திருமலை நம்பிகளின் குருபக்தி!


திருமலை நம்பிகள், திருமலையில் பெருமாளுக்கு தீர்த்தக் கைங்கரியம் செய்து வந்தார். தள்ளாத வயதிலும் பெருமாளுக்கு அன்போடும் சிரத்தையோடும் தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் வைணவ ஆசார்யரான ராமானுஜர் தன் சீடர்களுடன் திரு மலைக்கு விஜயம் செய்யவிருக்கும் செய்தி நம்பிகளுக்கு எட்டியது. ராமானுஜர், திருமலை நம்பிகளை விட இளையவர் என்றாலும், அவர் குரு என்பதால் ஆலய சம்பிரதாயப்படி திருமலை அடிவாரத்துக்கே வந்து சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்றார். கீழே தரையில் விழுந்து வணங்கி எழுந்தார்.

இதைக் கண்ட ராமானுஜர் நம்பிகளிடம், ‘‘என்னை வரவேற்க இந்த தள்ளாத வயதில் வருவானேன்? உம்மைவிட வயதில் குறைந்த யாரையாவது அனுப்பி இருக்கக் கூடாதா?’’ என்றார் அன்புடன்.

‘‘ஸ்வாமி... தேடிப் பார்த்தேன். எல்லாவற்றிலும் குறைந்தவன் நான்தான் என்று தோன்றியது. அதனால் நானே வந்து விட்டேன்’’ என்றார் நம்பிகள். இதைக் கேட்டதும் உள்ளம் மகிழ்ந்த ராமானுஜர் அவரைக் கட்டித் தழுவி ஆசி வழங்கினார்.

எம்.வி.குமார், மதுராந்தகம்

நன்றி - சக்தி விகடன்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை