ராமபிரான் வேடர் தலைவனான குகன், அரக்கர் தலைவனான விபீஷணன், குரங்குகளின் தலைவனான சுக்ரீவன் என்று எந்த இனமாயினும், அந்த இனத்து ராஜாக்களோடு தான் கை குலுக்கினார். ஏனெனில், அவரும் ஒரு ராஜா. ஆனால், கண்ணன் அப்படியல்ல... அவர் சாதாரண மக்களுடன் பழகினார். யானை மேல் போகிறவன், வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்க வேண்டுமானாலும் கூட, பக்கத்து யானைக்காரனிடம் தான் கேட்பான். கீழே இறங்கி வரமாட்டான். அதுபோல, ராமபிரான் ராஜா என்பதால், தனது உயர்ந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணனோ, நம்மோடு கலந்து விட்டார்.
இதற்காக, ராமாவதாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. அது ஒரு உயரிய அவதாரம், அதன் மகிமையையும், சொல்லிக்கொண்டே போகலாம்.
ராமபிரானை 60 ஆயிரம் வருடம் தவமிருந்து பெற்றார் தசரத ராஜா.
ரிஷ்யசிருங்கரைக் கொண்டு யாகம் செய்தார். நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தேவையை உணர்ந்து பிறக்க வைத்தார். கண்ணனின் கதை அப்படியல்ல! வசுதேவர், நந்தகோபர் வசித்த கோகுலத்தில், பால், தயிர் அதிகமாக இருந்தது. அதைச் சாப்பிட பிள்ளை வேண்டும் என நினைத்தார்கள். பிராமணர்களுக்கு வேதம், க்ஷத்ரியர்களுக்கு சண்டை... இவர்களோ வைசியர்கள்.
அவர்கள் தயாரிக்கும் பால், தயிரைச் சாப்பிட ஒரு பிள்ளையை வேண்டினார்கள். அதே நேரம், அவன் கீதோபதேசமும் செய்தான். ஆக, எளிமைக்கும் எல்லை...பெருமைக்கும் எல்லை என்பது கிருஷ்ணாவதாரத்தின் தன்மை.
திருவல்லிக்கேணியிலே மூலவராக பெருமாள், வேங்கடகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ளார். உற்சவர் பார்த்தசாரதி மீசை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அர்ஜுனனுக்கு அவர் சாரதி என்பதால், மீசை தேவைப்படுகிறது. ரொம்ப நல்லவர்களுக்கு அவரைப் பிடிக்கும், ரொம்ப நல்லவரை அவருக்குப் பிடிக்கும் என்ற இரண்டு குணத்துக்கும் சொந்தக்காரர் கிருஷ்ணன். ஆனால், தர்மத்தில் இருந்து மாற மாட்டார். குணங்களால் மட்டுமல்ல, தோஷங்களாலும் நம்மைக் கவர்ந்தவர் அவர்.
ராமனை நாம் உசத்தியாகக் கொண்டாடினால், கிருஷ்ணனை நம் மடியில் வைத்து தாலாட்டலாம். மேன்மைக்கு எல்லையானவரே, எளிமைக்கும் எல்லையானவராக உள்ளார். இடைப்பெண்களுடன் இடையனாக ராஜக்கிரீடை செய்துள்ளார். இதைப் பார்க்கும் உத்தவர் மிகவும் ஆதங்கப்படுகிறார்.
"லட்சுமி தாயார், வசிஷ்ட, வாமதேவ, விஸ்வாமித்திரருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. இடைப்பெண்களுக்கு கிடைத்ததே என்று!
இன்னொரு விஷயம்...என்ன நோன்பு நோற்றாளோ இந்த தேவகி! அவள் வயிற்றில் பிள்ளையாய் பிறந்தான். ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை யாரோ அனுபவிப்பது போல, அப்பா சம்பாதித்ததை பிள்ளை அழிப்பது போல, யசோதை அவனை வளர்க்கும் பாக்கியம் பெற்றாள். அவன் பிறக்கும்போது பணக்காரன். இங்கோ, இடக்கை எது, வலக்கை எது என்று கூட தெரியாத இடைச்சியோடு அவன் வளர்கிறான்.
ராமபிரானை எடுத்துக் கொள்வோம், அவர் வசிஷ்டரோடு பழகுகிறார். கண்ணனோ, எளியவர்களிடம் பழகி, எல்லாருக்காகவும் நான் இருக்கிறேன் என்கிறான். அவன் சொன்ன கீதையை இன்று வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் வெண்ணெய் திருடிய எளிமையை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான், பெருமைக்கு பெருமை, எளிமைக்கு எளிமை என்று குறிப்பிடுகிறேன்.
கண்ணனின் பெருமை அறியாதவர்கள் தான், அவனுக்கு 16000 மனைவிகள், அவன் பெண்களிடம் அப்படி நடந்தான்…
இப்படி நடந்தான் என்பார்கள்.
பிரதமரோ, ஜனாதிபதியோ கூட சாதாரண மனிதன் மீது நடவடிக்கை எடுக்க சிரமப்படுவார்கள். சட்டங்கள் அதைத் தடுக்கும். ஆனால், சாத்திரங்களும், சட்டங்களும் கடவுளைத் தடுக்க முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
கண்ணனின் வரலாற்றில் அவன் பெண்களோடு பழகிய காலத்தில் அவனுக்கு வயது எட்டு தான். சிறுமிகளின் வயதோ ஐந்து. இதனால், நமது உடல் ரீதியான உணர்வுடன் அதை ஒப்பிடக்கூடாது.
இந்த வயதில், அந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் என்ன உணர்வு இருந்து விட முடியும்! இதை, ஏதோ பெரிய வயதில் செய்தது போல் பேசினாலோ, எழுதினாலோ, அவர்கள் ஒழுங்காகப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
ஒரு முக்கிய விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கண்ணன் நிறைய பொய் பேசியுள்ளான்.
"ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று ஆழ்வார்களே சொல்கிறார்கள். இதிலுள்ள தத்துவம் என்ன தெரியுமா?
"நான் (மனிதன்) சொன்னால் அது பொய். ஆனால், பகவான் பொய்யே பேசினாலும் அது உண்மை. நாம் கால் வைத்தால், படிக்கட்டு தடுக்கலாம். ஆனால், பகவானுக்கு படிக்கட்டு அருகே வந்துவிடும். இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.
முதலில், அவர்கள் கண்ணனைப் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்