திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நினைத்தாலே இனிக்கும்! - 7 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

ஒருசாக்கடை இருக்கிறது. அதன் அருகே நம்மை உட்கார வைத்தால், அப்படியே உட்கார்ந்திருக்க முடியுமா? நாற்றம் தாங்காது. முகத்தைத் திருப்பினாலும் நாற்றம் போகாது. தள்ளிப் போய் விடுவோம்.

ஆனால், பகவான் அப்படி இல்லை. நம் உடலுக்குள் ரத்தம், சதை, சீழ், சளி, மலம், சிறுநீர் என்று எத்தனையோ உபாதைகள் இருக்கின்றன. அத்தனை நாற்றத்தையும் சகித்துக் கொண்டு, பகவான் சூஷ்மமாய் (நுண்ணிய அளவில்) உட்கார்ந்திருக்கிறான். அப்படியானால், அவள் எவ்வளவு கருணையுள்ளவன்! நம்முடைய தோலை அகற்றி விட்டு, நம்மை நாமே பார்த்தால் நமக்கே சகிக்காது. ஆனால், பகவான் அத்தனையையும் சகித்துக் கொண்டு நமக்குள் பரமகருணா மூர்த்தியாய் இருக்கிறான்.

அப்படிப்பட்டவனை, நாம் எந்த அளவு கொண்டாட வேண்டும் என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று உறவுகளைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுவோம்.

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மீண்டும் சேர வேண்டிய சூழலில் இவ்வாறு சொல்வதுண்டு. இதெல்லாம், மனிதர்களுக்குத் தான். பகவான் அப்படி இல்லை. அவன் நமது குற்றத்தைப் பார்ப்பதே இல்லை. குற்றம் செய்தாலும் நமக்குள்ளேயே இருந்து, நம்மை சீர்திருத்தவே முயற்சிக்கிறான். அது மட்டுமல்ல!

"உன் குற்றத்தை நான் பார்க்கமாட்டேன். உன் குணத்தையே பார்க்கிறேன்,'' என்று அவன் சொல்வான்.

பகவான் நுண்ணியனாய், சூஷ்மமாய் இருக்கிறான் என்று பார்த்தோம். இந்த சூஷ்மத்துக்கும், கிருஷ்ண அவதாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை இனி பார்ப்போம்.

கிருஷ்ணர் "விபவ' அவதாரம். "விபவ' என்றால் "விசேஷம்'. பகவான், பர ரூபமாக அமர்ந்த கோலத்தில் வைகுண்டத்தில் உள்ளார். முக்தியடைந்தவர்களுக்கும், நித்யர்களுக்கும் (மரணமே இல்லாதவர்கள்) மட்டுமே அந்தக் காட்சி கிடைக்கும். பாற்கடலிலே அவர் சயனத்தில் உள்ளார். அங்கே பிரம்மா, ருத்ரன், வாயு, அக்னி முதலானவர்கள் அந்தக் காட்சியைத் தரிசிப்பார்கள்.
அவருக்கு நான்கு வியூகங்கள் உண்டு.

அவை வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்ற நிலைகளாகும். இவற்றின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், வேதங்களைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். இவற்றை எல்லாம், சாதாரண மனிதர்களான நாம் காண இயலாது.
அப்படியானால், நமக்கு அவர் காட்சி தர வேண்டும்! நமக்கு பாற்கடலுக்கோ, வைகுண்டத்துக்கோ போக வழியே தெரியாது.

 அப்படியிருக்க, தேவர்களுக்கு கிடைக்கும் காட்சி நமக்கு கிடைக்க வழியே இல்லை. ஒருவேளை, நாம் யோகம் பண்ணப் பண்ண நமக்கு அந்தக்காட்சி கிடைக்கலாம். ஆனால், அதிலும் பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். இந்த சமயத்தில் தான் "விபவ' என்ற விசேஷ அவதாரத்தை அவர் எடுக்கிறார். அதில் ஒன்று கிருஷ்ணாவதாரம்.

பொதுவாக, தசாவதாரம் எடுத்தாக நாம் சொல்கிறோம். ஆனால், இன்னும் ஆச்சார்யார்கள் எல்லாம், பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுத்தார் என எண்ணிக்கையைக் குறிப்பிடாமலும் கூறுகின்றனர்.

இப்படி ஒரு அவதாரமே கிருஷ்ணாவதாரம். எங்கோ இருக்கிற நம்மைக் காண, அவர் அழகான வடிவம் எடுத்து வந்தார்.

"சஜாதியதா' என்றால் மனித ஜாதி செய்வது போல் செயல்களைச் செய்வது. அவர் கிருஷ்ணாவதாரத்தில் வந்து மனிதனைப் போல் பேசினார், கல்யாணம் செய்தார், குழந்தை பெற்றார்.

மனிதனுக்குரிய இயற்கை சுபாவம் போல், கிருஷ்ணாவதாரத்தில் தப்பும் செய்தார். இந்த இடத்திலே தான் ஒரு கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது.

"நாம் தப்பு செய்தால் பரவாயில்லை. கிருஷ்ணர் தப்பு செய்யலாமா?' என்பதே அந்தக் கேள்வி.

வாழ்க்கைய ரசிக்கவே அவர் அப்படி செய்தார். அதற்காக திருடக்கூட (வெண்ணெய்) செய்தார். அந்தக் காலத்தில், வடக்கே உள்ளவர்கள் அந்தக் காட்சிகளை நேரில் பார்த்தனர். கிருஷ்ணனைத்தரிசித்தனர். நாம் தெற்கே இருக்கிறோம். அதற்காகத்தான், அவர் அந்தர்யாமியாக உள்ளே இருக்கிறார்.

அவரைத் தியானத்தின் மூலமே நம்மால் புரிந்து கொள்ள முடியும். பிரம்ம தண்டம் வைத்திருப்பவர்கள்  (ரிஷிகள்) தானே தியானம் செய்ய முடியும் என்று கேட்கலாம். அது அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல.

எல்லாராலும் அது முடியும். ஆனாலும், நம்மால் முடியவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த பகவானை ஐந்து நிமிடம் மனதால் நினைத்தாலே போதும்! அதுவும் தியானம் தான். அப்படி நினைத்தாலே உள்ளே இருக்கும் அழுக்கு போய்விடும்.

அப்படியும் முடியவில்லையா? நல்லதைச் சொல்லி பகவானை நினைக்க வைக்க முடியவில்லையா? அதற்காகத்தான் கிருஷ்ணன் திருடினான், கிருஷ்ணன் பொய் சொன்னான் என்றெல்லாம் சொல்லி கிருஷ்ண நாமத்தை சொல்ல வைத்தார்கள். இதைத்தான் "களவும் கற்று மற' என்றார்கள்."களவும் கற்று மற' என்றால், அதிலுள்ள ஆபத்தைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே! திருடு, பொய் சொல் என்று சொல்வதற்காக வந்ததல்ல இந்த பழமொழி.

ஏதோ ஒரு விதத்தில் பகவானை ஐந்து நிமிடம் நினையுங்கள். உள்ளே இருக்கிற அழுக்கு போய் விடும். அதற்காக, நீங்கள் வெகுதூரம் போக வேண்டியதில்லை.

"மகாராஷ்டிராவில் போய் பால் வாங்கி வா' என்றால் ஒருவர் போவாரா? அதுவே, பக்கத்து வீட்டில் என்றால், உடனே போய் விடுவார். அதுபோல், எங்கோ வைகுண்டத்திலோ, பாற்கடலிலோ இருப்பவனைத் தான் நினைத்தாக வேண்டுமென்பதில்லை.

உங்களுக்குள் உள்ளவனை வணங்குங்கள். அவனை சூஷ்மமாக வணங்குவதும் சிரமம் என்பதால் தான், அர்ச்சாவதாரம்என்ற நிலை உருவானது. "அர்ச்சை' என்றால் "விக்ரஹம்'. அந்த விக்ரகத்திற்கு பழம், பூ, புளியோதரை, தயிர்ச்சாதம் என படைத்து ஆராதிக்கிறோம். சரி...கிருஷ்ண அவதாரத்துக்கு உரிய இன்னும் சில சிறப்புகளைப் பார்ப்போமா!

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக