புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 2



நம்பியிடம் சென்ற ராமானுஜர்,""ஐயா! தாங்கள் இன்று எனது இல்லத்திற்கு உணவருந்த வரவேண்டும்,'' என்று வேண்டுகோள் வைத்தார்.

குழந்தையாக இருந்தாலும், பணிவுடன் தன்னை வரவேற்றது குறித்து திருக்கச்சிநம்பி மகிழ்ந்தார். அவரது அழைப்பை தவிர்க்க அவரால் இயலவில்லை. ராமானுஜருடன் வீட்டுக்குச் சென்றார்.

அவருக்கு அன்போடு உணவளித்தார். சாப்பிட்டு முடித்ததும், ஓரிடத்தில் அவரை அமரச்சொல்லி, கால்களைப் பிடித்து விட முன்வந்தார். ஆனால், நம்பி அதைத் தடுத்துவிட்டார்.

""ராமானுஜரே! நான் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவன். உங்களுக்கு தொண்டன். இந்த சிறியவனுக்குப் போய் நீங்கள் இத்தகைய பணிவிடையைச் செய்வதாவது!'' என்றார்.

இதைக்கேட்டு வருத்தப்பட்ட ராமானுஜர்,""ஐயனே! ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை ஜாதியா நிர்ணயிக்கிறது! பூணூல் அணிவதால் மட்டும் ஒருவர் பிராமணர் ஆகிவிட முடியாது. பகவானிடம் பக்தி செலுத்தும் எந்த வகுப்பைச் சேர்ந்தவராயினும் அவர் பிராமணரே! திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலத்தில் தான் பிறந்தார். ஆனால், பரமனிடம் பக்தி செலுத்தியதால், அவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆனது தாங்கள் அறியாதது அல்லவே! மேலும் பிராமணர்களே அவரை வணங்கினார்களே!'' என்றார்.

சிறுவனாக இருந்தாலும், ராமானுஜரின் அர்த்தமுள்ளதும் கருணையும் மிக்க பேச்சு திருக்கச்சி நம்பியைக் கவர்ந்தது. இருவரும் நெடுநேரம் பல ஆன்மிக விஷயங்களை விவாதித்தனர். அன்றிரவு அங்கேயே தங்கிய நம்பி மறுநாள் தான் கிளம்பினார். அதன்பிறகு அவர்கள் மிகவும் நெருக்கமானார்கள்.

சிறுவனாக இருந்தராமானுஜர் இளைஞரானார். அவருக்கு வயது 16 ஆனது. அக்காலத்தில், அந்த வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவரது தந்தை ஆசூரி கேசவாசாரியார் பெண் பார்த்தார். திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அன்றைய வழக்கப்படி ஒருவாரம் அவருக்கு மணவிழா நடத்தப்பட்டது.

திருமணமாகி ஒருமாதம் ஆன நிலையில், ஆசூரி கேசவாசாரியார் நோய்வாய்ப்பட்டு பரமனின் திருவடிகளை அடைந்தார். ராமானுஜரின் தாய் காந்திமதி அம்மையார் மிகுந்த வருத்தப்பட்டார். அதன்பிறகும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தால், அம்மாவை பழைய நினைவுகள் வாட்டும் என்பதால் காஞ்சிபுரத்தில் வீடு கட்டி அங்கு குடிபெயர்ந்து விட்டார் ராமானுஜர்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற பண்டிதரான யாதவப்பிரகாசர் வசித்து வந்தார். திறமை மிக்க அவரிடம் ஏராளமான மாணவர்கள் படிக்க வந்தனர். திருமணமாகி விட்ட போதிலும், சாஸ்திரங்களில் சிறந்த தெளிவு பெறுவதற்காக அவரது மாணவராகி விட்டார் ராமானுஜர். ராமானுஜரை யாதவப்பிரகாசருக்கு மிகவும் பிடித்து விட்டது. "எவ்வளவு ஒளிமயமான முகம்!' என்று ஆச்சரியப்பட்டார். ராமானுஜரும் ஆசிரியரிடம் மிக அடக்க ஒடுக்கமாக நடந்து நற்பெயர் பெற்றார்.

ஆனால், கொஞ்சநாளில் சில சித்தாந்தக் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யாதவப்பிரகாசர் கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லும் அத்வைதக் கொள்கையைக் கடைபிடிப்பவர்.ராமானுஜருக்கு இந்தக் கருத்தில் <உடன்பாடில்லை. ஆனாலும், ஆசிரியரை எதிர்த்துப் பேசக்கூடாதென்ற காரணத்தால், ராமானுஜர் இதுபற்றி தன் கருத்து எதையும் முன்வைக்காமல் அமைதியாக இருந்தார்.

இந்த அமைதிக்கும் ஒருநாள் பங்கம் வந்தது.

அன்று, பாடங்கள் முடிந்ததும், தனக்கு எண்ணெய் தேய்த்து விடுமாறு, தனது பிரியமான சீடர் ராமானுஜருக்கு யாதவப்பிரகாசர் உத்தரவிட்டார். ராமானுஜரும் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வந்த ஒரு மாணவன், ""குருவே! காலையில், தாங்கள் நடத்திய பாடத்தில், "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணீ' என்ற வாக்கியத்திற்கு பொருள் அறிய கடினமாக இருக்கிறது,'' என்றான்.

""நான் தெளிவாகத்தானே சொன்னேன். "பரந்தாமனின் இரண்டு கண்களும், குரங்கின் பிருஷ்டபாகம் போல் சிவந்த தாமரை மலராய் காட்சியளிப்பவை' என்பது இதற்குப் பொருள்,'' என்றார்.

அந்தநேரத்தில் யாதவப்பிரகாசரின் தொடையில் சூடாக ஏதோ திரவம் விழுந்தது. அவர் என்னவென்று ஏறிட்டுப் பார்த்த போது, ராமானுஜரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் பதை அவர் புரிந்து கொண்டார்.

""ராமானுஜம்! ஏன் அழுகிறாய்? உன் வருத்தத்துக்கு என்ன காரணம்?'' என்றார்.

""குருவே! தங்களைப் போன்ற மகான்களின் திவ்யமான வாயிலிருந்து, அந்த மாணவன் கேட்ட சொல்லுக்குரிய பொருள் இப்படி வரலாமா? நம் பரந்தாமன் எல்லா சிறப்புகளும் வாய்ந்தவன், கல்யாண குணங்கள் கொண்டவன். அவனது கண்களின் சிறப்பை குரங்கின் ஆசனவாயுடன் ஒப்பிட்டுப் பேசியதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,'' என்று கூறிவிட்டு மேலும் கண்ணீர் சிந்தினார்.

""அடேய்! என் கண்களிலும் இப்போது நீர் சுரக்கிறதடா உன் அதிகப்பிரசங்கித்தனம் கண்டு! கப்யாஸம் என்ற சொல்லுக்கு ஸ்ரீசங்கராச்சாரியர் விளக்கியபடி தான் பொருள் சொன்னேன். உனக்கு இதை விட சிறந்த பொருள் தெரியுமோ?'' என்றார் சற்றே கடுமையாக!

""குருவே! நான் தங்களின் பரமஆசி பெற்றவன். அந்த ஆசியின் துணைகொண்டு இதற்கு உகந்த பொருளை என்னால் சொல்ல முடியும்?'' என்றார் ராமானுஜர் மிகுந்த தன்னடக்கத்துடன்.

சீடர் இவ்வாறு பேசியது யாதவப்பிரகாசருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், ""சரி..சரி...நீ சங்கரரை விட உயர்ந்தவனாக எண்ணுகிறாய் போலும்! எங்கே உன் விளக்கத்தைச் சொல் பார்க்கலாம்!'' என்றார் வெறுப்பை வெளியில் கொட்டி!ராமானுஜர் பொருள் சொல்ல துவங்கினார்.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக