நினைத்தாலே இனிக்கும்! - 6 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 6 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பகவானின் பேரழகைப் பற்றி பார்ப்போம். அவனது அழகு நமக்கு ஞானத்தைத் தருகிறது. "கண்டவர் தன் மனமுருகும் கண்ணபுரத்தான்' என்று நாம் சொல்கிறோம். எல்லா ஜடப்பொருள்களிலும் அவன் இருக்கிறான். பசு, ஆடு, மேஜை, சங்கிலி என எல்லாவற்றிலும் அவன் உண்டு.

ஏன் இருக்கிறான்? பகவான் இருந்தால் தான் அந்தப் பொருளே இருக்கும்.

பிரம்மத்தை(கடவுள்) தனக்குள் கொண்டிராத எந்தத் தத்துவமுமே உலகில் கிடையாது. அவன் நமக்குள்ளும் இருக்கிறான். ஆனால், நாம் அதை நம்புவதில்லை. சிலர் வீட்டில் ராமாயணப் புத்தகம் இருக்கும். ஆனால், அட்டை கூட கிழிந்திருக்காது. அப்படி கிழியாமல் வைத்திருந்தால் தானே நல்லது என நினைக்கலாம். அட்டை கிழியவில்லை என்றால், படிப்பதற்கு புத்தகத்தை பிரிக்கவே இல்லை என்று அர்த்தம்

இன்னும் சிலர் வாங்குவார்கள். ஒரு மூலையில் போடுவார்கள். திடீரென எடுப்பார்கள்.

தூசு தட்டி எடுத்த இடத்திலேயே வைத்து விடுவார்கள். ஆனால், படிப்பவர்கள் வீட்டில் கிழிந்திருக்கும். எல்லாரிடமும் இருந்தாலும், அது எந்தளவு பயன்பட்டது என்பதே முக்கியம்.

பசுவுக்குள் எந்த மாறுதலும் இல்லாமல் பகவான் இருப்பான். நமக்குள் லட்சுமியோடு மாலை, நான்கு தோள்கள், சங்கு, சக்கரம், புன்சிரிப்பு மிளிர இருப்பான். ஏன் இந்த வேறுபாடு? பசுமாடு அவனது அழகை அனுபவிக்காது. நாம் அனுபவிக்க வேண்டும். நாம் அவனை அனுபவிக்காவிட்டால் எப்படி? மாட்டுக்கும், நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடுகிறது. ஆடு, மாடும் அனுபவிக்காதவனும் ஒன்று தான் என்ற நிலை ஏற்பட்டுப் போய் விடுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தில் நீங்கள் சிக்கி விடாதீர்கள். புருஷோத்தமன் என அவனை நினையுங்கள்.

ஒரு வீட்டில் அம்மாவிடம் பிள்ளை கோபித்துக் கொண்டான். அருகிலுள்ள தர்மசத்திரத்தில் போய் தங்கிவிட்டான்.

அம்மாவுக்கு இந்தத் தகவல் கிடைத்தது. அவளது மனம் பொறுக்கவில்லை.

ஏனென்றால், பிள்ளை வீட்டில் இருந்தால் கறியும் சோறும் சாப்பிடுவான். வகைவகையாய் எல்லாம் நடக்கும். நல்ல உடை அணிவான். சத்திரத்திலோ பழைய உணவு தான் கிடைக்கும். சரி...அவள் அவற்றையெல்லாம் தயார் செய்து எடுத்துக் கொண்டு போய் அவனிடம் நீட்டினால் என்ன சொல்வான்? அம்மா மீதுள்ள கோபத்தில் சாப்பிட மறுப்பான்.

உடனே என்ன செய்தாள்? சாப்பாட்டை தயார் செய்து கொண்டு போய், சத்திர முதலாளியிடம் கொடுத்து, இதை அவனிடம் கொடுங்கள். நான் தந்ததாக சொல்ல வேண்டாம் என்றாள். முதலாளியும் அதைப் பிள்ளையிடம் கொடுத்தான். உணவு நன்றாக இருக்கிறதே என அவரைப் பாராட்டினான் அந்தப் பிள்ளை. பெற்றோரை விட மற்றோர் தான் நன்றாகக் கவனிப்பார்கள் என்ற எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது.

ஆனால், அம்மாவுக்கோ ரொம்ப சந்தோஷம். பிள்ளை திருப்தியாகச் சாப்பிட்டானே என்று. அந்த தாயன்பு பாராட்டுக்குரியது தான்.

ஆனால், இந்த தாய்க்கு அந்த மகனை கடந்த 20 வருடங்களாகத் தான் தெரியும். அவனோடு போனஜென்மம், மறுஜென்மம் உறவெல்லாம் தெரியாது.

பகவான் அப்படியா? ஆனால், அவன் நம்மோடு பல பல ஜென்மங்களாக உறவு கொண்டவன். இனி வரப்போகிற ஜென்மங்களிலும் உறவு கொள்ளப் போகிறவன். 20 வருடமாக நம்மை அறிந்த தாயே, நம் மீது இவ்வளவு பாசம் காட்டுகிறாள் என்றால், பல ஆயிரம் ஜென்மங்களாக நம்மிடம் <உறவு கொண்டுள்ள பகவான் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்! தாயிடம் கோபித்துக் கொண்ட அந்தப் பிள்ளையைப் போல, நாமும் பல ஜென்மங்களாக அவனது <உறவின் அருமையைத் தெரியாமல் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறோம். அந்தத்தாய் மகனுக்கு பாசத்தோடு உணவிட்டது போல, அவனும் நம் தவறுகளைப் பொறுத்துப் போய்க்கொண்டே இருக்கிறான்.
இருந்தாலும், நாம் என்ன சொல்கிறோம்?

"எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கு! உன் உதவியே எனக்கு தேவையில்லை என்று''. இதற்குப் பெயர் தான் செருக்கு (ஆணவம்).

இரண்டு தோழிகள் இருக்கிறார்கள்.

ஒருத்தியை அவளது தாய் வேறு ஊருக்கு படிப்புக்காக அனுப்புகிறாள். படிப்பு மிகவும் அவசியம். அதற்காக, நீண்டகாலம் பழகிய தோழியை விட்டு பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்தத் தாய்க்கு. இப்படியாக பாசம் மிக்க தோழிகள், சற்று தூரம் பிரிந்து போகிறார்கள்.

ஆனால், பகவான் அப்படியல்ல! அவன் நம்மை விட்டு பிரிவதே இல்லை. நம் இருதயத்திற்குள்ளேயே அவன் இருக்கிறான். ஏன் இவ்வளவு அருகில் இருக்கிறான் தெரியுமா? கூப்பிட்டவுடன் வருவதற்கு! இவன் எப்போது நம்மைக் கூப்பிடுவானோ, அப்போது நாம் போகலாம் என்று உள்ளேயே இருப்பான்.

ஒரு ஆள் தூரத்தில் வரும் போது, அவனது உருவம் நமக்கு சரியாகத் தெரியாது. பக்கத்தில் வர வர இன்னாரென புரியும். அதுபோல, பகவான் நம்முள்ளேயே இருப்பதை நாம் அறியவில்லை. அவன் எங்கேயோ இருக்கிறான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அவனை நினைக்க நினைக்க அவன் நம் அருகே நெருங்கி விடுவான்.

ஒரு கோயில் இருக்கிறதென்றால், அங்கே சென்று பகவானைப் பார்க்க சில நடைமுறைகள் உண்டு. காலை 6 மணிக்கு திறக்கும். 12.45க்கு சாத்தி விடுவார்கள். ஒருவன் 12.30 மணிக்கு போவோமே என இருப்பான். இவன் போவதற்கு தாமதமாகி விட்டது. நடை சாத்தி விட்டார்கள். பிறகு மாலை 4.30க்கு தான் திறக்கும். அதுவரை அவனுக்கு பக்தி இருக்க வேண்டுமே! இருந்தால் தான், சாயங்காலம் கோயிலுக்குப் போகும் திட்டம் நிறைவேறும்.

ஆனால், மனதுக்குள் இருக்கும் பகவானைத் தரிசிக்க இந்த திட்டமிடல் எல்லாம் தேவையில்லை. காலை 6 மணிக்கும் சேவிக்கலாம். நள்ளிரவு 12.30க்கும் சேவிக்கலாம். ஏனென்றால், அவன் சூஷ்மரூபமாக நமக்குள் இருக்கிறான். அதிலும், எந்த அளவுக்கு கருணை உள்ளத்தோடு நமக்குள் இருக்கிறான் என்று கேளுங்கள். கேட்டால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...


நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை