திருமலைராயன்பட்டினத்தில், மாசிமக நன்னாளில், தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுவதைக் காண, தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமென நிறைந்திருப்பார்கள், பக்தர்கள். அன்றைய நாளில், எட்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒருசேரக் காட்சி தருவார்கள் என்றால், கூட்டத்துக்குச் சொல்லவா வேண்டும்?! அப்போது எல்லா பெருமாள்களுக்கும் தலைமையேற்பவர், திருக்கண்ணபுரத்து நாயகனாம் ஸ்ரீசௌரிராஜபெருமாள்தான்!
நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் உள்ளது திருப்புகலூர். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்ணபுரம். 108 திவ்விய தேசங்களுள், மிகப் பிரமாண்டமாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படும் தலம்; ஐந்து ஆழ்வார்களால் 129 பாடல்கள் பாடி, மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்; ஸ்ரீபெருமாளின் கீழைவீடு என பெருமைப்படுத்தப்படும் கோயில்; பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களுள் முக்கியமான திருத்தலம் எனச் சிறப்புகள் பல கொண்டது, திருக்கண்ணபுரம் திருக்கோயில்.
ஒரு காலத்தில், மலைகளுக்கும் பறக்கும் சக்தி இருந்ததாம். அப்படி அவை பறப்பது, மனிதர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், அவற்றின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான் இந்திரன். ஒரே ஒரு மலை மட்டும், திருமலைராயன்பட்டினம் கடலுக்குள் மூழ்கி, மறைந்து தப்பித்தது!
அப்போது, அடிமைத்தனத்தில் இருந்து தன் தாயை, பெருமாளின் துணையுடன் மீட்டுவிட்ட கர்வத்தில் இருந்தான் கருடன். இறக்கைகளை விரித்தபடி இறுமாப்புடன் அவன் பறக்கும் இடத்துக்குக் கீழுள்ள பூமிப் பகுதியெங்கும் இருள் சூழ்ந்ததாம்!
இந்த நிலையில், திருக்கண்ணபுரம் தலத்துக்கும் பறந்து வந்தான் கருடன். அப்போது, ஸ்ரீசௌரிராஜபெருமாளின் துவாரபாலகர்கள், அந்தத் தலத்தின்மேல் பறக்கவேண்டாம் எனத் தடுத்தார்கள். அதை மீறினான் கருடன். ஆத்திரம் அடைந்த துவாரபாலகர்கள், பூமியில் தெரிந்த அவனது இறக்கைகளின் நிழலைத் தொட்டு இழுத்துப் பிய்த்தெடுத்தனர். இதில் நிலைகுலைந்த கருடன், திருமலைராயப்பட்டினக் கடலுக்குள், இந்திரனுக்குப் பயந்து பதுங்கியிருந்த மலையில் விழுந்தான். அந்த மலையின்மீது அமர்ந்து, மீண்டும் தனக்கு இறக்கைகளை வழங்கும்படி, பெருமாளை நோக்கிக் கடும்தவம் இருந்தான். தவத்தால் மகிழ்ந்த ஸ்ரீசௌரிராஜபெருமாள், அவனுக்குப் பறக்கும் வலிமையைத் தந்தருளினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்தது, மாசிமக நன்னாளில்! ஆகவே, வேறெங்கும் இல்லாத வகையில், திருக்கண்ணபுரத்தில் மட்டும் கருவறையில் திருமாலுக்கு அருகிலேயே காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடன் அமர்ந்து தவம் செய்த அந்த மலை, 'கருட பர்வதம்’ எனப்படுகிறது.
இதையொட்டி, கிழக்குக் கடலில் உள்ள கருட பர்வதத்துக்குக் காட்சி தரும் வகையில், திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி பௌர்ணமியன்று எழுந்தருள்கிறார் ஸ்ரீசௌரிராஜபெருமாள். அப்போது அவருடன் சுற்று வட்டாரக் கோயில்களில் உள்ள பெருமாள்களும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
மாசிமக விழாவையொட்டி, திருக்கண்ணபுரத்தில் இருந்து திருமலைராயன்பட்டினத்துக்கு முன்கூட்டியே செல்லும் கருடாழ்வார், அங்கேயுள்ள வெள்ள மண்டபச் சத்திரத்தில் சௌரிராஜபெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார். திருக்கண்ணபுரத்திலிருந்து அதிகாலை தங்கப் பல்லக்கில் புறப்படும் ஸ்ரீசௌரிராஜ பெருமாள், திருமருகல் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, தீர்த்தவாரி நோக்கிச் செல்வார். வழியெங்கும், வெண்பட்டு மற்றும் ரோஜாமாலை சகிதமாக, பெருமாளுக்குக் காத்திருப்பார்கள் பக்தர்கள். அங்கே, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள், ஸ்ரீரகுநாதபெருமாள், ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீகரியமாணிக்க பெருமாள், காரை- கோவில்பத்து ஸ்ரீநித்தியபெருமாள் முதலான பெருமாள்கள், ஸ்ரீசௌரிராஜ பெருமாளுக்காகக் காத்திருப்பார்கள். பிறகு, அனைவரும் சூழ, மாலை 5 மணிக்கு கடலில் தீர்த்தவாரி விமரிசையாக நடந்தேறும். திருக்கண்ணபுரம் கோயில் நிர்வாகம் (தமிழகம்), புதுச்சேரி மாநில அறநிலையத்துறை நிர்வாகம் ஆகியவை இணைந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும். இங்கிருந்து 15 நாட்கள் திருவீதி உலாவுக்குப் பிறகு, பெருமாள் திருக்கண்ணபுரத்துக்கு வருவதுடன் நிறைவுறுமாம், மாசிமகப் பெருவிழா!
இந்திரனின் நண்பன் உபரிசரவசு எனும் வேந்தனின் மகளான பத்மினியை(திருமகள்), திருமால் திருமணம் செய்து கொண்டதால், ராமபிரானை மிதிலை நகரத்து மக்கள், 'மாப்பிள்ளை’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், திருமலைராயன்பட்டினத்து மீனவர்கள், ஸ்ரீசௌரிராஜ பெருமாளை, 'மாப்ளே’ என்றே அழைக்கின்றனர். இங்கே, நாச்சியாருக்கு 'வலைநாச்சியார்’ என்பது திருநாமம்!
திருக்கண்ணபுரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது நித்ய புஷ்கரணி தீர்த்தம். இதில் நீராடினால், சகல பாவங்களும் நீங்கும்; பிள்ளை பாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நன்றி - சக்தி விகடன்
FINE
பதிலளிநீக்கு