ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 21

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 21


மறுநாள் முகூர்த்தம்...
பத்மாவதிக்கு தங்க மாலைகள் சூட்டி, நவரத்தினக் கற்கள் இழைத்த ஒட்டியாணம் பூட்டி, தோள்வளை, கை வளைகள் பூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தனர். ஆகாசராஜன் தம்பதியர் கண்ணீர் மல்க, தங்கள் செல்வப்புதல்வி, அன்றுமுதல் இன்னொருவனுக்கு சொந்தமாவதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.
இதுபோல, சீனிவாசன் கிரீடம் அணிந்து, பட்டு பீதாம்பரம், நகைகள் பூட்டி, மலர் மாலைகளுடன் கம்பீரமாக வந்தார். காதலிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தோஷத்தை விட, காதலித்தவளை மணமுடிக்கும் போது ஏற்படும் சந்தோஷம் அளப்பரியது. 

ஒரு போரில் வெல்வது எளிது, தேர்வில் நூறு மதிப்பெண் பெறுவது எளிது, ஆனால், காதலில் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல! காதல் என்ற வலைக்குள் ஒருத்தி அல்லது ஒருவனை வீழ்த்துவதென்பதே பகீரத பிரயத்தனம்! அவ்வாறு வீழ்ந்து விட்ட காதலர்களின் மனம் ஒன்றுபட்ட பிறகு, பெற்றவர் என்ன, உற்றவர் என்ன, உடன்பிறந்தவர் என்ன, நண்பர்கள் என்ன... யார் வந்து பிரிக்க நினைத்தாலும் அதில் அவர்கள் தோல்வியையே தழுவுகிறார்கள்.

பத்மாவதி தன்னைக் காதலிக்க வந்த சீனிவாசனை கல்லால் அடித்து விரட்டினாள். இருந்தாலும் விட்டாரா மனிதர்...விடாப்பிடியாக இருந்து அம்மாவிடம் பேசி, அரசன் வீட்டு பெண்ணையே வளைத்து வெற்றி பெற்ற கம்பீரம் அவர் முகத்தில் தெரிந்தது. காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது என்றால் இரட்டிப்பு சந்தோஷமல்லவா!

பிரகஸ்பதி, பிரம்மா, வசிஷ்டர் ஆகியோர் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களை ஓதினர். நாதஸ்வரம், தவில், பேரிகை ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. இறைவனின் திருமணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி வந்திருந்த விருந்தினர்களுக்கெல்லாம் மனதில் பரவசம்.

வசிஷ்டர் சீனிவாசனை ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மணையில் (பலகை) அமரச் சொன்னார். அவருக்கு கங்கணதாரணம்(கையில் காப்பு கட்டுதல்) செய்து வைத்தார். மங்கள வாத்தியங்கள் ஒலித்தது.

பத்மாவதியை சீனிவாசனின் அருகில் அமர்த்தி, திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார்.
அவர்பத்மாவதியின் திருக்கழுத்தில் திருமாங்கல்யத்தைச் சூட, கோட்டு வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமாக ஒலித்தன. கெட்டிமேளம் கொட்டியது. கோடி மலர்கள் தூவி, வந்தவர்களெல்லாம் வாழ்த்தினர். பலர் அட்சதை தூவினர். இறைவன் தான் மனிதனை ஆசிர்வதிப்பான்.

இறைவனுக்கு அடிமையாகி விட்டால், அந்த பக்தனின் ஆசியை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இதைத் தவிர இந்த இடத்தில் வேறென்ன சொல்ல முடியும்? எல்லாரும் உணர்ச்சிப்பூர்வமாக கண் கொட்டாமல் இந்த காட்சியை ரசித்தனர். ஆகாசராஜனின் குடிமக்கள் அனைவருக்கும் கடவுளின் கல்யாணக் காட்சியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.

பூலோகத்தில் எத்தனையோ புனிதத்தலங்கள் இருக்க, தங்கள் தலத்தைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீமன் நாராயணனும், லட்சுமிதேவியாரும் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பெருமை தானே! அந்த பெருமை அனைவர் முகத்திலும் தெரிந்தது. நெஞ்சு பூரித்துப் பொங்கியது.

திருமணம் முடிந்ததும், சீனிவாசன் பத்மாவதியின் கையைப் பிடித்தபடி அக்னியை வலம் வந்தார். அருந்ததியே திருமணத்துக்கு வந்திருந்ததால், அவளை அவர்கள் நேரில் பார்த்தனர். அவள் மகிழ்வுடன் ஆசிர்வதித்தாள்.

அக்னி வலம் முடிந்ததும், மணமக்களுக்கு திருஷ்டி கழிக்க சரஸ்வதி, பார்வதிதேவி ஆகியோர் தங்கத்தட்டில் ஆரத்தி கரைசலை எடுத்து வந்தனர். அவர்களுக்கு மங்களஆரத்தி செய்தனர். அப்போது, கந்தர்வர்கள் ஆகாயத்தில் இருந்து புஷ்பமழை பொழிவித்தனர். வகுளமாலிகையும், வசிஷ்டரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருக்கத்தானே செய்யும்! ஸ்ரீமன் நாராயணன், ராமபிரானாக அவதரித்த போதும் அவருடைய திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியம் வசிஷ்டருக்கு கிடைத்தது! சீனீவாசனாக அவதாரம் எடுத்த கலியுகத்திலும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. வகுளாதேவி, யசோதையாக கோகுலத்தில் வாழ்ந்தபோது, கண்ணபிரானின் குழந்தைப்பருவ லீலைகளை பார்க்கும் யோகம் பெற்றாளே அன்றி, திருமணத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது இப்போது கிடைத்ததை எண்ணி அவள் சந்தோஷப்பட்டாள்.

அடுத்து மணமக்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசிபெறும் படலம் ஆரம்பமானது. அவர்கள் முதலில் வகுளாதேவியிடமும், பின்னர், மாமனார் ஆகாசராஜன், மாமியார் தரணீதேவியிடம் ஆசிர்வாதம் பெற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தினர்.

ஆகாசராஜன் தன் மருமகனுக்கு சீதனமாக வஜ்ரகிரீடம், மகரகுண்டலங்கள், ரத்தின மோதிரங்கள், பொன் அரைஞாண், பத்தாயிரம் குதிரைகள், பணியாட்களை சீதனமாகக் கொடுத்தான். மருமகனுக்கே இவ்வளவென்றால் மகளுக்கு கொஞ்சமா! போட்ட நகைகள் போதாதென்று இரண்டாயிரம் கிராமங்களையும் சீதனமாக வழங்கினான்.

"சீதனம்' என்ற சொல்லை "ஸ்ரீதனம்' என்று சொல்ல வேண்டும். "ஸ்ரீ' என்றால் "லட்சுமி'. "தனம்' என்றால் "கடாட்சம்'. திருமணத்தின் போது, அன்றுமுதல் இன்று வரை எல்லா மணமகன்களும், மணமகள்களும் லட்சுமி கடாட்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம், இப்போது கூட வகைவகையாக தாம்பூலம் கொடுக்கிறார்கள். ஆகாசராஜனை கேட்க வேண்டுமா! வந்திருந்த அனைவருக்கும் தங்கத்தட்டில் தாம்பூலம் வைத்துக் கொடுத்தான். விருந்தோ தடபுடலாக இருந்தது. எதைச் சாப்பிடுவது, எதை விடுவது என்று சொல்ல முடியாத நிலை! அனைவரும் ஆகாசராஜனின் அன்புமழையில் நனைந்து திணறிப் போனார்கள் என்றால் மிகையில்லை.

—தொடரும்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை