வியாழன், 20 செப்டம்பர், 2012

கண்ணனைத் துரத்திய வசிஷ்டர்!


வசிஷ்ட முனிவர், பகவான் கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் அவருக்கு பூஜை செய்து வந்தார். பகவானுக்கு வெண்ணெய் பிடித்தமானது என்பதால், அதையே நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது வசிஷ்டரின் வழக்கம்.

வசிஷ்டரைச் சோதிக்க நினைத்த கண்ணன், ஒரு நாள் சிறுவனாக வடிவம் எடுத்து அவருடைய ஆசிரமத்துக்குள் நுழைந்தார். அன்றைய நைவேத்தியத்துக்காக வசிஷ்டர் அங்கு வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும் தின்று தீர்த்து விட்டார். இதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட வசிஷ்டர், ‘‘ஏய், யாரது?’’ என்று உரக்கக் குரல் கொடுத்தபடி சிறுவனைப் பிடிக்க முயற்சித்தார்.

கண்ணன் குடுகுடுவென ஓட, வசிஷ்டர் துரத்தினார். அப்போது அந்தப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் சிலர், ஓடுவது இறைவனே என அறிந்தனர். அவர்கள் தங்களது தவ வலிமையால் கண்ணனைப் பாசக் கயிற்றால் கட்டிப் போட முயற்சித்தார்கள். கண்ணனும் அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு, ஓட்டத்தை நிறுத்தி அதே இடத்தில் நின்றார். பின்னால் ஓடி வந்த வசிஷ்டரும், கண்ணனைத் தொட்டவுடன், உண்மையை உணர்ந்து, கிருஷ்ணனின் பாதங்களைப் பக்தியுடன் பற்றிக் கொண்டார்.

வசிஷ்டர் மற்றும் அங்கிருந்த முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று கண்ணன் அங்கேயே கோயில் கொண்டான். பக்திக்குக் கட்டுண்ட கண்ணன், நின்ற அந்தத் திருவிடம் ‘திருக்கண்ணங்குடி ஆயிற்று. திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

ஆர். சுப்பிரமணியன், சென்னை - 91.

நன்றி - சக்தி விகடன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக