நினைத்தாலே இனிக்கும்! - 14 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 14 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

வழிப்போக்கன்ஒருவன் காட்டுவழியில் சென்று கொண்டிருந்தான். 

திடீரென புலி ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது. கண்ணை மூடிக்கொண்டு ஓடத் தொடங்கினான். வழியில் பாழுங்கிணறு ஒன்று இருந்தது. புதர் மண்டிக் கிடந்ததால், தெரியாமல் அந்த கிணற்றுக்குள் காலை வைத்து விட்டான். சரசரவென கீழே இழுத்துச் செல்லப்பட்டான். பாதிக் கிணற்றில் படர்ந்து கிடந்த கொடியைக் கையால் பற்றிக் கொண்டு நின்றான். அந்த சமயத்தில், புலி ஒன்று உணவு தேடி கிணற்றுப் பக்கம் வந்தது. உள்ளே இருந்தவனைப் பார்த்ததும், இரையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அங்கேயே நின்றது.

அச்சத்துடன் கீழே குனிந்தான். பயம் மேலும் அதிகரித்தது. ஆழத்தில் விஷ நாகங்கள் புற்றில் தலையை நீட்டிய படி இருந்தன. அப்போது அவன் பற்றியிருந்த கொடியின் வேரை பொந்திலுள்ள பெருச்சாளி ஒன்று கடிக்கும் சத்தம் காதில் விழுந்தது. பசி, தாகம், நடந்து வந்த களைப்பு எல்லாம் சேர்ந்து அவன் மயக்கநிலையில் இருந்தான். அந்த சமயத்தில் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த தேனடையில் இருந்து தேன் துளி வழிந்து, சரியாக அவன் நாக்கில் பட்டது. ""என்ன இன்பம்... இந்த இன்பம்...'' என்று அவன் மனம் சந்தோஷம் கொண்டது. இந்த வழிப்போக்கன் வேறு யாருமல்ல... நாம் தான்...... புலியும், பாம்பும் துன்புறுத்த காத்திருக்கும் நேரத்தில் கூட, தேனை ருசிக்கும் வழிப்போக்கனின் மனநிலையில் தான் மனிதன் இருக்கிறான். 

சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்ட மனிதனுக்கு திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயம் எல்லாம் தேன்துளி மகிழ்ச்சி போல அவ்வப்போது வந்து போகிறது. ஆனால், இன்பம் நிரந்தரமாக கிடைப்பதில்லை. நிலையான இன்பம் பெற ஒரே வழி கடவுளைச் சரணடைவது தான். அதையே பேரின்பம் என்று சொல்கிறார்கள். அப்போது வேண்டும் அளவுக்கு தேனைப் பருகி மகிழலாம். கடவுளைப் பற்றியும், அவரை அறியும் வழிமுறையைப் பற்றியும் எடுத்துச் சொல்வதால் தான், புராணத்திற்கு இவ்வளவு ஏற்றமும் சிறப்பும் அளிக்கிறோம். அதனால் தான் தனக்கு மரணம் நேரப் போகிறது என்பதை அறிந்த பரீட்சித்து மன்னன் சுகபிரம்மத்திடம் பாகவத புராணத்தைக் கேட்டான். 
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக இந்த மண்ணில் பிறவி எடுத்து இருக்கிறோம்? சமான்ய நிலையில் நாம் எல்லாம் ஒவ்வொரு குறிக்கோளுடன் இருப்பதாக எண்ணுகிறோம். 

கோகுலாஷ்டமிக்கு வீட்டில் 17, 20, 27 பலகாரம் செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதில் யார் வீட்டில் அதிகம் செய்தது என்று போட்டாபோட்டி கூட நடக்கும். ஆனால், எல்லா பலகாரமும் இனிப்புச் சுவை கொண்டது தானே! நெய், இனிப்பு, மாவு மூன்றும் தான் பலகாரம், பட்சணத்திற்கு அடிப்படை.

சாப்பாட்டு விஷயத்தில் கூட"காய்கறியில் புடலங்காய் தான் பிடிக்கும். உருளைக் கிழங்கு தான் பிடிக்கும்' என்று சொல்கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும் தான். 

அப்புறம் எந்த உணவாக இருந்தாலும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவது போல, உயிர்கள் பிறவி எடுத்திருப்பதே கடவுளை அறிவதற்காகத் தான். 

உலகத்தில் உயிர்கள் படைக்கப்பட்டது எப்படி? அந்த உயிர்கள் எப்படி அழிகின்றன? எந்தெந்த மன்னர்கள் இந்த உலகை ஆட்சி செய்தார்கள்? சூரியன், சந்திரன், வருணன், வாயு என்பதெல்லாம் யார்? சூரிய, சந்திர வம்சத்தில் யாரெல்லாம் வந்தார்கள்? சூரியன், சந்திரனால் பருவநிலை எப்படி உண்டாகிறது? மழை எப்படி பெய்கிறது? மனுக்கள் ஏற்படுத்திய தர்மங்கள் என்னென்ன? மனிதனுக்கு இன்பம் துன்பம் ஏன் உண்டாகிறது? 

உலகில் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் இந்த பாகுபாடு எப்படி ஏற்பட்டது? பாவம் எது? புண்ணியம் எது? என்பதெல்லாம் சீடர்கள் கேள்வி கேட்க, குரு பதில் அளிப்பது போல உரையாடலாக விஷ்ணு புராணத்தின் பகுதிகள் அமைந்துள்ளன. சீடராக இருக்கும் மைத்ரேயர் கேள்வியைக் கேட்க, பராசரர் பதில் அளிப்பது போல கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. கதை போலச் செல்லும் இதில் அங்கங்கே தத்துவார்த்தங்களும் இடம் பெற்றுள்ளன. 

இந்த உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சிக்கலான அமைப்பு. இதை சரிபடுத்திக் கொள்ள எத்தனை வைத்திய முறைகள். அதுவும் நரம்பு, எலும்பு, தோல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வைத்தியர்கள். 

எத்தனை முறைகள் இருந்தாலும், பகவானால் படைக்கப்பட்ட இந்த சரீரத்தை பற்றி அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியுமா? பத்மாசனத்தில் அரை மணிநேரம் அமர்ந்து விட்டால், 27,000 நரம்புகளும் ஒருவரின் கட்டுக்குள் வந்து விடும் என்கிறது யோக சாஸ்திரம். அந்த அளவுக்கு நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் கூர்மையான புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. மேலெழுந்தவாரியாக அணுகினால் புரியாமல் போய் விடும். புராணமும் இப்படித் தான் அணுகுவதற்கு கடினமாக இருந்தது. 

மூலத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் சிரமம் இருந்தது. இதனால் தான், எத்தனையோ பெரியவர்கள், உரையாசிரியர்கள் புராணத்திற்கு எளிய விளக்கவுரை அளித்திருக்கிறார்கள். 

காசி,சேது, கயா, கங்கை, புஷ்கரம் என்று எத்தனையோ புண்ணிய க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. இத்தனை தலங்களையும் தரிசித்தால் புண்ணியம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதனால் உண்டாகும் புண்ணியத்தை தராசின் ஒரு தட்டில் வைத்து விட்டு, மறுதட்டில் விஷ்ணு புராணத்தைக் கேட்டதால் உண்டாகும் புண்ணியத்தை வைத்துப் பார்த்தால் அந்த தட்டு கனத்தால் தாழ்ந்து விடும். இதன் காரணமாகவே, பதினெண் புராணங்களில் இந்த புராணத்தை "புராண ரத்தினம்' என்று சிறப்பாகச் சொல்கிறார்கள். 

இதில் "அர்த்த பஞ்சகம்' என்று ஒன்று இருக்கிறது. "பொருள் பொதிந்த ஐந்து விஷயம்' என்பது இதன் பொருள். இந்த ஐந்தைத் தெரிந்து கொண்டு விட்டாலே நம்முடைய இந்த ஜன்மம் கடைத்தேறி விடும். ஆனால், நாம் எல்லோரும் இந்த ஐந்தை விட்டு விட்டு, ஐந்தாயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய அந்து ஐந்து தான் என்னென்ன? 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை