கிருஷ்ணர் என்பவர் ஏன் அவதரிக்க வேண்டும் தெரியுமா?
நாமும் கண்ணால் தரிசிக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், நாம் பார்க்க மறுக்கிறோம். இசை கற்றுத்தரும் ஆசிரியர் வீட்டுக்கு வருகிறார். படிக்க வேண்டிய பெண்ணோ, போனில் பேசிக்
கொண்டிருக்கிறாள். அவர் கோபத்துடன் வெளியேறி விடுகிறார். அப்படியானால், அவள் இசை கற்கும் ஆர்வமில்லாமல் இருக்கிறாள் என்று தானே பொருள். இதுபோல் தான், கிருஷ்ணரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடம் இல்லை.
ஆனால், ஒரு சிலர் பயன் பெற்றார்கள். கோபியர்கள் அவரைத் தரிசித்தனர். சஞ்சயன், விதுரர் பார்த்தார். குசேலர் பயன் பெற்றார். ஆனால், அவரைப் பார்த்தும் துரியோதனன், சகுனி கூட்டம் பயன்பெறவில்லை.
இப்போது, இன்னொரு சந்தேகம் எழும். "பகவானைப் பார்த்தாலே மோட்சம் என்கிறார்களே! துரியோதனனும், சகுனியும் பார்க்கத்தானே செய்தார்கள்! அவர்கள் ஏன் மோட்சம் பெறவில்லை?' என்று!
அதற்கு நம் மனோபாவம் தான் காரணம். நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் அவன் நமக்கு பலன் தருவான்.
கஸ்தூரி திலகமிட்டு, கவுஸ்துபம் என்னும் நீலக்கல் தரித்து, மூக்கு நுனியிலே புல்லாக்கு இட்டு, கையிலே புல்லாங்குழல் ஏந்தி, மணிக்கட்டில் கங்கணம் கட்டி, கழுத்திலே அட்டிகை மாலை, சரப்புளி சங்கிலி தரித்து, சந்தனம் சாத்தி, கோபிகைகளால் சூழப்பட்டு கோபாலகண்ணன் அழகே வடிவாய் விளங்குகிறான்.
இந்த அழகை நாம் ரசிக்க வேண்டும். பதிலாக, இந்த அழகு காட்டிலே ஒளிவீசும் நிலவாய் இருக்கக்கூடாது. அந்த ஒளி நாட்டிலே வீசினால் நன்றாயிருக்கும்.
நட்சத்திரங்களை ஆர்வமாகக் கூட்டிக்கழித்து பார்ப்போம் இல்லையா! அதுபோல, அழகுக்கண்ணனை நாம் பார்க்க வேண்டும்.
அவர் அழகாக விளங்குகிறார் என்பது மட்டுமல்ல. பூமிக்கு ஏற்படும் பாரத்தைப் போக்கிக் கொடுக்கிறார்.
"பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே!' என்று அவரே சொல்கிறாரே!
ஆம்..சாதுக்களைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநிறுத்தவும் யுகம்தோறும் நான் தோன்றுகிறேன் என்கிறார் பரமாத்மா.
"யாரொருவர் நான்(கிருஷ்ணர்) பிறந்தேன் வளர்ந்தேன் என்பதை நினைக்கிறாரோ, அவருக்கு பிறவியே கிடையாது என்றும் கீதை நான்காவது அத்தியாயத்தில் அவர் கூறுகிறார்.
சஞ்சயன், உத்தவன் அவரிடம் நன்றாகப் பக்தி செய்தனர். விதுரர் வீட்டுக்கு கிருஷ்ணர் வந்தார். அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே, விதுரர் பழத்தை உறித்தார்.
அவர் கையில் கொடுத்தார். கொடுத்தது பழமல்ல, தோல். ஆனால், அதையும் அவன் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டான். தன்னை மறந்து பக்தி செலுத்தினார் விதுரர்.
இப்படிப்பட்டவர்களுக்காகத் தான் பரமாத்மா கிருஷ்ண வடிவம் தாங்கி பூமிக்கு வந்தார். பகலில் விளக்கெரிந்து பயனில்லை. இரவில் எரிந்தால் தான் பயன். கடலில் மழை பெய்து பயனில்லை. நிலத்தில் பெய்தால் தான் பலனுண்டு. அதுபோல், வைகுண்டத்தில் இருந்து என்ன பயன்? அதற்காக, யாருக்கு தேவையோ, அந்த பூலோக மக்களுக்காக பகவான் வந்தார். இருளான பூமிக்கு விளக்காக, கண்ணன் என்னும் பெயர் தாங்கி வந்தார்.
ஒன்றாம் தேதி முதலாளி சம்பளம் தந்து விட்டார். ஆனால், அப்படி தந்ததே தெரியாவிட்டால் ஒரு தொழிலாளிக்கு என்ன பயன்? அந்த தொழிலாளியின் மனநிலையில் நாம் இருக்கிறோம். இங்கே நாம் முதலாளி…
அவன் தொழிலாளி போல் வருகிறான்.
நமக்காக பணி செய்ய வருகிறான். நாம் தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சரி...அவன் இவ்வளவு அழகாக வர வேண்டும்?
நரசிம்மர் அருகே நம்மால் போக முடியுமா? நாமெல்லாம் பிரகலாதர்கள் இல்லை. அவன் அவரைக் கண்டு பயப்படவில்லை. அவன் மிகவும் தைரியமாக, ""என்ன ரூபம்…
அழகு ரூபம்...'' என்று அவரை வர்ணித்தான். சட்டென்று அவர் அடங்கி விட்டார். பிரம்மா உள்ளிட்ட தேவர்களே அவரைக் கண்டு பயந்த நேரத்தில், பிரகலாதன் அவரை அடக்கி விட்டான். இரண்யாட்சனை ஒரே அடியில் வீழ்த்தினார் வராக அவதாரத்தில். அந்த ரூபத்தை நம்மால் ரசிக்க முடியுமா? பிரளய காலத்தில் (உலகம் அழியும் காலம்) மச்ச (மீன்)அவதாரமாக வந்தான். நாம் அப்போது இருக்கவே மாட்டோம் அவனைக் காண...!
இப்படி உயர்ந்த அவதாரங்களையெல்லாம் எடுத்து மனித ரூபத்தில் வந்தார். பத்திரிகை செய்தியில், ஒருவரை உயரத்தூக்கி கீழே போடுவது போல பகவானும் தன்னை மனுஷ ரூபத்திற்கு குறைத்துக் கொண்டு அவதாரம் எடுத்தார்.
ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவை அவரது மனித ரூபங்கள். கிருஷ்ணாவதாரத்தையே உயர்த்திச் சொல்கிறீர்களே! ராமாவதாரமும் உயர்ந்தது தானே எனலாம். இது உண்மை தான். ஆனால், ராமன் சக்கரவர்த்தியின் மகன். அவரை ஒதுங்கி நின்று தான் சேவிக்க முடியும். அவராகப் பார்த்து பிச்சை போட்டால் நாம் வாங்கிக் கொள்ளலாம். அவர் அதிகம் சிரிக்க மாட்டார். மெதுவாகவே நடப்பார், மெதுவாகவே சிரிப்பார், ஆனால், நம்மைப் போல் வம்பு, விளையாட்டு எல்லாம் இருந்தால் தான் நம்மால் ரசிக்க முடியும்!
அதற்காகத் தான் கிருஷ்ணனாக இங்கே வந்தார்.
கண்ணன் குழந்தையைக் கிள்ளி விடுவார். கன்றுக்குட்டியின் வாலில் பட்டாசு கட்டுவார். வெண்ணெய் பாத்திரத்தை திருடுகிறார்... உடைக்கிறார். பசுவைக் கொண்டு சிலரை உதைக்க விடுகிறார்.
அதே நேரம், தெய்வத்தன்மைக்குரிய காரியங்களையும் செய்கிறார். ஏழுவயது குழந்தையாக இருக்கிறபோதே, கோவர்த்தனகிரியைத் தூக்குகிறார். அவ்வப்போது, நான்கு சக்கரங்களுடன் காட்சி தருவார். ராமர் ராஜா என்பதால், தலைவர்களுடனேயே பேசினார். எப்படி?
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்