திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 10 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

கிருஷ்ணர், இப்படி வாழ்ந்தார், அப்படி வாழ்ந்தார் என்பது பற்றி விமர்சனம் செய்பவர்கள், புத்தகத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று குறிப்பிட்டேன். அவர் இலக்கணத்தை மாற்றாமல், சட்டத்தை மாற்றாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் ஆன்மிகம் நமக்கு கிடைத்து இருக்காது. யார் முக்தி கேட்டாலும் சரி...அவர் தாழ்ந்தவராயினும் சரி...அவர் தந்து விடுவார். இந்த தெம்பு தான் அவரிடம் உள்ள சிறப்பே.

ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான். 

அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்! 

கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார். 

"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான். உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும். 

தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். ""இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.

கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்  கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி. 

கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்), தமோ (மந்தம்) என்ற மூன்று குணங்கள் உண்டு. ஆனால், கிருஷ்ணரின் திருமேனி முழுக்க சத்வம். நமக்கு ரத்தம், எச்சில், கண்ணீர் 
என்றெல்லாம் உண்டு. 

இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை. 

நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன. 

திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது. 

மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை. 

அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம்  பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.

அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர். 

கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக