திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 11 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

கண்ணனை கோபிகைகள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பது பற்றி சொல்கிறேன்.

அவன் வெற்றிலை பாக்கிட்டு உமிழ்ந்தால், அதை ஏந்திப் போடுவாள் ஒருத்தி. "எனக்கு கால் வலிக்கிறது' என்று அந்தச் சின்னக்கண்ணன் சொன்னால், இடுப்பில் தூக்கிக் கொண்டு சுமந்து செல்வாள் இன்னொருத்தி. இப்படி அவர்கள் பல விதமாக அவனைக் கொண்டாடினர்.

கோபிகைகள் மட்டும் தான் அவனைக் கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்களோ என்று எண்ண வேண்டாம்.

உலகில் எப்போதுமே இரண்டு வகை பிரிவுகள் உண்டு. பாக்கியம் செய்தவர், பாக்கியம் இல்லாதவர் என்பதே அந்தப் பிரிவுகள். பாக்கியம் செய்தவர்கள் அவனது திருவடியை 
விரும்புகிறார்கள். 

பாக்கியம் செய்யாத துரியோதனன் போன்றவர்கள், அவனைப் பார்த்தும் அடைய மறுத்தார்கள். அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு அவனைப் பார்க்கும் பாக்கியம் உண்டா? 

ஒருவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒரு குச்சியை எடுத்து வாயில் வைத்து பார்த்தால், அது எவ்வளவு சூடு இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது. இது சாதாரணப் பொருள். கண்ணனை எப்படி பார்ப்பது, பரமேஸ்வரன் நமக்கெல்லாம் மோட்சம் கொடுப்பாரா என்றால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. அதுதான் நம்பிக்கை... கண்ணனை கடவுள் என நம்பினாலே போதும். அவன் நம்மோடு ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று ஒப்புக்கொண்டாலே போதும். அவன் நமக்குத் தெரிவான்.

இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். 

ஒரு சிலர் கடவுளை முறைப்படி வணங்கினால் தான் அவனை அடைய முடியுமோ என நினைக்கிறார்கள். அதற்காக சுதர்சன சக்கரம், குபேர யந்திரம் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், இவற்றை விற்பனை செய்கிறார்கள். இதுபோன்ற யந்திர வழிபாட்டுக்கு நியம நிஷ்டை ரொம்ப முக்கியம். அதெல்லாம், நம்மைப் பொறுத்தவரை நடக்காத காரியம். விக்ரக ரூபத்தில் கோயிலில் இருக்கும் கடவுளை வணங்குவதை மட்டும் தான் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும். அவ்வாறு அவனை சேவிக்கும் கோஷ்டியில் நாம் இருப்போம்.

கடவுளே பெரியவர். தன்னை எப்படி வழிபட வேண்டும் என அவரே சொல்லியுள்ளார். கண்ணன் கீதையில் தன்னை வழிபடும் எளிய முறை பற்றி சொல்லியுள்ளான். அவனே சொன்னபிறகு அதற்கு மேலும் நமக்கு என்ன வேண்டும்? 

பகவான் என்ன செய்ய ஆணை போட்டுள்ளாரோ, அதைச் செய்தால் போதும். அவன் சொன்னதை பிடித்து செய்கிறோமோ இல்லையோ, குறைந்த பட்சம் அவனது வார்த்தைகளை மீறக்கூடாது என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஏகாதசிக்கு பட்டினி இருக்க வேண்டும் என்பது விதி. இதுபோன்ற வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை நம் மனதில் அதிகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய நாம் வழிபாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவோம். இந்த உறுதியை மட்டும் எடுத்து விட்டால் போதும். நமது பல கால பாவத்தை தீர்க்க வேண்டுமென அவன் முடிவெடுத்து விடுவான்.

கீதையில் கிருஷ்ணன் தன்னை எப்படி வழிபட வேண்டுமென சொல்லியிருக்கிறானோ, அதை நாம் செய்தால் போதும். 

நல்லவர்கள் தான் மோட்சத்தை அடைய முடியுமா என்றால், சிசுபாலனைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவனே கிருஷ்ணனால் மோட்சம் பெற்றிருக்கிறான். அவரது ரூபத்தைப் பார்த்ததற்கே அப்படி ஒரு சிறப்பு அவனுக்கு கிடைத்தது.

கிருஷ்ண ரூபத்தைத் தியானிப்பது என்பது சூஷ்ம ரூபத்தை தியானிப்பதை விட எளிது. கண்ணனை விக்ரக ரூபமாகத் தரிசிக்கும்போது, ஆடை, தங்கம், வெள்ளி அணிகலன், புஷ்பம் முதலானவற்றை அவரவர் விருப்பப்படி அளிக்கலாம். கண்ணனுக்குரிய பாகவதம், கீதை ஆகியவற்றைப் படிக்கலாம். அவ்வாறு படித்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லும் போது, புராண தேவதை ஆனந்தப்படுகிறது. 

சில இடங்களில் விக்ரகம் அழகாக இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இதை வணங்குவதா  வேண்டாமா என்ற சூழல் ஏற்படுகிறது. பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கிறோம். நம் பார்வைக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பெண்ணையே மாப்பிள்ளையைப் பார்க்கச் சொல்லி விட்டால், அவளுக்கு ஒருவேளை பிடித்திருக்கும். அதேபோல, மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கும். 

இது அவரவர் பார்வையைப் பொறுத்தது. இதுபோல் தான் விக்ரகமும். அது கண்ணைப் பொறுத்த விஷயம். அந்த விக்ரகம் எந்தளவு பெருமையுடையது என்பது பற்றிய வரலாறு தெரியாததே, அந்த உருவத்தைக் குறித்து விமர்சிப்பதற்கான காரணமாகி விடுகிறது.

கண்ணன் உரலோடு கட்டுப்பட்ட கதையைக்கேட்டால், அப்படி அவன் கட்டுப்பட்டு கிடந்த ஆயர்பாடிக்குச் செல்ல வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. தாமிரபரணி புராணம் பற்றியும், கங்கை புராணம் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு அங்கே சென்று புனிதநீராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுபோல், விக்ரகங்களின் பெருமையை நாம் அறிந்து கொண்டால், அதன் அமைப்பு பற்றிய கவலை நமக்குள் எழாது.

சொல்லப்போனால், இந்த உருவ விஷயத்தில் கண்ணன் மிகவும் நல்லவர். எப்படி?

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக