்சப்பட வேண்டும்?'' என்ற யாரோ சொல்வதைப் போல உணர்ந்தார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அறியாமல், காட்டுக்குள் வேகமாக நடந்தார். அவரது பயணம் தெற்கு நோக்கி அமைந்தது. ஒரு மணி நேர நடை! "ராமானுஜா! ராமானுஜா' என்று யார் யாரோ தன்னைக் கூப்பிடுவது போல் உணர்ந்தார். ஆனாலும், அவர் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தான் அந்தப் பஞ்சுப்பாதங்கள் நொந்து போயின. அதற்கு மேல் நடக்க இயலாத அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார். இருள் சூழ்ந்திருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. அசதி கண்களைச் சுழற்ற அப்படியே தூங்கி விட்டார்.
கண்விழித்துப் பார்த்தால், உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்தது. விடிந்தது கூட தெரியாமல் மதியம் வரை உறங்கி விட்டிருந்தார் அவர். அருகில் ஒரு குளம் தெரிந்தது. அங்கே போய் கை கால் முகம் கழுவிக் கொண்டார். தூக்கம் காரணமாகவும், முகம் அலம்பியதாலும் சற்றே சுறுசுறுப்பு ஏற்பட்டது. இனிமேல் எங்கு செல்வது என யோசித்துக் கொண்டிருந்த போது, ""குழந்தாய்'' என்ற சப்தம் கேட்டு திரும்பினார்.

ஒரு வேடனும் அவன் மனைவியும் அங்கே நின்றனர். அவர்களின் கரிய, சிவந்த கண்ணுள்ள தோற்றத்தைக் கண்டு ராமானுஜர் சற்றுபயந்தார்.

""குழந்தையே! நீ யார்? காட்டுக்குள் வழி தவறி வந்து விட்டாயா? உன்னைப் பார்த்தால் பிராமணர் வீட்டுப் பிள்ளையாகத் தெரிகிறதே!'' என்றனர்.

""வேடரே! என் ஊர் காஞ்சிபுரம். அங்கிருந்து வந்திருக்கிறேன். ஊருக்குப் போக வேண்டும், ஆனால், இங்கிருந்து அதிக தொலைவு இருக்கிறது,'' என்ற ராமானுஜரிடம், ""காஞ்சிபுரத்துக்கா! அங்கே செல்லும் வழியில் திருடர்கள், மிருகங்கள் பயம் அதிகமாயிற்றே!நல்ல வேளையாக எங்களை நீ பார்த்தாய். நாங்களும் அங்கே தான் போகிறோம்.

எங்களோடு நீ வந்தால் பத்திரமாக கொண்டு சேர்த்து விடுகிறோம்,'' என்றான் வேடன்.

""வேடனே! உங்கள் ஊர் எது?'' என்றதும், ""நாங்கள் விந்தியமலை அடிவாரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேடர் தொழில் செய்யும் நாங்கள், இப்போது போகிற வழிக்கு புண்ணியம் சேர்ப்பதற்காக, காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சென்று தீர்த்தமாடப் போகிறோம். நீ பயப்படாமல் எங்களுடன் வா. உன்னை காஞ்சிபுரத்தில் விட்டுவிடுகிறோம்,'' என்றான் வேடன்.

ராமானுஜரும் அவர்களுடன் புறப்பட்டார். இரவானதும் அவர்கள் ஒரு ஆற்றங்கரையில் தங்கினர். வேடனின் மனைவி தண்ணீர் கேட்டாள். ஆற்றில் இறங்கபோதிய வெளிச்சமில்லை.

வேடன் அவளிடம், ""இப்போது தண்ணீர் எடுக்க போக முடியாது. அருகில் ஒரு படிக்கட்டுள்ள கிணறு இருக்கிறது. காலையில், அதில் இறங்கி தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்,'' என்றான். வேடன் மனைவியும் தாகத்துடன் தூங்கி விட்டாள்.

மறுநாள் ராமானுஜர் எழுந்தார். கிணற்றில் இறங்கி முகம் கழுவிவிட்டு, முந்தையநாள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வேடனின் மனைவிக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். மூன்று தடவை தண்ணீர் கொடுத்தும் அவள் தாகம் தீரவில்லையே என்றார். மீண்டும் ஒருமுறை சென்று அவர் தண்ணீர் முகர்ந்து வந்த போது, அவளையும் வேடனையும் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கால்களை உயர்த்தி நின்று பார்த்தபோது, ஓரிடத்தில் கோயில் கோபுரங்கள், மாடமாளிகைகள் தெரிந்தன.
"காட்டை விட்டு ஏதோ ஒரு ஊர் பக்கம் வந்து விட்டோம் போலிருக்கிறது! அது எந்த ஊராக இருக்கும்?' என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அங்கே ஒருவன் வந்தான்.

""ஐயா! இது எந்த ஊர்?'' என்றதும், அவன் சிரித்தான்.

""என்னைய்யா நீர்! காஞ்சிபுரத்துக்காரரான நீர், சொந்த ஊரில் நின்றுகொண்டே அடையாளம் தெரியாமல் விழிக்கிறீர்! இந்த சாலக்கிணறைக் கூடவா மறந்து விட்டது! இதன் நீரை பருகி, நோய் தீர்பவர்கள் ஏராளம் என்று உமக்குத் தெரியாதா! நீர் யாதவப்பிரகாசரிடம் படித்தவர் என்ற விபரமும் எனக்குத் தெரியும்,'' என்று சொல்லிவிட்டு அவன் போக்கில் நடந்தான்.

ராமானுஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. வேடனும், அவன் மனைவியுமாக வந்து தன்னைக் காத்ததும், காஞ்சிபுரத்துக்கு மிக விரைவில் வரச்செய்ததும் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் பேரருளாளன் நாராயணனும், பெருந்தேவித் தாயாராகிய, லட்சுமிதேவியுமே என்ற முடிவுக்கு வந்தார். கண்களில் நீர் ததும்ப அவர்களைப் புகழ்ந்து பாடினார். பின், தன் வீடு நோக்கி நடந்தார்.

ஊருக்குச் சென்ற மகன் திடீரென ஊர் திரும்பியது கண்டு காந்திமதியம்மைக்கு மகிழ்ச்சி. அதேநேரம், இவ்வளவு சீக்கிரம் திரும்பியது கண்ட அவள், ""மகனே! கங்கைக்கு சென்று திரும்ப குறைந்தது ஆறுமாதமாவது ஆகுமே! நீ சீக்கிரம் வந்துவிட்டாயே! அதுசரி...கோவிந்தன் எங்கே?'' என்று கேள்விகளை அடுக்கினார்.

ராமானுஜர் நடந்ததையெல்லாம் அம்மாவிடம் விளக்கமாகச் சொன்னதும், அந்தத்தாய் மனம் பதறியது. பின், அவள் சமைப்பதற்கான ஆயத்தங்களைக் கவனிக்க ஆரம்பித்த போது, ராமானுஜரின் சிற்றன்னை தீப்திமதியும், மனைவியும் வந்து சேர்ந்தனர். தன் கணவர் ஆறுமாதம் கழித்து வருவார் என்ற நிலையில், கிளம்பிய சில தினங்களிலேயே வந்து சேர்ந்தது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த நேரத்தில் திருக்கச்சி நம்பியும் அவர்கள் இல்லத்துக்கு வரவே மகிழ்ச்சி இரட்டிப்பானது.

இந்த நேரத்தில், ராமானுஜர் காணாமல் போனதால், அவரை மிருகங்கள் ஏதாவது கொன்றிருக்கும் என்ற முடிவுக்கு வந்த யாதவப்பிரகாசர் தன் மற்ற சீடர்களுடன் காசியைச் சென்றடைந்தார். அவர்கள் கங்கையில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, கோவிந்தரின் கைகளில் ஒரு பாணலிங்கம் சிக்கியது.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக