சில கோயில்களில் தாயாருக்கு திருமாங்கல்யம் கூட இல்லை. கண்ணனுக்கு நகை இல்லை. இதெல்லாம் நம் குற்றம் தான். இருந்தாலும், இதுபோன்றவற்றைப் பொறுத்துக் கொள்கிறானே! அந்த வகையில் தான் சொல்கிறேன்! கண்ணன் மிகவும் நல்லவனென்று.
அது மட்டுமல்ல! அவரை பெரிய பொருட்காட்சியில் கொண்டு போய் வைக்கிறோம். வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று விடுகிறோம். எங்கு அழைத்தாலும் அவன் வருகிறான். இப்போது சொல்லுங்கள்! அவன் நல்லவனா இல்லையா என்று!
கிழிந்த வஸ்திரமாக இருந்தாலும் சரி...கிழிந்த பூவாக இருந்தாலும் சரி.. கண்ணன் கண்டு கொள்வதில்லை. அவன் கண்ணன், அவன் கடவுள் என்ற எண்ணம் இருந்தால் போதும். நமக்கு அருள் செய்து விடுவான்.
விஷ்ணுவே பூமிக்கு கண்ணனாக வந்தார். அந்த விஷ்ணு மகாத்மியத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.
வேதங்களை மட்டும் படித்து விட்டு இதிகாசம், புராணங்களை படிக்காமல் விட்டு விட்டால் வேத மாதா வருந்துகிறாள். ஏனென்றால், "உள்ளதை உள்ளபடி அறியாமல் போய் விடுவார்களே!' என்பது தான் அவள் கவலை. "இதிகாசம்' என்றாலே "இப்படியாக நடந்தது' என்று தான் பொருள். அதாவது, உள்ளதை உள்ளபடி உரைப்பது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. அதை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனைச்சாலைக்குச் செல்வார்கள். தானே பரிசோதித்துக் கற்றுக் கொள்ளவே இந்த நடைமுறை இருக்கிறது. பகவானும் வேத கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னையே முன் உதாரணமாக ஆக்கிக் கொண்டார். வைகுண்டத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தார். அந்த வரலாறே புராணங்களாக, இதிகாசங்களாகப் பேசப்படுகின்றன. வெறும் வேதத்தை மட்டும் கற்றுக் கொண்டால் அது வெறும் புத்தக அறிவுக்குச் சமம் தான். அது தவறான புரிதலுக்கே வழிவகுக்கும். பகவான் அவதாரம் நிகழ்த்தி வேதம் சொல்லும் உயர்ந்த கருத்துகளை நிலைநாட்டி அருளினார்.
புராணம் என்பதற்கு "மிகவும் பழையது' என்பது பொருள். பாரத தேசத்தைப் பொறுத்தவரையில் இருபெரும் இதிகாசங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருக்கின்றன. அவை ராமாயணம், மகாபாரதம். ராமனின் பெருமையைச் சொல்வது ராமாயணம். கண்ணனின் பெருமையைச் சொல்வது மகாபாரதம். மிகப் பழைய வரலாறாக இருந்தாலும், அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும் புராணம் இருக்கிறது.
ஒரு விஷயம் பழையதாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்றவாறு புதிய கருத்தையும் தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டால் அதன் பெருமையை உணர முடியும்.
இன்று சுவாமிக்கு சாத்தியிருக்கும் பூ பார்ப்பதற்கு புதிதாக இருக்கும். நாளை பார்த்தால் பழையதாக வாடிப் போய் விடும். என்ன தான் கடைக்காரன் தண்ணீர் தெளித்து வைத்திருந்தாலும், வாடிய பூ பளிச்சென்று ஆகி விடாது. இது தானே இயற்கை. ஆனால், பகவான் மட்டும் விதிவிலக்காக திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கிறார்.
திருக்குடந்தை, கும்பகோணம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்யதேசத்தில் பெருமாள் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஆராவமுது என்றால் "என்றைக்கும் குறையாத அமுதம் போன்றவன்' என்று பொருள். ஆழ்வார்கள் அவன் அழகில், கல்யாண குணங்களில் ஈடுபட்டு மனதைப் பறி கொடுத்துப் பல பாசுரம் பாடியிருக்கிறார்கள். பெருமாள் பழமைக்குப் பழமையாக இருந்தாலும், புதுமைக்குப் புதுமையாகவும் இந்த திவ்ய தேசங்களில் காட்சி தருகிறார்.
மதுரையில் கூடல் அழகர், கள்ளழகர், காளமேகப்பெருமாள் என்று பல திருநாமங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த கோயில்கள் எல்லாம் காலத்தால் ஆயிரமாயிரம் ஆண்டுக்கும் முந்தியவை. அதே கள்ளழகர், அதே வைகையாறு, அதே சித்ரா பவுர்ணமி என்று மாற்றம் இல்லாமல் வருடம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்றும் புதியதாக பெருமாள் இருப்பதால் தான் பக்த கோடிகள் விழா காலத்தில் அவரைத் தரிசிக்க ஒன்று கூடுகின்றனர். "அப்போதைக்கு அப்போது ஆராவமுது போல புத்தம் புதியவராக இருப்பது தான் அவருக்குச் சிறப்பு, பெருமை எல்லாமே.
இதை இன்றைய நடைமுறையில் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும். சென்னையில் ஒரு புடவைக்கடை விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ஆங்கில வாசகத்தைப் பார்த்த போது, அதன் பழமையும், புதுமையும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. “"Traditionally Designed'' என்பது தான் அது. Traditional என்பது வழக்கமான பழையது, Designed என்பது புதுமையானது. நாளும் நாளும் புதிது புதிதாக மாறிக் கொண்டிருக்கும் மாற்றம் ஒன்றே எங்கள் கடையின் வழக்கம் என்பதை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு பொருளுக்கே இந்த தன்மை இருக்கும் என்றால், புராணத்திற்கும், பெருமாளுக்கும் இந்த தன்மை இல்லாமல் போகுமா? பெருமாளும் என்றும் புதியவராக அதே சமயத்தில் பழமையான வராகவும் இருக்கிறார். அவர் மட்டுமல்ல! அவரைப் பற்றிய வரலாற்றுக்கும் அதே தன்மை இருக்கிறது. அதுவே புராணம் என்று போற்றப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும், காலத்திற்கும் ஏற்றதாக நவீன நல்ல கருத்துகளை அவை எப்போதும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு விஷயத்தை அல்லது கருத்தை ஏற்க வேண்டுமானால், அதற்கு மூன்று அடிப்படை இருந்தாக வேண்டும். சொல்பவர் நம்முடைய நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், ஊர், உலகம் போற்றும் நல்லவராக இருக்க வேண்டும், சொல்லும் விஷயம் உயர்வானதாக இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணம் இருந்தாலே போதும். ஆனால், புராணத்தை நமக்கு அளித்த மகான் இந்த மூன்று குணத்திற்கும் பொருத்தமானவர்.
அவ்வளவு உயர்ந்தவரா? யார் அவர்?
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்