‘சிதாஷீர நியாயம்’னா என்ன?
பாலில் சர்க்கரை போட்டு நாம் சாப்பிடுகிறோம். சர்க்கரையே சேர்க்காமல் ஒருவர் பாலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
சர்க்கரையே தெரியாது. சரியென்று பாலையே குடித்துக் கொண்டிருப்பார்.
பாலே தெரியாது. சர்க்கரை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இன்னொருவர். அவர் சர்க்கரையை சாப்பிடுவார். ஆனால், பாலில் ஒரு நாள் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டுவிட்டார் என்றால், அப்புறம் தனித்தனியாக சாப்பிடுவதற்கு எண்ணமே போகாது. சர்க்கரை இல்லாத பாலை சாப்பிடுவோமா? பால் இல்லாத சர்க்ரையைத்தான் சாப்பிடுவோமா?
அதுபோல, மத்ஸ்யாவதாரம் மீனான அவதாரம். கூர்மாவதாரம் ஆமையான அவதாரம். வராகாவதாரம் பன்றியான அவதாரம். இவை மூன்றும் மிருகமாக மட்டுமே பிறந்தவை. நரசிம்மப் பெருமானுக்குப் பிற்பட்ட முதல் அவதாரம் வாமனாவதாரம். தேவனாகப் பிறந்தார். இந்திரனுக்குத் தம்பிதான் வாமனாவதாரம். பரசுராம, ராம, பலராமன், கல்கி இவை எல்லாமே மனுஷ்யனான அவதாரங்கள்.
நர – சிம்ஹர். அவர் மட்டுமே, ஒரு பக்கத்திலே மிருகமாக இருந்தார். மறுபக்கத்திலே மனிதனாக இருந்தார்.
கழுத்துக்கு மேலே சிங்க உரு. கழுத்துக்குக் கீழே மனித உரு. சேராத இரண்டைச் சேர்த்தார் எம்பெருமான் – பாலும் சர்க்கரையும் சேர்த்தாற்போலே. சேர்த்து அனுபவித்து விட்டோமென்றால் தனியாக மிருகாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்; தனியாக மனுஷ்யாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்.
இந்த நரசிம்மாவதாரத்தை, ஆழ்வார்கள் அனைவரும் ஆச்சர்யமாக அனுபவித்துள்ளார்கள். முக்கியமாக எம்பெருமான் அஹோபில திவ்யதேசத்திலே சேவை சாதிக்கிறார்.
அந்த நரசிங்கரையும் லக்ஷ்மி நரசிம்மராகப் பல இடங்களில் வணங்குகின்றோம். யோக நரசிம்ம சுவாமியாகப் பல இடங்களில் சேவை சாதிக்கிறார். என்றோ நடந்த நரசிம்ம அவதாரத்தை நாம் இழந்துவிட்டோம். அன்றைக்கு நாம் சேவிக்கவில்லையே என்ற குறை இருக்கிறதே அந்தக் குறை தீரத்தான், விக்கிரக வடிவில் எத்தனையோ திவ்ய தேசங்களில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார். அதில், பிரதான திவ்யதேசம் என்று பார்த்தால் அஹோபிலம்.
அஹோபிலம், நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று பெயர்பெற்ற திவ்யதேசம். கீழ் அஹோபிலம்; மேல் அஹோபிலம். ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர். பார்க்கவ நரசிம்மர், சத்ரவட நரசிம்மர்… என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மராக பகவான் அங்கே சேவை சாதிக்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல் ‘சோள சிம்மபுரம் கடிகாசலம்’ – ஒரு நாழிகைப் பொழுது அந்த மலையில் நாம் நின்று விட்டோமானால் அனைத்துப் பாபங்களும் நீங்கிப்போகும். அதிலும், கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னால் அவ்வளவு கூட்டம். கால் வைக்க இடம் இருக்காது. நாற்பது ஐம்பதாயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சேவிக்கிறார்கள்.
திருமங்கையாழ்வார் பாடினார்
‘மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலி கின்னாப் பொன்மலையைத்
தக்கானைக் கடிகத் தடம் குன்னின் மிசை இருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே.’
அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்?
கர்நாடகத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு சர்க்கரையால் ஆன பொம்மையாகப் பழம் செய்து சீர் வைப்பார்கள். திருமங்கையாழ்வார் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இவ்வளவுதானா பெருமாள் என்று நினைத்துவிட வேண்டாம். சர்க்கரையை விதையாக விதைக்க வேண்டுமாம்.
சர்க்கரையே மரமாக முளைக்க வேண்டுமாம். அந்த சர்க்கரை மரம் பழுக்க வேண்டுமாம். அந்தப் பழம்தான் சர்க்கரைப் பழமாம்! அதாவது அக்காரக்கனி! இது மாதிரி நடக்குமா என்று அடியேனைக் கேட்க வேண்டாம்.
சர்க்கரையை விதைத்து அது மரமாகிப் பழுக்க வேண்டுமானால், அந்தக் கனி எவ்வளவு மதுரமாக (இனிமையாக) இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதற்கு ‘அபூதோபமா’ என்று பெயர். இல்லாததை உவமையாகச் சொல்வது. அப்படிப்பட்ட அக்காரக்கனி பெருமாள் கடிகாசலத்திலே எழுந்தருளியுள்ளார்.
அதேபோலக் காஞ்சிபுரத்திற்கு அருகிலே வந்தால் வேளுக்கை ஆளரி. வேளுக்கை என்பது அந்த ஊரின் பெயர். ஆள் என்றால் மனிதன். அரி என்றால் சிங்கம். ஆளரி, கோளரி என்ற இரண்டும் கலந்த வடிவிலே அங்கு சேவை சாதிக்கிறார்.
திருநாங்கூருக்கருகிலே திருவாலி திருநகரி. அங்கு பஞ்ச நரசிம்மர்கள் சேவை சாதிக்கிறார்கள்.
இதுபோல் அடியார்கள் தன்னை சேவிக்க வேண்டும் என்றும், தன் தரிசனத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான் லக்ஷ்மி நரசிம்மனாய், யோக நரசிம்மனாய் பற்பல திவ்ய தேசங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
பிரதானமாய் சென்னைப் பட்டினத்துக்குப் போகிறோம். திருவல்லிக்கேணியில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கு பார்த்தசாரதி மூலமூர்த்தி. நின்ற திருக்கோலம். அவருக்கு நேர் பின்புறம் தெள்ளிய சிங்கப் பெருமான்.
‘தெள்ளிய சிங்கத் தேவை திருவல்லிக் கேணி கண்டேனே’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம்.
லக்ஷ்மி நரசிம்மனாய் இருக்கிறார்; யோக நரசிம்மனாய் இருக்கிறார்; தெள்ளிய சிங்கப் பெருமானாய் இருக்கிறார். அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது. சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார் ஆனந்தப்படுகிறார்.
எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்
காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப
அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய
என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள். பல கோணங்கள். தொடர்ந்து பார்ப்போம்…
(வைபவம் வளரும்)
நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)