அவர்தான் வேதவியாசர். நாராயணரே வியாசராக அவதரித்து மகாபாரதம், பாகவதம், பதினெண் புராணம் எல்லாம் எழுதினார். வியாசர் என்ற சொல்லுக்கு "பகுத்துக் கொடுத்தவர்' என்பது பொருள். வேதங்களை நான்காகப் பகுத்துக் கொடுத்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
கலியுகத்திற்கு முந்திய கிருத யுகம், துவாபர யுகம், திரேதா யுகங்களில் நான்கு வேதங்களும் ஒன்றாகவே இருந்தன. இதை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் என நான்காகப் பகுத்தளித்த வியாசரின் பரம்பரை மிகவும் விசேஷமானது.
அவரின் பரம்பரை பிரம்மாவில் தொடங்கும். படைப்புக் கடவுளான பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர். இவர் தான், ராமன் அவதரித்த ரகு வம்சத்தின் குலகுரு. அவரது பிள்ளை சக்தி. சக்தியின் மகன் பராசரர்.
பராசரருக்குப் பிறந்தவர் தான் வேதவியாசர். வியாசரின் மகன் சுகர். இப்படி அவருடைய பரம்பரையில் வந்த அனைவருமே தவ சிரேஷ்டர்கள். அதிலும் சுகருக்கு கண்ணில் காணும் எல்லாமே தெய்வீகம் தான். பேதநிலையைக் கடந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் காண்பவர்.
வியாசர் வயதில் பெரியவர். அவருக்கு 120 வயது.
சுகருக்கோ வயது 16. வயதான தந்தையுடன் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தார் சுகர். அங்கு நீராடிக் கொண்டிருந்த பெண்கள் சுகரைக் கண்டு சிறிதும் வெட்கப்படாமல் நீராடிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாசரைக் கண்டு வெட்கப்பட்டு மேலாடையால் தங்களை மூடிக் கொண்டனர். ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்ற உண்மையை அந்த பெண்களிடமே கேட்டார் வியாசர்.
"கட்டிளங்காளையாக இருந்தாலும், இச்சை சிறிதும் இல்லாமல் மண்,பெண், மரம், கல் என எல்லாவற்றையும் ஒன்றாக உணரும் பக்குவ ஆன்மாவாக உங்கள் பிள்ளை சுகர் இருக்கிறார்,'' என்றனர் அவர்கள்.
தன் பிள்ளையின் தெய்வீக மேன்மையை இதன் மூலம் உணர்ந்து கொண்டார் வியாசர்.
உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கின்றன. இதைக் கடந்து கரை சேர படகு தேவை. ஆண்டாள் திருப்பாவை முப்பதாவது பாசுரத்தில் "வங்கக்கடல் கடைந்த மாதவன்' என்று பாடுகிறாள். வங்கம் என்றால் "கப்பல்'. கடலைக் கடக்க கப்பல் உதவுவது போல, மனித வாழ்வு என்னும் சம்சாரக் கடலைக் கடக்க புராணங்கள் துணை செய்கின்றன.
சத்வ,ரஜோ,தமோ என்னும் முக்குணங்களைக் கொண்டவனாக மனிதன் இருக்கிறான். சாதுவான நல்ல குணமே சத்வம். அதாவது தெளிந்த சிந்தனையுடன் அமைதியாக இருப்பது. ரஜோ குணம் என்பது கோபம், ஆசை, வேகம் என உலகியலில் ஈடுபடுவது. தமோ குணம் என்பது சோம்பல், தாமதம், மயக்கம் நிறைந்திருப்பது.
ஒருவரை எதிர்பார்ப்புடன் உதவி கேட்டுச் செல்லும்போது,"நிச்சயமா செய்து தருவேன்; என்னை நம்புங்கள்' என்று பண்புடன் நடந்து கொள்வது சத்வ குணம். செய்ய வாய்ப்பிருந்தாலும் கோபமாக வந்தவரைப் புறக்கணிப்பது ரஜோகுணம். அதைக் கண்டு கொள்ளாமல், சிந்திக்காமல் சோம்பலுடன் இருப்பது தமோகுணம்.
தமிழ் இலக்கியத்தில் தாண்டவம், பிள்ளைத்தமிழ், கலம்பகம் என்று எத்தனையோ பாடல் வகை உண்டு. அதில் "எழுகூற்றிருக்கை' என்பதும் ஒரு வகை. இதைக் "கணக்கு பாடல்' என்று சொல்லலாம். அதாவது, எண்களால் நிரல்படச் சொல்லி பாடுவது. ஆழ்வார்களில் அதிகப் பாசுரங்களைப் பாடிய திருமங்கையாழ்வார் இப்பாடல் வகையில் "திருவெழுகூற்றிருக்கை' என்றொரு பாடல் பாடியிருக்கிறார்.
அதில் முக்குணம் பற்றிய குறிப்பு வருகிறது. "முக்குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றனில் இருந்து' என்று நமக்கு வழிகாட்டுகிறார் அவர். முக்குணத்தில் ரஜோ, தமோ குணத்தை கைவிட்டு சத்வகுணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள்.
இந்த மூன்று குணங்களின் அடிப்படையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குணத்திற்கும் ஆறு வீதமாக பதினெட்டு புராணங்கள் உள்ளன. அதில் சத்வ குணத்தைப் போற்றும் விதத்தில் அமைந்த ஆறில் உயர்ந்ததாக இருப்பது விஷ்ணு புராணம்.
புராணங்களுக்கு ஐந்து விதமான லட்சணங்கள் உண்டு. அதில் முதலாவது குறிக்கோள். குறிக்கோள் என்றதும், நம் வாழ்க்கையே குறிக்கோளை நோக்கி செல்வது தான். ஆனால், எல்லாருக்கும் எப்போதும் ஒரே குறிக்கோள் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒருவரே வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு இருக்க முடியாது.
இரண்டு வயதில் இருந்த எதிர்பார்ப்பு அப்படியே ஆயுளுக்கும் நீடிப்பதில்லை. வயதுக்கேற்ப குறிக்கோள் மாறுகிறது. இருக்கும் இடத்தைப் பொறுத்தும், வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டைப் பொறுத்தும் அதன் தாக்கம் மாறிக் கொண்டே இருக்கும். பசியால் வாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் விஷ்ணு புராணத்தை எடுத்துச் சொன்னால் கேட்க முடியுமா? அவருக்கு சாப்பாடு தான் முக்கியம்.
கால் பந்தாட்டம் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் கால்பந்தாட்ட வீரர்கள் பந்து செல்லும் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். பந்தும் ஓரிடத்தில் நிற்காது. ஆளாளுக்கு உதைக்க பந்து இடம் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால், எதை மாற்றினாலும் பந்து அடைய வேண்டிய இலக்கான "கோல் போஸ்ட்' மாறப் போவதில்லை. அது போலத் தான் மனித வாழ்க்கையும். மனதிற்குள் எத்தனை ஆட்டம் நாம் ஆடிக் கொண்டிருந்தாலும் கடைசியில் சென்று சேர வேண்டிய குறிக்கோள் மாறப்போவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழக்கை, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் இறுதியில் வாழ்வு முடிவுக்கு வரத் தான் போகிறது.
வாழ்வில் இன்பதுன்பம் கலந்திருப்பதை, "முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை' என்று கூட சொல்லி வைத்தார்கள். நவக்கிரகங்களில் சனீஸ்வரர் ஒருராசியில் இரண்டரை வருஷம் சஞ்சரிப்பார். ராசி சக்கரத்தை அவர் கடக்க 30வருஷம் ஆகும். அதற்கேற்ப வாழ்வின் போக்கு மாறி விடும் என்பதால் தான் இப்படி சொன்னார்கள். ஆனால், இன்ப துன்பம் என்பது வெள்ளை வேட்டி போல இருக்கிறது. வேட்டியின் அடியில் இருக்கும் சரிகை நடக்கிறப்போ லேசா பளபளக்கும். அதுபோல, வாழ்வில் அப்பப்போ இன்பம் தலைகாட்டும். ஆனால், பெரும்பாலும் சந்திப்பது என்னவோ துன்பம் தான்.
இதை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லி வாழ்வின் முடிவான குறிக்கோளை எடுத்துச் சொல்வது புராணம் தான். பழையதாக இருந்தாலும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் என்றும் புதியதாக இருந்து நமக்கு இன்றும் வழிகாட்டி நிற்கிறது. அதிலும் இந்த வரிசையில் முதலிடம் பிடிக்கும் விஷ்ணு புராணத்திற்குள் இனி நுழைவோம்.
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்