ஒருவரைக் கத்தியால் குத்தித்தான் கொல்லவேண்டும் என்றில்லை; அரிவாளால் வெட்டித்தான் சாகடிக்கவேண்டும் என்பது கிடையாது; இன்றைக்கு இருக்கிற நவீன ஆயுதங்களால்தான் அழிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொன்று போடலாம்! எப்படி என்கிறீர்களா?
முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ”இதைவிட எளிமையான வழி இல்லை, அர்ஜுனா! உன் வில் தருகிற வலியைவிட, உன் அம்பு பாய்ந்து தருகிற இம்சையைவிட, நான் சொல்லும் முறையில் தாக்கலாம். அப்படித் தாக்கினால், அதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. துவண்டு சரிவார்கள். ஆனால் என்ன… உன்னைப் பொறுத்தவரைக்கும் அவர் இறந்துவிட்டார்; ஆனால், அவர் இறந்திருக்கமாட்டார்…” என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லச் சொல்ல, தலை கிறுகிறுத்துப் போனது அர்ஜுனனுக்கு.
”அட… என்ன கிருஷ்ணா நீ! நான் கடும் குழப்பத்தில் இருக்கிறேன். நீ என்னடாவென்றால், என்னைக் கேலி செய்வதுபோல் பேசுகிறாய். ஆயுதம் வேண்டாம் என்கிறாய்; ஆயுதம் எடுக்காமலேயே அழிக்கலாம் என்கிறாய். அவன் செத்துப்போவான் என்கிறாய். ஆனால், சாகமாட்டான் என்கிறாய். ஒன்றுமே புரியவில்லை” என்று புலம்பினான்.
”காண்டீபத்தைப் புரிந்துகொண்ட உன்னால் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லையே அர்ஜுனா! காண்டீபத்தைக் கேலி செய்தால், எவராக இருந்தாலும் மன்னிக்கமாட்டாய் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ்பவரைக் கொல்லும் உத்தி உனக்குத் தெரியவில்லையே” என்று பரிகாசம் செய்வதுபோல் பேசினார் கண்ண பரமாத்மா. ஆனாலும், அந்தப் பரிகாசத்தில் உண்மை ஒளிந்திருந்தது.
அதைக் கேட்டதும் ஆவேசமும் கோபமுமாக இருந்த அர்ஜுனனுக்கு அழுகையே வந்துவிட்டது.
”பின்னே என்ன கண்ணா… என் காண்டீபத்தை எவர் பழித்தாலும், அவர்களைச் சும்மா விடமாட்டேன் என்பது தெரியும்தானே உனக்கு! அப்படியிருக்க, தருமபுத்திரரே அப்படியொரு இழிவான செயலைச் செய்யலாமா?
போர்முனையில், எதிரியைத் தாக்குவதற்கு தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், நான் வீண் தாமதம் செய்வதாகக் கருதி, என்னையும் காண்டீபத்தையும் பழித்துவிட்டார் அண்ணன். காண்டீபத்தை பழிப்பவர்களைக் கொல்வேன் என சபதம் ஏற்றிருக்கிறேன் நான். அதை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் எனக்கு. ஆனால் நீயோ, ஏதேதோ சொல்லிக் குழப்புகிறாய்? எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் என்னதான் செய்ய வேண்டும். அதையேனும் சொல்!” என்றான் அர்ஜுனன்.
”நீ ஒன்றும் செய்யவேண்டாம். நேர்மையும் உண்மைக் குணமுமாக இருப்பவரை, சத்தியசீலரை, மரியாதைக்குறைவாக ஒரேயொரு வார்த்தை பேசிவிடு! அது கிட்டத்தட்ட அவரைக் கொன்றதற்குச் சமம்தான்!” என்றார் பகவான்.
அதாவது… மரியாதைக்கு உரிய நபரை, எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிற ஒருவரை, இறைபக்தியுடன் இருப்பவரை, எல்லோரிடமும் அன்பும் பிரியமுமாகப் பழகுபவரைக் கொல்வதற்கு வேறெதுவும் செய்யவேண்டாம்; அவரை அவச்சொல்லாக, மரியாதை கொடுக்காமல் பேசினால் போதும். அதுவே… அவர் இறந்ததற்குச் சமம் என்பதை உலக மக்களுக்கு எப்படி உணர்த்திவிட்டார், பகவான்!
சத்தியத்துக்கும் நேர்மைக்கும் இருக்கிற மகத்துவத்தை அர்ஜுனனுக்குச் சொல்வதன் மூலமாக, கண்ணபரமாத்மா நமக்கு அருளிய பாடம் இது.
அவமரியாதையாகச் சொல்கிற ஒற்றை வார்த்தையே ஒருவரைக் கொல்வதற்குப் போதுமானது. அதனால் அவன் இறப்பான்; இறக்காமல் இருப்பான் என்பதாகச் சொன்னார் அல்லவா ஸ்ரீகிருஷ்ணர்! அதேவிதமாக, இறைவனின் பிறப்பை, அவனுடைய அவதாரத்தை ஆழ்வார்களும் முன்னோர்களும் போற்றியுள்ளனர். அதாவது, ‘பிறக்காத எம்பெருமான் பிறக்கிறான்’ என்று சொல்லிப் பூரிக்கின்றனர்.
தேரைச் செலுத்திய ஸ்ரீகிருஷ்ணர், தேரை ஓட்டிச் செல்வதில் மட்டுமா கவனம் வைத்திருந்தார்? மொத்த யுத்தத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, போரில் பாண்டவர்களுக்கு வெற்றிவாகை சூடித் தந்தவராயிற்றே அவர்!
இருபத்தைந்து கஜ தூரத்தில் இருக்கிற அர்ஜுனனை நோக்கி பீஷ்மர் அம்புவிடுவார். சட்டென்று 250 கஜ தூரத்துக்குச் சென்று தேரை நிறுத்தியிருப்பார் பகவான். ‘ஓஹோ… 250 தூரத்தில் இருந்தால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று நினைத்தாயா?’ என்று ஆவேசத்துடன் மீண்டும் அம்பு தொடுப்பார் பீஷ்மர். உடனே கிருஷ்ண பரமாத்மா, 25 கஜ தூரத்துக்குக் கொண்டு வந்து தேரை நிறுத்துவார்.
வெற்றி… வெற்றி… வெற்றி… என்று ஜெயிப்பதற்கான அத்தனை சூட்சுமங்களையும் செய்தருளினார் ஸ்ரீகண்ணபிரான். அதேநேரம்… தோல்வியின் மூலமாகவும் ஜெயிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
‘அட… அது எப்படி? தோற்றால் எப்படி வெற்றி பெற்றதாகும்?’ என்று எவரேனும் கேட்கலாம்.
கணவன்- மனைவிக்கு இடையே சின்னதாக ஓர் ஊடல். லேசாக வந்த பிரச்னையில் இரண்டு பேருமே கிழக்கு மேற்காகப் பார்த்து, முறைத்துக் கொள்கின்றனர். இப்போது சமரசம் செய்யும் கணவனோ அல்லது மனைவியோ தோற்றுப் போனதாக ஆகிவிடும்; எவர் விட்டுக் கொடுக்கிறாரோ, அவர் தோல்வி அடைந்ததாக ஆகிப்போகும். ஆனால், சமரசத்துக்கு வருபவரோ, விட்டுக் கொடுப்பவரோ தோற்றுப் போனதாகத் தெரியலாமே தவிர, உண்மையில் வெற்றி பெற்றவர் யார் என்று பார்த்தால், அவர்தான் என்பது புரிய வரும். இதைத்தான் ‘பத்தினியிடம் தோற்பான் பரம ரசிகன்’ என்பார்கள் முன்னோர்கள்.
ஜெயிப்பதில் மூன்று வகை உண்டு. ஜயம் என்கிற வெற்றி என்பது ஒன்று; தோல்வி என்பது மற்றொன்று. வெற்றியோ தோல்வியோ… அதை ஆழ்ந்து ரசிக்கிற மனோபாவம் ரொம்பவே முக்கியம். இது மூன்றாவது!
உலகில், எல்லோரும் எப்போதும் வெற்றிக் கனியைப் பறித்தே ஆகவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இந்த இரண்டும் இல்லாமல், வெற்றியோ தோல்வியோ… அதை அனுபவிக்க வேண்டும்; அனுபவித்து ரசிக்கவேண்டும் என்கிற சிந்தனை ஒன்றும் உள்ளது. ஆக, எது வந்தாலும் ரசிகன் எனும் நிலையில் இருப்பது உன்னதமானது.
ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரத யுத்தத்தின் போது, பாண்டவர்களுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறார். பல தருணங்களில், எல்லோரிடமுமே விட்டுக் கொடுத்து, தோற்றுப் போவதன் மூலம் வெற்றி வாகை சூடியிருக்கிறார். ஏனெனில்… பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மகா ரசிகன்!
நன்றி - சக்தி விகடன்