புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 3



குருவே! கப்யாஸம் என்ற சொல்லைப் பிரித்து பொருள் சொல்லவேண்டும். "கப்' என்றால் "சூரியன்'. "அஸ்' என்றால் "மலர்தல்'. "கப்யாஸ' என்பதிலுள்ள "ஆஸ' என்ற சொல்லுக்கு "மலர்ந்தது' என்றும் பொருளுண்டு. ஆக, கப்யாஸம் என்ற சொல்லுக்கு "சூரியனால் மலர்ந்தது' என்றே பொருள் சொல்ல வேண்டும். பரந்தாமனின் கண்கள் சூரியக்கதிர்களால் மலர்ந்த தாமரை பூப்போல் உள்ளன' என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

இதைக்கேட்ட யாதவப் பிரகாசர், ""நீ ஒரு சொற்றொடரைப் பிரித்து பொருள் சொல்கிறாய். இலக்கணத்தில் பெரிய புலவன் என்று வேண்டுமானால் உன்னைச் சொல்லலாம்,'' என்பதுடன் நிறுத்திக் கொண்டார். இறைவனுக்கு உருவமில்லை என்ற அத்வைத கொள்கையை நம்பும் யாதவப்பிரகாசரால், இறைவனுக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து அவனது கண்களை வர்ணிக்கும் ராமானுஜரின் துவைதக்கொள்கை பிடிக்கவில்லை. கொள்கைகள் ஒத்துப்போகாத இடத்தில் நட்பு எப்படி நீடிக்கும்? யாதவப்பிரகாசர் ராமானுஜரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெறுப்பை மேலும் வளர்க்கும் வகையில் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது. உபநிஷதம் ஒன்றில் வரும்
வாக்கியம் தொடர்பாக இருவருக்குமிடையே வகுப்பு நடக்கும் போதே சர்ச்சை ஏற்பட்டது. அன்றைய தினம் யாதவப்பிரகாசர் கொதித்து விட்டார்.

""அடேய்! திமிர் பிடித்தவனே! உனக்கு என்னிடம் பாடம் கற்க இஷ்டமில்லையென்றால் இங்கிருந்து வெளியே போய்விடு. நான் உனக்கு ஆசிரியரா? நீ எனக்கு ஆசானா? நீ ஆசானாக இருக்க விரும்பினால், நீ தனியாக ஒரு பள்ளி துவங்கி அங்கே மாணவர்களுக்கு கற்றுக்கொடு,'' என்றவர், சற்று நேரம் கழித்து கோபம் தணிந்தவராய்,"" உன் விளக்கம் ஆச்சாரியார்களின் கருத்துக்கு ஒத்துப்போகாது. இனிமேல், வகுப்பு நடக்கும்போது குறுக்கே பேசாதே!'' என்று சாந்தமாய் சொன்னார்.

ஆனாலும், நாளடைவில் ராமானுஜர் மீது அவருக்கு கடும் வெறுப்பு ஏற்பட்டது.

அத்வைதத்துக்கு மாறான கருத்துக்களை இந்தச்சிறுவன் எதிர்காலத்தில் உலகில் பரப்புவானோ என்ற பயமும், தன்னை மிஞ்சி இவன் வளர்கிறானே என்ற பொறாமையும் இணைந்து கொள்ளவே, கொலை வெறிக்கு அவரைத் தூண்டியது.

"ஆம்! ராமானுஜரைக் கொன்று விட்டால் என்ன!' அவரது மூளை வேகமாய் வேலை செய்தது.
ஒருநாள் அவர் தன் மாணவர்களை அழைத்தார்.

""சீடர்களே! நீங்கள் யாரும் என் பாடத்தில் குற்றம் காண்பதில்லை, குறை சொல்வதில்லை. நான் சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள், படிக்கிறீர்கள். இந்த ராமானுஜன் எப்போது பார்த்தாலும் குறுக்கே புகுந்து எதிர்த்துப் பேசுகிறான். தப்பான பொருளைச் சொல்கிறான். அவன் துவைதக் கருத்தை ஆதரிப்பவன். துவைதத்தை ஆதரிப்பவர்கள் நாத்திகனுக்கு சமம். இவனை எப்படிக் கட்டுப்படுத்துவது?'' என்று கேட்டார்.

""அவனை பள்ளியை விட்டு விலக்கி விடுங்கள்,'' என்றான் ஒரு மாணவன்.

இன்னொருவன் குறுக்கிட்டு,""அப்படி செய்தால் அவன் தனிப்பள்ளி துவக்கி துவைதக் கருத்துக்களைப் போதிப்பான்.அதை அனுமதிப்பது இன்னும் கேடானது,'' என்றான்.

கடைசியாக அவரைக் கொலை செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

இதையடுத்து கொலைத் திட்டத்தையும் அவர்கள் தயார் செய்தனர். யாதவப்பிரகாசரே அதற்கு ஆலோசனையும் சொன்னார்.

""மாணவர்களே! நாம் கங்கைக்கு யாத்திரை புறப்படுவோம். ராமானுஜனையும் நாம் அழைத்துச் செல்ல வேண்டும். செல்லும் வழியில் அவனைக் கொன்று விட்டு, கங்கையில் மூழ்கி பாவத்தையும் தீர்த்து விட்டு வந்து விட வேண்டியது. சரிதானே!'' என்றார்.

மாணவர்கள் ஒட்டு மொத்தமாக தலையை அசைத்தனர். திட்டமிட்டபடி பயணம் துவங்கியது. ராமானுஜருடன் அவரது சிற்றன்னை காந்திமதியின் மகன் கோவிந்தரும் படித்தார். அவருக்கு இந்தக் கொலை திட்டம் பற்றி ஆரம்பத்தில் தெரியாது. விந்தியமலையின் அடிவாரத்திலுள்ள காட்டுப்பகுதியான கோண்டாரண்யத்துக்கு அவர்கள் வந்து தங்கியிருந்த போது தான், மாணவர்கள் அரசல் புரசலாக பேசியதைக் கேட்டுவிட்டார்.
ஏனெனில், ஆள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில் தான் கொலைத்திட்டத்தை நிறைவேற்ற யாதவப்பிரகாசரும் மாணவர்களும் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தினருகே ஒரு குளம் இருந்தது. அங்கே ராமானுஜரும் கோவிந்தரும் கைகால் கழுவச் சென்றனர்.

அவர்கள் தனித்திருந்த அந்த சமயத்தைப் பயன்படுத்தி கோவிந்தர் ராமானுஜரின் காதுகளில், ""அண்ணா! இன்று பொழுது சாயும் நேரத்தில் உங்களைக் கொல்ல நமது ஆசிரியரும் மாணவர்களும் திட்டமிட்டுள்ளனர். இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்று விடுங்கள்,'' என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று தூரத்தில் நின்ற மாணவர்களுடன் இணைந்து கொண்டார்.

ராமானுஜருக்கு இந்தச் செய்தி இடி தாக்கியது போல் இருந்தது. பொழுது சாய இன்னும் இருந்தது வெறும் அரை மணி நேரமே...""யார் கண்ணிலும் படாமல் எப்படி தப்பிப்பது? அப்படியே தப்பித்தாலும் அடர்ந்த இந்த வனத்துக்குள் எங்கே செல்வது? ஊரை விட்டு எங்கோ வந்து விட்டோமே!'' அவர் சுற்று முற்றும் பார்த்தார்.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக